நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்களில் முக்கியமானது, அவை ஒன்றையொன்று கொத்திக் கொள்வதாகும். இது, பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளிடம் தான் அதிகமாக உள்ளது.
காலைக் கொத்துவது, இறகுகளை மட்டும் கொத்திப் பிடுங்குவது, கொண்டையைக் கொத்துவது, ஆசனவாயைக் கொத்தி முட்டையை உடைத்து உண்பது, ஆசன வாயைக் கொத்திக் குடலையே வெளியே இழுத்துப் போட்டு இறப்பை ஏற்படுத்துவது என்று பல முறைகள் உள்ளன.
இளம் குஞ்சுகளில் தீவனப் பற்றாக்குறையால் காலைக் கொத்தும் பழக்கம் ஏற்படுகிறது. இட நெருக்கடியால் கொண்டையைக் கொத்தும் பழக்கம் ஏற்படுகிறது. நீர் மற்றும் தீவனக் குறையால், சிறகுகளைக் கொத்துதல், ஆசன வாயைக் கொத்துதல் ஆகியன நிகழ்கின்றன.
நீர் மற்றும் தீவனத் தொட்டிகள் குறைபாடு, புரதம், மெத்தியோனின், சோடியம் மற்றும் பாஸ்பரஸ், உப்புக் கூடுதலாகவும் குறைவாகவும் இருத்தல், மாவுச்சத்து அதிகமாகவும், நார்ச்சத்துக் குறைவாகவும் உள்ள தீவனத்தை அளித்தால், தோலுக்கு அடியில் அதிகமாகக் கொழுப்புப் படிந்து, தோலின் தன்மை பாதிக்கப்படும். இதனால், இறகுகள் பிடுங்குவதற்கு எளிதாகி விடுகிறது. அதிகளவு குருணைத் தீவனத்தை அளித்தால் உப்புக் குறைபாடு ஏற்படும். இதனால், சிறிதளவில் உண்ணும் கோழிகள், மீதமுள்ள நேரத்தில் மற்ற கோழிகளைத் கொத்தித் துன்புறுத்தும்.