பருவத்தே பயிர் செய் என்னும் கூற்றுக்கு ஏற்ப, சரியான பட்டங்களில் கரும்பைப் பயிரிட்டால், நல்ல விளைச்சலும், அதிகச் சர்க்கரைக் கட்டுமானமும் கிடைக்கும். தமிழ்நாட்டில் கரும்பு நடவுப் பட்டங்களை, முக்கியப் பட்டம், சிறப்புப் பட்டம் என இரு வகையாகப் பிரிக்கலாம்.
முக்கியப் பட்டம்: மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையில், அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. எனவே, இதுவே முக்கியப் பட்டமாகும். இந்தக் காலத்தில் தட்ப வெப்பநிலை மாற்றங்கள் அதிகமாக இருப்பதால், முன்பட்டம் (மார்கழி, தை-டிசம்பர், ஜனவரி), நடுப்பட்டம் (மாசி, பங்குனி- பிப்ரவரி, மார்ச்), பின்பட்டம் (சித்திரை, வைகாசி- ஏப்ரல், மே) எனப் பிரிக்கப்படுகிறது.
இந்தப் பட்டங்களுக்கு ஏற்பவே, புதிய கரும்பு இரகங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், சர்க்கரை ஆலைகள் நெடுநாட்களுக்குச் சிறப்பாக இயங்க, இத்தகைய பரவலான நடவுப் பட்டங்கள் அவசியமாகும்.
முன்பட்டம்: குறைந்த வயதில் அறுவடைக்கு வரும் இரகங்கள் இந்தப் பட்டத்தில் நடப்படும். பத்து மாதங்களில் 16% சுக்ரோஸ், 85% தூய்மையான சாற்றைத் தரும் இரகங்களை இந்தப் பட்டத்தில் நடலாம். பத்து மாதங்களில் அறுவடைக்கு வருவதால், கரும்பின் தரம் சிறப்பாக இருப்பினும், மகசூல் சற்றுக் குறைவாகவே இருக்கும்.
முன்பட்டக் கரும்புகள் ஆலை அரைவையில் முதலிடம் பிடிப்பதால், வெட்டு உத்தரவு உரிய நேரத்தில் கிடைக்கும். மேலும், ஏப்ரல், மே வறட்சிக் காலத்தில் நான்கு மாதப் பயிராக இருப்பதால், வறட்சியைத் தாங்கியும், பூச்சி, நோய்த் தாக்குதல் இன்றியும் வளரும். எனவே, இந்த முன்பட்டம் பொன்பட்டமாகக் கருதப்படுகிறது.