காவிரி டெல்டாவில் தற்போது குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நெற்பயிருக்குத் தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க, இந்த முறை விவசாயிகள் அதிகளவில் டிரோன் தொழில் நுட்பத்துக்கு மாறியுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5.66 இலட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. சம்பா பருவத்திற்காக, நாற்றங்கால் தயாரிப்பு நடைந்து வருகிறது. இந்த நிலையில், டிரோன்களைக் கொண்டு மருந்து அடிக்க, ஏக்கருக்கு 450 ரூபாய் மட்டுமே வாடகை வசூலிக்கப் படுகிறது.
டிரோன் தொழில்நுட்பத்துக்கு விவசாயிகள் வேகமாக மாறிவருவது பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:
மருந்துகள், இலைவழியாகப் பயிருக்குச் சீராக கிடைக்கின்றன.
குருத்துப் பூச்சிகள், கருப்பு வண்டுகள், ஆணைக் கொம்பன் போன்றவை கட்டுப்படுகின்றன.
கை ஸ்பிரேயரில் அடிப்பதற்கு ஆகும் மருந்தில், பாதி மட்டுமே டிரோனில் செலவாகிறது.
ஸ்பிரேயரில் அடித்தால் நாள் முழுக்க வீணாகும். டிரோன் என்றால் இரண்டே மணிநேரம்தான்; வேலை முடிகிறது.
- சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், அரசு மானிய விலையில் டிரோன்களை வழங்க வேண்டும்.
வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், டிரோன் மூலம் மருந்து தெளிப்பதால், பயிருக்குச் சீரான சத்துகள் கிடைக்கின்றன. இளைஞர்கள் பலரும் டிரோன் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு கிடைத்தால், இந்த நுட்பம் இன்னும் விரிவடையும் என்றார்.