My page - topic 1, topic 2, topic 3

கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

யிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படுகிறது.

முன்னர், விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகவே பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை, தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இதனால் ஏற்படும் நன்மைகளை விட, கலப்புப் பண்ணையில் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும். இயற்கை விவசாயத்தை இலாபமுள்ள வகையில் செய்ய வேண்டுமெனில், கலப்புப் பண்ணையை அமைப்பது மிகவும் முக்கியம். இதனால், விவசாயிகள் சுயமாகச் செயல்பட முடியும்.

ஆடு வளர்ப்பு

கால்நடைப் பராமரிப்பில் ஆடு வளர்ப்பு மிகவும் எளிமையானது. ஏனெனில், ஆடுகளுக்குத் தீவனத் தேவை மற்றும் நோய்த் தாக்குதல் மிகவும் குறைவு.

மேலும், ஆடுகள் அனைத்து வகைத் தாவரங்களையும் உண்ணும் என்பதால் பராமரிப்பது எளிது. ஒரு ஆட்டுக் குட்டி பத்தே மாதங்களில் விற்பனைக்குத் தயாராகி விடும்.

பண்ணையில் பட்டியைக் கட்டி ஆடுகளை வளர்க்கும் போது, அவற்றின் புழுக்கைகளும் சிறுநீரும் நிலத்துக்கு உரமாகும். ஆட்டுப் புழுக்கையை விடச் சிறுநீரில் சத்துகள் நிறைய உள்ளன. ஆனால், கொட்டிலில் வளர்க்கும் போது சிறுநீரைச் சேகரிப்பது கடினமாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
மாடு வளர்ப்பு

விவசாயத்துக்குத் தொழுவுரம் மிகவும் முக்கியம். இயற்கை விவசாயம் செய்ய நிறையளவில் தொழுவுரம் தேவை. தொழுவுரம் அதிகமாகக் கிடைப்பது மாடுகள் மூலம் மட்டும் தான்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், இந்தியாவில் பாலுற்பத்திக் குறைவாகவே உள்ளது. சராசரியாக ஒரு மாடு ஆண்டுக்கு 917 கிலோ பாலைத் தருகிறது. ஆனால், இஸ்ரேலில் 6,958 கிலோ, அமெரிக்காவில் 6,598 கிலோ பால் கிடைக்கிறது.

அதைப் போல, இந்தியாவில் சராசரியாக, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 164 கிராம் பாலைக் குடிக்கிறான். இந்த நுகர்வுத் தன்மை, நியூசிலாந்தில் 637 கிராமாக, அமெரிக்காவில் 623 கிராமாக உள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உலகக் கால்நடைத் தொகையில், ஐந்தில் ஒரு பங்குப் பசுக்களும், பாதியளவு எருமைகளும் இந்தியாவில் உள்ளன.

இருப்பினும், பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாகக் குறைந்தளவு பாலையே இந்தியர்கள் அருந்தும் நிலையுள்ளது.

எனவே, பால்வளப் பெருக்கம் என்னும் வெண்மைப் புரட்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

கலப்புப் பண்ணையில் மாடுகளை வளர்த்தால், நிலத்துக்குத் தேவையான தொழுவுரமும் சிறுநீரும் கிடைக்கும். இந்த மாடுகளுக்குப் பண்ணைக் கழிவுகளையும், ஆடுகள் தின்று எஞ்சிய தீவனப் பயிர்களையும் உணவாகக் கொடுக்கலாம்.

கோழி வளர்ப்பு

கலப்புப் பண்ணையில் கோழிகளை வளர்ப்பது எளிதானது. ஏனெனில், கோழிகளுக்குத் தேவையான தீவனத்தை, நிலத்தில் விளையும் பொருள்களைக் கொண்டே அளித்து விட முடியும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், கோழிகள் இடும் முட்டைகள், பண்ணையின் அன்றாடச் செலவுக்குப் பயன்படும். கோழிக்கழிவு பயிருக்கு நல்ல உரமாகும். கோழிகள் பயிர்களில் உள்ள பூச்சிகளை உண்டு அழிப்பது நமக்குக் கூடுதல் பயனாகும்.

மீன் வளர்ப்பு

பண்ணையில் உள்ள பாசனக் குட்டையில் மீனை வளர்த்தால் அதிக இலாபத்தை அடைய முடியும். ரோகு, மிர்கால், கட்லா, வெள்ளிக் கெண்டை போன்றவை, நீரின் வேறுபட்ட ஆழங்களில் வளரக் கூடியவை.

எனவே, இவற்றைக் குறிப்பிட்ட அளவில் குட்டைகளில் விட்டு வளர்க்கலாம். பண்ணையில் பயன்படுத்த முடியாத தானியங்களை, மீனுக்கு உணவாகத் தரலாம்.

குட்டையின் மேற்பரப்பில் கம்பி வலையை அமைத்து அதன் மேல் கோழிகளை வளர்த்தால், இடம் மீதமாவதுடன், கோழிக் கழிவானது மீனுக்கு நல்ல உணவாகவும் அமையும். மீன்கள் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து அதிக இலாபத்தைத் தரும்.

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பும் இலாபம் தரும் தொழிலாகும். பண்ணையில் தீவனப் பயிர்களை வளர்த்துப் பன்றிகளுக்கு உணவாகத் தரலாம். பன்றிக் கழிவானது சிறந்த உரமாகும்.

பன்றிகள் அதிகளவில் குட்டிகளை ஈனுவதாலும், பத்தே மாதங்களில் அவை விற்பனைக்குத் தயாராகி விடுவதாலும் பண்ணை வருமானம் மிகும். மேலும், பன்றியிலிருந்து தயாரிக்கப்படும் குணப ஊட்டம் சிறந்த இயற்கை உரமாகும்.

வாத்து வளர்ப்பு

கலப்புப் பண்ணையில் வாத்துகளை வளர்க்க, ஒரு குடில் மட்டுமே போதும். பண்ணைக் குட்டையில் கிடைக்கும் சிறிய மீன்கள், நத்தைகள், களைகளின் தழைகளை உண்டு வளர்ந்து விடும்.

வாத்து எச்சம் பண்ணைக்கு நல்ல உரமாகும். இந்த வாத்துகளின் மூலம் முட்டை மற்றும் இறைச்சியைப் பெறலாம்.

முயல் வளர்ப்பு

மூன்று மாதத்தில் விற்பனைக்கும், சினைப் பருவத்துக்கும் முயல்கள் தயாராகி விடும். அதனால், குறுகிய காலத்தில் நல்ல பயனைப் பெற முடியும்.

குறைவான இடத்தில் அடுக்குப் படுக்கைகளை அமைத்து முயல்களை வளர்க்கலாம். பண்ணை வரப்புகளில் கல்யாண முருங்கை, கிளைரிசிடியா என்னும் சீமை அகத்தி போன்ற மரங்களை வளர்த்து அவற்றின் இலைகளை,

காரட், முட்டைக்கோசு, பூக்கோசு போன்றவற்றின் கழிவுகளை, விற்பனைக்கு ஆகாத காய்கறிகளை உணவாகக் கொடுத்து எளிதாக வளர்க்க முடியும்.

முயல்கள் அதிகளவில் குட்டிகளை ஈனுவதாலும், குறைந்த காலத்தில் விரைவாக வளர்ந்து விடுவதாலும், நல்ல இலாபம் கிடைக்கும்.

இவற்றைப் போலவே, காடை, புறா போன்றவற்றையும் சிறிய கூண்டுகளில் வளர்த்துப் பயனடைய முடியும்.

இப்படிக் கால்நடைகளை, பறவைகளைப் பண்ணையில் வளர்த்தால், அந்தப் பண்ணை தன்னிறைவைப் பெறுவதுடன், விவசாயிகள் இயற்கையான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

பயிர் வளர்ப்பு

கலப்புப் பண்ணையில், எல்லா உயிர்களுக்கும் உணவளிக்க ஏதுவாகப் பயிரிட வேண்டும். இதனால், பயிரிலிருந்து கிடைக்கும் பொருளைக் கொண்டு பண்ணையை நடத்த முடியும்.

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை அவற்றின் தேவைக்கு ஏற்ற அளவில் பயிரிட வேண்டும். வரப்புகளில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும்.

கால்நடைகளின் கழிவுகளை மட்கச் செய்து பயிர்களுக்கு உரமாக இட முடியும். ஆகவே, பண்ணையில் பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள்வது அவசியம்.

இம்முறையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிரை அடுத்தடுத்துப் பயிரிடாமல், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த பயிர்களைப் பயிரிட வேண்டும்.

பயிர்ச் சுழற்சி முறையில், ஒரு குடும்பத் தாவரம் விட்டுச் செல்லும் ஊட்டத்தை மற்றொரு குடும்பத் தாவரம் ஏற்று நல்ல மகசூலைத் தருவதுடன், மண்வளமும் காக்கப்படும்.

மேலும், ஒரு பருவம் முழுவதும் ஒரே பயிரைப் பயிரிடாமல், பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதனால், ஒன்றின் விலை குறைந்து இழப்பு உண்டானாலும், மற்றொன்று அந்த இழப்பை ஈடுகட்டி இலாபத்தைப் பெற்றுத் தரும்.

கலப்புப் பண்ணையின் பயன்கள்

விவசாயத்துக்குத் தேவையான தொழுவுரத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை. இதனால், தொழுவுரச் செலவும் போக்குவரத்துச் செலவும் குறையும்.

கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் தேவையான தீவனத்தைப் பண்ணையிலேயே உற்பத்தி செய்து கொடுப்பதால் தீவனச் செலவும் குறைகிறது.

கலப்புப் பண்ணையில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதனால், எதுவும் வீணாவதில்லை.

ஆடுகள் தின்று எஞ்சியதை மாடுகளுக்குத் தீவனமாக, கோழிக்கழிவை மீன்களுக்கு உணவாக, இவை அனைத்தின் கழிவுகளையும் பயிர்களுக்கு உரமாக அளிக்க முடியும்.

வெளியே கால்நடைக் கழிவுகளைச் சேகரிக்கும் போது பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட பகுதி வீணாகிறது. ஆனால், கலப்புப் பண்ணையில் இப்படி வீணாவதில்லை.

கலப்புப் பண்ணையில் கிடைக்கும், மீன், முட்டை, பால், இறைச்சி போன்றவை இலாபத்தை ஈட்டித் தருகின்றன. இவை அனைத்தையும் தனித் தனியாகப் பராமரித்தால், செலவு அதிகமாகி இலாபம் குறையும்.

தன்னிறைவு பெற்ற பண்ணை தன்னிறைவைப் பெற்ற மனிதனை உருவாக்குகிறது. கலப்புப் பண்ணையை அமைத்தால், மனிதன் இயற்கைச் சூழ்நிலையில் நலமாக, மகிழ்ச்சியாக வாழ முடியும்.

எனவே, கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம் என்பதை உணர்ந்து, விவசாயிகள் அனைவரும் கலப்புப் பண்ணைகளை உருவாக்கி, பசியற்ற, வறுமையற்ற சமுதாயத்தைச் சமைக்க வேண்டும்.


கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

முனைவர் வி.சு.சுகந்தி, உதவிப் பேராசிரியர், காருண்யா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

  • தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

  • ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!

  • மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

  • சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

  • சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

  • துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

  • வருக மஞ்சளின் சிறப்புகள்!