My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஐந்தே மாதங்களில் சேலத்தில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மட்டும் ரூ.244 கோடி!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஐந்தே மாதங்களில், முதன்மை வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகள் 244 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க் கடன்களைப் பெற்றிருப்பதாக, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு, பயிர்க் கடன்களை வழங்க முன்னுரிமை கொடுக்க வேண்டும், குறிப்பாக புதிய உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நடப்பு நிதியாண்டிற்காக, சேலம் மாவட்டத்திற்கு மட்டும் 1,038 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

தற்போது அந்த மாவட்டத்தில் 203 முதன்மை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும், ஐந்து பெரியப் பன்முகக் கூட்டுறவுச் சங்கங்களும் உள்ளன. இச்சங்கங்கள், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக் கூட்டங்களை நடத்தி, கடன் வழங்கல் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தகுதியுள்ள விவசாயிகள், காலத்திற்கு ஏற்ப உதவியைப் பெறுவதை உறுதி செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பேரில், விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில், குடும்ப அட்டை, ஆதார், நில உரிமை ஆவணங்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றைக் கொடுத்துக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும், சேலம் மாவட்டத்தில், 25,747 விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். அவர்கள் பெற்றுள்ள கடன் மதிப்பு ரூ.244 கோடி ரூபாய். இதில் 3 கோடி ரூபாய் புதிய உறுப்பினர்கள் பெற்றுள்ள கடன் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சாகுபடி மற்றும் பருவச் செலவுகளைச் சந்திக்க, விவசாயிகளுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் நிதியுதவி, பேருதவியாக இருக்கிறது என்பதை  இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!