My page - topic 1, topic 2, topic 3

கண்கவர் சிச்லிட் மீன்கள்!

கண்கவர் சிச்லிட் மீன்கள்!

லங்கார மீன் வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கும், மிகப்பெரிய குடும்பம், சிச்லிட் மீன் குடும்பமாகும். இதில், 2000 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன. இம்மீன்கள் கவர்ச்சியும், நீடித்து நிலைக்கும் திறனும் பெற்றவை. சிச்லிட் மீன்கள் பலவகை உடல் வடிவங்களில், அளவுகளில், அழகான நிறங்களில் இருக்கும்.

சுறுசுறுப்பாகவும் நட்புடனும் பழகும். தங்கள் முதலாளிகளிடம் உணவைக் கேட்கவும் செய்யும். அழகிய நிறங்கள் மற்றும் பழகும் திறனால், சிச்லிட் மீன்களை, சிறந்த அலங்கார மீன்களாக எல்லோரும் விரும்புகின்றனர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிச்லிட் வகைகளின் பட்டியல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மீன் இனங்களைக் கொண்டது. இந்த மீன் குடும்பம் உலகெங்கும் பரந்து விரிந்து உள்ளது. இவற்றில் சில, அலங்கார வளர்ப்புக்கு உகந்தவை.

தென்னமெரிக்க சிச்லிட் இனங்கள் இன்னும் தனித்தன்மை வாய்ந்தவை. எ.கா: Severum என்னும் சிச்லிட் மீன், குட்டை சிச்லிட் என்னும் Dwarf Chichlid ஆகியவற்றை ஒரு தொட்டியில் விட்டால், அவை தமக்கெனத் தனித் தனியாக இடம் ஒதுக்கி மற்ற மீன்களுடன் சண்டையிடும்.

அதனால், இவற்றை இனவாரியாகப் பிரித்து வைப்பது சிறந்தது. ஆப்பிரிக்க வடகிழக்குப் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து வரும் மீன்கள் மிகவும் மதிப்பு மிக்கவை.

டிராபியஸ் பேரினம் (Tropheus genus), ஃபெதர்பேக்ஸ் (Featherbacks), கோபி சிச்லிட் (Gobi cichlids), சிப்பியில் வாழும் சிச்லிட் (Shell dwellers) ஆகியன, தனித்தன்மை மிக்கவை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் சிச்லிட் மீன்கள், நல்ல அளவில், பெரிய தொட்டியில் விடுவதற்கு ஏற்றவை. இருப்பினும் சில சிச்லிட் மீன்களின் அளவு, வீட்டுத் தொட்டிகளில் வளர்ப்பதற்கு ஏற்றதாக இருக்காது. ஆனால், பெரும்பாலான பொழுதுபோக்குப் பிரியர்கள், அவற்றின் அழகிய நிறங்களில் மயங்கி, அவற்றை வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிச்லிட்டின் இருப்பிடம்

இந்த மீன்கள், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் உள்ளன. மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் உள்ள சவன்னா புல்வெளி முதல் மழைக் காடுகள் வரை பரந்து விரிந்துள்ளன. சில சிச்லிட்கள் ஆப்பிரிக்காவின் டெக்டானிக் ஏரிகளிலும், மற்ற ஏரிகளிலும், ஆறுகளிலும், நீரோடைகளிலும் உள்ளன.

சிச்லிட் மீன்கள், கடற்சூழலில் இருந்து நன்னீர்க்கு வந்தவை என்று சிலர் நம்புகின்றனர். ஏனெனில், கடல் இனங்கள் தொடர்பான கூறுகள், சிச்லிட் மீன்களிடம் உள்ளன. உலகில் 2,000- 5,000 சிச்லிட் இனங்கள் உள்ளன,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அவற்றுள் 1,300 மீன்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்பட்டு உள்ளன. 1,300 ஆப்பிரிக்க சிச்லிட் இனங்களும், 570 தென்னமெரிக்க சிச்லிட் இனங்களும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சிச்லிட் மீன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பல மீன்கள் அலங்கார வளர்ப்புக்கு ஏற்றவை. ஆனால், அளவில் பெரிதாக உள்ள சில மீன்கள் அலங்கார வளர்ப்புக்கு ஏற்றவை அல்ல.

எ.கா: ஆப்பிரிக்காவில் இருக்கும் Boulengero chromis microlepis. இது, 36 அங்குலம் வரை வளரும். இந்த மீன் அப்பகுதி மக்கள் விரும்பும் உணவு மீனாகப் பயன்படுகிறது. சிறிய சிச்லிட் மீன்களை அப்பகுதி மக்கள் சிற்றுணவாகக் கொள்கின்றனர்.

சிச்லிட் குழுக்கள்

மலாவி ஏரி சிச்லிட்கள்: இந்த மீன்கள் அழகான நிறங்களில் இருக்கும். இவற்றில், 800 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளதாகக் கணக்கிடப் படுகிறது. ஆனால், 300 மீன்களை மட்டுமே மீனியல் ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர்.

இவற்றை முபுனா (Mbuna) குழு, ஹாப்லோக்ரோமிஸ் (Haplochromis) குழு என இரண்டாகப் பிரித்து உள்ளனர். இந்த இரண்டு குழுக்களும் இணக்கம் இல்லாதவை என்பதால், ஒன்றாக வளர்க்கக் கூடாது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முபுனா சிச்லிட்கள்: முபுனா சிச்லிட்கள், மலாவி ஏரியின் இயற்கையான இனமாகும். இவை ஏரியிலுள்ள பாறைப் பகுதியில் வசிக்கின்றன.

வரிக்குதிரை சிச்லிட்கள்: முபுனா இனத்தில் மொத்தம் 12 இனங்கள் உள்ளன. இவற்றில், பிரபலமான வரிக்குதிரை சிச்லிட் மீன்களும் அடங்கும். இவை சுறுசுறுப்பு மற்றும் ஆக்கிரமித்து ஆளும் தன்மை மிக்கவை. பெரும்பாலும், நீல நிறத்தில் கறுப்புப் பட்டையுடன் இருக்கும். மணல் கூடுகளைக் கட்டி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.

ஹாப்லோக்ரோமிஸ் (Haplochromis) குடும்பம்: இந்தக் குடும்பம் ஆப்பிரிக்க சிச்லிட்டில் பிரபலமானது. மணற்பகுதி மற்றும் திறந்த நீர் நிலைகளில் வசிக்கும்.

மயில் (Peacock cichlid) சிச்லிட்: இந்த சிச்லிட், மற்ற வகைகளைக் காட்டிலும் மிகவும் அழுத்தமான நிறத்தில் இருக்கும். வரிக்குதிரை சிச்லிட்டை விடச் சற்றுப் பெரியதாக, அமைதியாக இருக்கும். ஏரியின் நடுவில் ஆழமான பகுதியில் வசிக்கும்.

டங்கனிகா ஏரி (Tanganika lake) சிச்லிட்ஸ்: உலகின் இரண்டாவது ஆழமான ஏரி டங்கனிகா ஏரியாகும், இங்கே சுமார் 250 சிச்லிட் இனங்களும், 150 க்கும் மேற்பட்ட மற்ற மீன் இனங்களும் வசிக்கின்றன. இந்த ஏரியில் உலகிலேயே மிகப்பெரிய நீளமுள்ள சிச்லிட் (80 செ.மீ.) மற்றும் மிகச்சிறிய நீளமுள்ள சிச்லிட் (3.5 செ.மீ.) மீன்கள் வசிக்கின்றன.

டங்கனிகா ஏரி சிச்லிட்களின் உடல் வடிவமும், வாழ்விடமும் தனித்தன்மை மிக்கவை. இவ்வினத்தில், ஃபேதர்ஃபின்கள், கோபிகள், ஜீலிஸ், சிப்பியில் வாழும் சிச்லிட் போன்றவை அடங்கும்.

கோபி சிச்லிட்ஸ் கரையோரத்தில் ஆழம் குறைந்த நீரில் வாழும். இந்தக் குழுவில் உள்ள மற்ற வகைளைப் போலவே, இந்த மீன்களும் அமைதியாக இருக்கும். இவை, வரிக்குதிரை சிச்லிட்களை விடச் சற்றுப் பெரியளவில் இருக்கும்.

டிராபியஸ் சிச்லிட்ஸ் (Tropheus Cichlids): இது, பிரபலமான டங்கனிகா சிச்லிட் இனமாகும். இந்த மீன்கள் மணற் பகுதியிலும், திறந்தவெளி நீரிலும் வாழ்கின்றன. இவை, வரிக்குதிரை சிச்லிட்டை விடச் சற்றுப் பெரியளவில் இருக்கும். அமைதியான குணமுள்ள இந்த மீன்கள், டங்கனிகா ஏரியில் வாழ்கின்றன. ஏரியின் கரையோரத்தில் இவற்றைப் பார்க்கலாம்.

விக்டோரியா ஏரி சிச்லிட்கள் ( Victoria lake cichlids): இங்கு மேற்கு ஆப்பிரிக்க குட்டை சிச்லிட்கள், மலாவி ஏரி மற்றும் டங்கனிகா ஏரி சிச்லிட்கள் மற்றும் பலவகை ஆப்பிரிக்க சிச்லிட்கள் வாழ்கின்றன.

ஆப்பிரிக்க சிச்லிட்டில், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பல மீன்களும், மடகாஸ்கர் உள்ளிட்ட தீவுகள் மற்றும் விக்டோரியா ஏரிகளில் இருக்கும் சிச்லிட்களும் அடங்கியுள்ளன.

விக்டோரியா ஏரியில் பல நூறாயிரம் சிச்லிட்கள் உள்ளன. இதர கிழக்கு ஆப்பிரிக்க சிச்லிட்டில் விக்டோரியா சிச்லிட்களும் அடங்கும். இவை, விக்டோரியா ஏரியைச் சுற்றியுள்ள ஏரிகளிலும் வாழ்கின்றன.

குட்டை சிச்லிட் (மேற்கு ஆப்பிரிக்க சிச்லிட்): மேற்கு ஆப்பிரிக்காவின் பல சிச்லிட்கள், ஆப்பிரிக்க ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வாழ்பவை. இவற்றின் அதிகளவு வளர்ச்சி 10 செ.மீ.க்கும் குறைவாக இருக்கும். இந்தக் குழுவில், அழகான ஆப்பிரிக்கக் குட்டை சிச்லிட்களும் அடங்கும். இவற்றில் ராமிரெஸி(ramirezi)இனம் மிகவும் பிரபலமானது.

தென்னமெரிக்க சிச்லிட்: இந்த மீன்கள், புதிய உலக சிச்லிட்கள் எனப்படுகின்றன. இவை, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் உள்ளன. டெக்சாஸ் சிச்லிட் மீன்கள், வட அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ளன. இவை, மரக்காடுகள் முதல் மழைக்காடு வரையான பல்வேறு இடங்களில் வாழ்கின்றன. அமேசான் நதியில் பெருமளவில் இந்த மீன்கள் உள்ளன.

இந்த நதியில், அனைத்து நன்னீர் மீன் இனங்களின் ஐந்தில் ஒரு பகுதி மீனினங்கள் உள்ளன. அதன் நீர் அமிலத் தன்மை மற்றும் மென்மைத் தன்மை உடையது.

தென்னமெரிக்க சிச்லிட்ஸ் மற்றும் மத்திய அமெரிக்க சிச்லிட்கள் கவர்ச்சியாக, தனித்துவமாக இருப்பதுடன் நீடித்தும் வாழும். இந்த சிச்லிட் மீன்கள் பல அளவுகளில், பல நிறங்களில் இருப்பதால், பொழுது போக்குவோர்க்கு ஏற்றவை.

தென்னமெரிக்க சிச்லிட் (சிறப்பினங்கள்): ஏஞ்சல் மற்றும் டிஸ்கஸ் மீன்கள் தனித்துவ உடல் வடிவங்களைக் கொண்டுள்ளன, மேலும், அழகான மற்றும் மாறுபட்ட சில நிறங்கள் உள்ளன. இந்த சிச்லிட் மற்ற சிச்லிட்டை விட நேசிக்கும் வகையில் இருக்கும். இவற்றில், ரெட்பேரட் மற்றும் ஃப்ளவர் ஹார்ன் சிச்லிட் போன்ற கலப்பினங்களும் உள்ளன.

ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க சிச்லிட்கள்: சிச்லிட் குடும்ப மீன்கள், மற்ற குடும்ப மீன்களுடன் சேர்வதில்லை. மீன் காட்சியகத்துக்கு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள், ஆப்பிரிக்க அல்லது தென்னமெரிக்க சிச்லிட் மீன்களாகும்.

தென்னமெரிக்க சிச்லிட் மீன்கள் உடல் அமைப்பிலும் நடத்தையிலும் வேறுபட்டவை. இந்த மீன்கள் மற்ற மீன்களுடன் இணைந்து வாழும். ஆப்பிரிக்க, அமெரிக்க சிச்லிட்டுகளைக் கலப்பது நல்லதல்ல. இந்த மீன்களின் குணங்கள் வேறுபட்டவை என்பதால் மீன்கள் இறக்க நேரிடும்.

இவற்றுக்கு ஏற்ற நட்பினங்கள்

சில மீன்கள் சிச்லிட்டுடன் சேர்ந்து வாழும். சிச்லிட்டுடன் இருக்கும் மீன்கள் வேகமாகவும், தமது இடத்தை விடாப்பிடியாகப் பாதுகாக்கும் சிக்லிட் மீன்களை எதிர்த்து வாழும் தன்மையிலும் இருக்க வேண்டும். மேலும், சிச்லிட் தொட்டி நட்பு மீன்கள், தொட்டியின் கீழ்ப்பகுதி அல்லது தொட்டியின் ஓரங்களில் வாழும் தன்மையில் இருக்க வேண்டும்.

வேகமான கெளுத்தி மீன்கள்

கெளுத்தி மீன்கள் மட்டும் தான் சிச்லிட்டுடன் சேர்ந்து வாழும். தொட்டிகளில் தென்னமெரிக்க சிச்லிட்டுடன் அமெரிக்கக் கெளுத்தி மீன்களையும், ஆப்பிரிக்க சிச்லிட்டுடன் ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களையும் சேர்த்து வளர்க்கலாம்.

இதன் மூலம் நோய்ப் பரவலையும் தடுக்கலாம். பெரிய மற்றும் வேகமாக நீந்தும் கெளுத்தி மீன்களை, சிச்லிட்டுடன் நன்றாக வளர்க்க முடியும். சிச்லிட் மீன்களுடன் சேர்த்து வளர்க்கும் இனங்களை, அவற்றின் நலம் கருதித் தேர்வு செய்ய வேண்டும்.

சிச்லிட் மீன் தொட்டி அமைத்தல்

சிச்லிட் மீன்களைப் பெரிய தொட்டிகளில் வளர்க்க வேண்டும். தொட்டி பெரியதாக இருந்தால் பலவகை சிச்லிட் மீன்கள் தனித்தனியே வாழத் தேவையான இடம் கிடைக்கும். சிறிய தொட்டியாக இருந்தால் சிச்லிட் மீன்கள் சண்டை போட நேரிடும்.

அதனால், சில மீன்கள் இறக்கவும் நேரிடும். தொட்டியின் வடிவம், ஆழத்தை விட அகலமாக இருக்க வேண்டும், அப்போது தான் மீன்களுக்கு மறைவிடத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

சிச்லிட் மீன் தொட்டிகளில், நீரைச் சுத்திகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், சிச்லிட் மீன்கள் அதிகமாக உண்பதால், கழிவையும் அதிகமாக வெளியேற்றும். மேலும், நீர்ச் சுத்திகரிப்பில் நீரின் சுழற்சி மிதமாக இருக்க வேண்டும். சிச்லிட் மீன்களுக்கு பிராண வாயு மிகவும் அவசியம்.

அடுத்து, அதிகமான மறைவிடங்களை உருவாக்க வேண்டும். பெரும் கற்கள், குகைகள் போன்ற செயற்கைப் பொருள்களைத் தொட்டியில் நிறைய வைக்க வேண்டும்.

இதனால், சிச்லிட்கள் ஒளிந்து கொள்வதற்கான வசதியும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இடமும் கிடைக்கும். எனவே, சண்டையும், சண்டையால் ஏற்படும் இறப்பும் குறைந்து மீன்கள் நலமாக வாழ முடியும்.

சிச்லிட் வளர்ப்புத் தொட்டியில் கண்டிப்பாக அனைத்து மீன்களும் சம அளவில் இருப்பது நல்லது. இதனால், மீன்கள் அதிகமாகச் சண்டை இடாமல் பாறை இடுக்குகளில் தங்கி வாழும். பாறை அமைப்பைத் தொட்டியின் பின் பகுதியில் வைத்து, முன் பகுதியில் திறந்த இடம் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

பாறை அமைப்பின் பின்புறம் தொட்டியின் உயிர் வடிப்பானை மறைவாக அமைத்து விடலாம். இந்தத் திறந்த வகைத் தொட்டியில் அவ்வப்போது மீன்கள் உண்ணவும், நீந்தவும், முன்புறம் வருவது அழகாக இருக்கும்.

தொட்டியின் அடித்தளம்

சிச்லிட் மீன் தொட்டியின் அடித்தளம் மணலாக இருக்க வேண்டும். இது, இயற்கைச் சூழலில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மணலில் அடித்தளம் அமைப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

பல சிச்லிட்கள் மணலில் மேய்வதைப் போலத் தீவனத்தை எடுக்கும். மணலை வாயில் எடுத்துக் கொண்டு வெளியே துப்பும். சில சிச்லிட்கள் மணலை வாயால் எடுத்துச் செவிள்கள் வழியே வெளியேற்றும். இப்படித் தமது செவிள்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளும்.

மணல் அடித்தளம், முட்டை இடவும், வாயால் முட்டையை மீண்டும் எடுக்கவும் ஏற்றதாகும். மேலும், சிச்லிட் மீன்களின் கழிவு, மணலில் புதைந்து போகாமல் மேலேயே இருக்கும். இதை, நீர்ச் சுத்திகரிப்பின் போது எளிதில் சுத்தம் செய்யலாம்.

இந்த அடித்தளத்தை, இரு வாரத்துக்கு ஒருமுறை நன்கு கிளறி விட்டு மீண்டும் படிய வைக்க வேண்டும். இதனால், அதில் உருவாகும் விஷ வாயுக்கள் வெளியேறும்.

இப்படி, கண்கவர் வண்ணமிகு சிச்லிட் மீன்களை வளர்த்து வந்தால், வீடு, அலுவலகம் மற்றும் வணிகம் நடைபெறும் இடங்களில், அழகும், மன நிறைவும் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


கண்கவர் சிச்லிட் மீன்கள்!

முனைவர் சா.ஆனந்த், ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ்சபரி, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு, ச.சுதர்சன், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு, நாகப்பட்டினம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

  • தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

  • உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

  • பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

  • விரால் மீன் வளர்ப்பு!

  • மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

  • நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

  • கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

  • உவர்நீர் மீன் வளர்ப்பு!