இயற்கை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி, செங்கல்பட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் கடந்த 12.09.2025 அன்று நடைபெற்றது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவெர் பெ.முருகன். செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தொடக்க உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர், இங்கு வந்து விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் இதயத் துடிப்பு என்றால் அது விவசாயிகள் தான். அவர்களின் வளர்ச்சிக்காகத் தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனவே இங்கு கூறப்படுகின்ற கருத்துகளைச் செயல்படுத்தி முன்னேற வேண்டும் என்று விவசாயிகளைக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பி.பிரேம் சாந்தி, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த அரசு சார்பில் நிறைய பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. கொரோனாவிற்குப் பிறகு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடமும், மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.

அவரைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குநர் பி.எ.மோகன், இந்த உலகில் மனித இனம் தோன்றி பதினைந்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து விவசாயம் நடைபெற்று வருகின்றது. எனவே, உலகத்தின் முதல் தொழில் விவசாயம் தான்.
இந்த விவசாயம், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் வருவதற்கு முன்பு வரை இயற்கை வழி விவசாயமாகத் தான் இருந்தது. அதற்கு பின்னர் இந்த எரிபொருள்களின் கழிவுகளைப் பயன்படுத்தும் வகையில் இரசாயன விவசாயமாக மாற்றப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் இயற்கை வழி விவசாயத்தின் மீதான பார்வை அனைவரிடமும் வந்துள்ளது பாராட்டத்தக்கது என்றார்.
தலைமையுரை ஆற்றிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர் வி.அப்பாராவ், உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில் செயற்கை விவசாயம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனால் ஏற்பட்டு வரும் பருவ நிலை மாற்றங்கள் மற்றும் உணவுப் பொருள்களில் கலந்துள்ள நச்சுத்தன்மை போன்ற எதிர் விளைவுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இயற்கை விவசாயம் அவசியமாகப் படுகின்றது. அதனால் இதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என்றார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பத்தாவது மண்டல இயக்குநர் முனைவர் ஷேக் என்.மீரா சிறப்புரையாற்றினார். அப்போது அவர், இந்திய நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையமும் சிறப்பாக இயங்கி வருகின்றது. நாட்டிலுள்ள அனைத்து வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கும் நூறு சதவிகித நிதியுதவி அளிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களையெல்லாம் விட தமிழ்நாட்டு விவசாயிகள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட விவசாயிகளைப் பாராட்டுகிறேன். சென்னைக்கு அருகில் நீங்கள் இருப்பதால், நீங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை விவசாய விளை பொருள்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.
மத்திய மாநில அரசுகள் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை தரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றை இணைத்துக் கொண்டு, சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைக்கலாம் என்றார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் என்.புண்ணியமூரித்தி, கால்நடைகளுக்கு இயற்கை மருத்துவம் குறித்தும், கோழியின ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.பி.செல்வன், நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்தும், சிறுதானிய மதிப்புக் கூட்டல் பொருள்கள் உற்பத்தியாளர் மண்வாசனை மேனகா, சிறுதானிய பொருள்களை மதிப்புக்கூட்டு பொருள்களாக மாற்றுவது குறித்தும், தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாய கையேடு வெளியிடப்பட்டது. பட்டியலின விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான்கள், கோழிக் குஞ்சுகள், பழச் செடிகள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மைத்துறை மற்றும் சுய உதவிக் குழுக்கள் சார்பில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் அபர்ணா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக வந்திருந்த அனைவருக்கும் சுவையான பகல் உணவு வழங்கப்பட்டது.
-பசுமை



