நாடெங்கும் இன்று விநாயகர் சதூர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதூர்த்தித் தினத்தையே, மக்கள் விநாயகர் சதூர்த்தியாகக் கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில் பொதுவாகவே விநாயகர் சதூர்த்தி களைகட்டும். அதற்கு இணையாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகவே கொண்டாட்டங்கள் பெருகி வருகின்றன. ஊர்-ஊருக்குச் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
விநாயகர் சிலைகளும் நுட்பங்களும்
விநாயகர் சதூர்த்தி நெருங்குகிறது என்றாலே, சிலை வடிவமைப்பாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். வித்தியாசம் வித்தியாசமாகச் சிலைகளை வடிப்பது, காலத்திற்கு ஏற்ப நுட்பமான, கலைச் சித்திரம் பொருந்தியச் சிலைகளைச் செதுக்குவது என்று அவர்கள் கைவண்ணமே அலாதியாக அமைகிறது. இருந்தாலும் சிலைகளுக்கு வண்ணம் திட்டுவது என்னவோ, பெயிண்ட் உள்ளிட்ட இரசாயனாத்தால் ஆன பொருட்களைக் கொண்டே.
பொதுவாக விநாயகர் சதூர்த்தியின் இறுதி வடிவம், சிலைகளை அந்தந்த ஊர்களில் உள்ள நீர்நிலைகளில்தான் மக்கள் கரைப்பர். இரசாயனம் பூசப்பட்ட சிலைகளைக் கரைப்பதால் சூழல் மாசடைகிறது. அந்த நீர்நிலைகளில்தான் கால்நடைகள் போன்ற உயிரினங்கள் தாகம் தணிக்கின்றன. கடலோர ஊர்களில் மக்கள், கடலுக்குக் கொண்டு சென்று விநாயகரைக் கரைப்பதால், சிலைகளில் உள்ள இரசாயனங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்குக் கேடாக அமைகின்றன.

சூழலைக் காக்க வந்த விநாயகர்கள்!
இந்த நிலையில், அண்மைக் காலமாகவே நூதனமானச் சிலைகளைச் செய்யவும், வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவையில் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் வண்ணப் பூச்சு இல்லாத, வெறும் களிமண்ணால் ஆன சிலைகள், மக்களை அதிகளவில் வாங்கத் தூண்டின.
விழுப்புரம் அருகே கானை என்னும் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாகவே கம்பு, கேழ்வரகு, மொச்சை, துவரை, மிளகு, ஏலக்காய், மக்காச்சோளம், கொண்டைக் கடலை உள்ளிட்ட நவதானியங்களைக் கொண்டுச் சிலையை வடித்து மக்கள் வழிபடுகிறார்கள். இந்தாண்டும், சுமார் 600 கிலோ தானியங்களைக் கொண்டே உருவாக்கியுள்ளனர். இதனால் வேளாண்மை செழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால் சில இடங்களில் வேடிக்கைக்காக சிலைகள் நூதனமாக வடிக்கப்படுகின்றனவே தவிர, அதன் நன்மைகளை உணர்ந்து, அவ்வாறே இனி நாடு முழுவதும் இரசாயனமற்ற சிலைகளை வடிவமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வடிவமைப்பாளர்கள் முன்வர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு!



