My page - topic 1, topic 2, topic 3

விரால் மீன் வளர்ப்பு!

விரால் மீன் வளர்ப்பு

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2022

விரால் மீனில், மற்ற கெண்டை மீன்களில் இருப்பதை விட, முட்கள் குறைவாகவும், சுவை மிகுந்தும் இருக்கும். எனவே, விரால் மீனின் விலை எப்போதுமே கூடுதலாகத் தான் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விரால் மீன் நம் நாட்டு மீனினமாகும். இது, மற்ற மீன்கள் மற்றும் பூச்சிகளை விரும்பி உன்ணும் மாமிச உண்ணி வகையைச் சார்ந்தது. தன் இனத்தையே சாப்பிடும் குணமும் இதற்கு உண்டு. எனவே, இதை வளர்ப்பதில் பல்வேறு உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

விரால் மீன் இனங்கள்

விரால் மீன் நீளமான உடலையும், பாம்புக்கு இருப்பதைப் போன்ற தலையையும் உடையது. இந்தத் தலையால் இதற்கு ஸ்நேக் ஹெட் என்னும் பெயரும் உண்டு. விரால் மீன்கள், ஏரி, குளம், குட்டைகளில் அதிகமாக இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சீனா, வியட்நாம், கம்பூசியா போன்ற நாடுகளில், இந்த மீன்கள் பரவி உள்ளன. விரால் மீன் இனங்களில், சன்னா என்னும் இனத்தைச் சார்ந்த, சென்னா ஸ்டிரை யேட்டஸ், சென்னா மருலியஸ், சென்னா பங்க்ட் டேட்டஸ் ஆகிய இனங்களே மிக நீளமாகவும், எடை மிக்கதாகவும் வளருகின்றன.

மீன் குஞ்சுகள் சேகரிப்பு மற்றும் உற்பத்தி

விரால் மீன் குஞ்சுகளை, இயற்கை நீர் நிலைகளில் இருந்து சேகரிக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய, இயற்கைச் சூழலுடன் குளம் அமைத்து, அங்கே உற்பத்தியாகும் குஞ்சுகளைச் சேகரித்து வளர்க்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விரால் மீன் குஞ்சுகள், ஆறு, குளம், குட்டைகளில் சேகரித்து விற்பனை செய்யப்படுகின்றன. செயற்கைத் தூண்டுதல் முறையில், ஊசி மூலம் பிட்யூட்டரி அல்லது ஓவாபிரிமைச் செலுத்தியும், மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தூண்டுதல் முறையில் உற்பத்தி

இம்முறையில், 1-2 கிலோ எடையுள்ள மீன்களைச் சேகரித்து ஹாப்பா என்னும் வலைக் கூண்டுகளில் விட்டு, பிட்யூட்டரி அல்லது ஓவாபிரிமைச் செலுத்தி, கருவுறச் செய்து முட்டைகள் பெறப்படுகின்றன,

பிறகு, இந்த முட்டைகளை ஹேட்சிங் ஹாப்பா என்னும் துணியாலான பொரிக்கும் கூண்டுகளில் போட்டு வைத்தால், 2-3 நாட்களில் குஞ்சுகள் வந்து விடும். இவற்றைக் கவனமாகச் சேகரித்து, சிறு தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இவை, விரலளவு வளர்ந்ததும் பிடித்து, பிராண வாயுள்ள நெகிழிப் பைகளில் வைத்து விற்கலாம். அல்லது பெரிய குளங்களில் விட்டு வளர்க்கலாம். விரால் மீன் குஞ்சு உற்பத்தி என்பது, கெண்டை மீன் குஞ்சு உற்பத்தியைப் போலவே இருந்தாலும், கூடுதல் கவனம் அவசியம்.

விரால் மீன் குஞ்சுகள் மிகவும் மென்மையாக இருக்கும். இவற்றின் உடலை ஒட்டியபடி, யோக்சாக் என்னும் உணவுப்பை இருக்கும். இது, மீன் குஞ்சுகளுக்கு உணவாக அமையும்.

இந்தப் பை, சுருங்கி மறைந்த பிறகு தான், நீரிலுள்ள நுண்ணுயிரிகளை மீன்களால் சாப்பிட முடியும். அப்படி உணவை எடுக்க முடியா விட்டால், இறப்பு விகிதம் அதிகமாகும்.

வளர்ப்புக் குளம் தயாரிப்பு

மீன்களை இருப்பு வைப்பதற்கு முன், குளத்தில் உள்ள பழைய நீரை வெளியேற்றி விட்டு, குளத்தை உழுது காய வைக்க வேண்டும். பிறகு, 40 செ.மீ. உயரம் நீர் நிரப்பி, எக்டருக்கு 200 கிலோ சுண்ணாம்பு வீதம் எடுத்து, நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

பிறகு, எக்டருக்கு 2,000 கிலோ மாட்டுச் சாணம் வீதம் கரைத்து, குளத்தில் தெளிக்க வேண்டும். உரமிட்டு 10-15 நாள்களில், நுண்ணுயிர் மிதவைகள் உற்பத்தியாகி வந்ததும், குளத்து நீரை, 70 செ.மீ. உயர்த்த வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன், மேலே கூறியுள்ள ஏற்பாடுகளைச் செய்து விட்டால், நீரில் நுண்ணுயிரிகள் வளர்ந்து, மீன்களுக்கு இயற்கை உணவாக அமையும். அதன் பிறகு மீன் குஞ்சுகளை, காலை அல்லது மாலையில் இருப்பு வைக்க வேண்டும்.

விரால் மீன்களுக்கு உயிர் உணவாக விளங்கும், கம்பூசியா, திலேப்பியா ஆகிய மீன்களை, குளத்தில் இருப்பு வைக்க வேண்டும்.

மீன் குஞ்சுகளுக்கு உணவிடுதல்

விரால் மீன் குஞ்சுகளுக்கு, நீரில் இயல்பாகக் கிடைக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் சாணத்தால் உருவாகும் நுண்ணுயிரிகள் மட்டும் போதாது. எனவே, திலேப்பியா குஞ்சுகள், கம்பூசியா, ஒரிசியாஸ், அப்ளோகீலஸ் போன்ற, இனத்தைப் பெருக்கும் சிறு மீன்களை, எக்டருக்கு 1,000 வீதம் இருப்பு வைக்கலாம்.

மேலும், சிறு கெண்டைகள், தவளையின் தலைப் பிரட்டைகள், மண் புழுக்கள், இரத்தப் புழுக்கள், இறால்கள், நெத்திலிக் கருவாடு, துண்டுகளாக வெட்டிய மீன்கழிவு, கோழிக்குடல் மற்றும் மாட்டின் இறைச்சியை, சுத்தம் செய்து உணவாகத் தரலாம். மீன் உணவுகளைப் பண்ணையில் தயாரித்தும் தரலாம்.

விரால் வளர்ப்பில் உணவு, உணவிடல் மிக முக்கியம். எனவே, அவற்றின் உணவுத் தேவையைத் தினமும் சரி செய்ய வேண்டும். காலை 7 மணிக்கும், மாலை 5 மணிக்கும் உணவிடலாம்.

மாதம் ஒருமுறை மாதிரி மீன் பிடிப்பை நடத்தி, மீன்களின் வளர்ச்சியை அறிந்து, குளத்தில் உள்ள மீன்களின் மொத்த எடைக்கு ஏற்ப, உணவைக் கூட்டித் தர வேண்டும்.

விரால் மீன் வளர்ப்பு

விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கம் உள்ளவை. எனவே, ஒரு குளத்தில் ஒரே வயதுள்ள மீன்களை மட்டுமே வளர்க்க முடியும். வயது மாற்றம் இருந்தால், சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். எனவே, ஒரே குளமாக எடுக்காமல், நிலத்தின் இருப்பைப் பொறுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாத இடைவெளியில், தனித் தனியாக குஞ்சுகளை விட்டால், இழப்பைக் குறைக்கலாம். அதே நேரம், ஆண்டு முழுவதும் தொடர் வருவாயும் கிடைக்கும்.

ஒரு எக்டர் குளத்தில் நன்கு வளர்ந்த 5,000- 10,000 விரால் குஞ்சுகளை இருப்பு வைக்கலாம். குளத்தில் மூன்று அடிக்குக் குறையாமல் நீர் இருக்க வேண்டும்.

குளத்தில் விட்ட புதிய குஞ்சுகள், இருபது நாட்கள் வரை, நுண்ணுயிர் மிதவைகளை உணவாகக் கொள்ளும். மேலும், கடலைப் புண்ணாக்குத் தூளையும் உணவாக இடலாம்.

இருபது நாட்களுக்கு மேல், மூன்று மாதங்கள் வரை, சிறப்புத் தீவனம் தர வேண்டும். அதற்குப் பிறகு. ஆறு மாதம் வரை, இந்தத் தீவனத்துடன், கோழிக்கழிவு மற்றும் குடலைச் சேர்த்துத் தர வேண்டும். இந்தக் கழிவுகளை இடுவதால், நீரின் தரம் கெடலாம்.

எனவே, கோழிக்கழிவை நன்றாகக் கழுவி, வேக வைத்து, அன்றாடத் தேவையை மட்டும் குளத்தில் இட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து, இந்தக் கழிவுடன், அவித்த முட்டை மற்றும் கட்லா, ரோகு, திலேப்பியா, கம்பூசியா, ஓரிசியாஸ், அப்ளோகீலஸ் ஆகிய மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, அவற்றையும் உயிர் உணவாகத் தரலாம்.

இப்படி வளர்த்தால், நான்கு மாதத்தில் 400-500 கிராம் எடையையும், எட்டு மாதத்தில் 750- 1,000 கிராம் எடையையும் அடைந்து விடும்.

அறுவடை

ஒரு மீன் 600 கிராமுக்கு மேல் இருந்தால் விற்பனை செய்யலாம். குளத்து நீரைக் குறைத்து, இழுவலை, வீச்சுவலை மூலம் மீன்களை அறுவடை செய்யலாம். மற்றும் தடவல் முறையில் மொத்த மீன்களையும் பிடித்து வேறு குளத்தில், வெலான் ஸ்க்ரீன் ஹாப்பா போட்டு வைக்க வேண்டும். ஏனெனில், விரால் மீன்களைப் பொறுத்தவரை, உயிருள்ள மீன்களே அதிக விலைக்குப் போகும்.

வளர்ப்புக் காலக் கவனிப்பு

வளர்ப்புக் காலத்தில், குளத்து நீரின் அளவைக் கவனிக்க வேண்டும். குளத்தை வலையால் மூடி, பறவைகளிடம் இருந்து மீன்களைக் காக்க வேண்டும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை சோதனை மீன்பிடிப்பை நடத்தி, மீன்களின் வளர்ச்சியை அறிய வேண்டும்.

அம்மை போன்ற கொப்புளங்கள் மீன்களின் தோலில் அவ்வப்போது தோன்றி, உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால், மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் குழைத்து, மீனின் மேல் தடவினால் குணமாகி விடும்.

விரால் மீனின் சிறப்பு

விரால் மீன், நன்னீர் மீன்களில் சுவை மிக்கது. இதன் மாமிசம், மிகவும் மிருதுவானது. வட்டத் துண்டுகளாக வெட்டிச் சமைக்கும் விரால் மீனில், முட்கள் மிகவும் குறைவு.

விரால் காற்றையும் சுவாசிக்கும். அதனால், மீன் சந்தையில் உயிருடன் கிடைக்கும். நோயினால் உடல் நலிந்தவர்கள், சத்துள்ள உணவாக, விராலைச் சாப்பிடலாம்.

விரால் மீன், புலால் உண்ணி. ஓரளவு வேகமாக வளரும். விராலுக்கான உயிருணவை உற்பத்தி செய்து, அதன் உணவுத் தேவையைச் சரி செய்யலாம். பொதுவாக, சூழல் கூறுகளைத் தாங்கும் திறன், விரால்களுக்கு அதிகம். எனவே, அவற்றை அதிக அடர்த்தியில் வளர்க்கலாம்.

தரம் குன்றிய நீர் நிலையிலும் விரால்களை வளர்க்கலாம். தற்போது, இயற்கையில் சேகரிக்கும் குஞ்சுகளை வளர்க்கலாம். விரால்கள் தேங்கிய குளத்திலும், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும்.

அதனால், திட்டமிட்டுக் குஞ்சுகளைச் சேகரித்து வளர்க்க முடியும். விரால் வளர்ப்பில் நீர் அதிகளவில் தேவைப்படாது. தரத்தை மேம்படுத்தினால், கழிவு நீரிலும் வளர்க்கலாம்.

தனி இனமாக வளர்ப்பதுடன், ஓரளவு வளர்ந்த கெண்டை மீன்களுடன் சேர்த்தும் விரால்களை வளர்க்கலாம். பகை மற்றும் தீனி மீன் என்னும் வகையில், திலேப்பியா மீன்களோடும் வளர்க்கலாம். மீன்னோஸ் என்னும் கம்பூசியா, ஓரிசியாஸ், அப்ளோகீலஸ் ஆகிய, கொசு ஒழிப்பு மீன்களோடும் வளர்க்கலாம்.


Pachai boomi KARTHICK RAJA

பொ.கார்த்திக் ராஜா, சா.ஆனந்த், ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு – 638 451.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

  • தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

  • உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

  • பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

  • மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

  • நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

  • கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

  • உவர்நீர் மீன் வளர்ப்பு!

  • அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!