My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் -எடப்பாடி பழனிசாமி

மலர், பழம், காய்கறி உற்பத்தியாளர்களுக்குச் சிறப்புத் திட்டங்கள், 24 மணிநேர மும்முனை மின் விநியோகம், பயிர்க்கடன் தள்ளுபடி, குடிமராமத்து, வறட்சி நிவாரணம்  என எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான வாக்குறுதிகள்!

வேப்பனஹள்ளி:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற தனதுப்  பிரசாரச் சுற்றுப் பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் துவங்கி உள்ளார். அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனஹள்ளி, தளி, ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

வேப்பனஹள்ளித் தொகுதியின் இராயக்கோட்டைப் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், விவசாயிகள் நலனுக்கான பல வாக்குறுதிகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

முக்கிய அறிவிப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகள்

  • மலர் உற்பத்தி வளர்ச்சி
    இராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர், பழம், காய்கறி உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. இந்தத் தொழில்களுக்கு ஆதரவாக, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், “இந்தோ–இஸ்ரோ மலர் சாகுபடி பயிற்சி மையம்” மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். ஆனால், தி.மு.க. அரசு அந்த மையத்தை மூடி வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
    மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தால், அந்த ஏல மையத்தை உடனடியாகத் திறந்து, விவசாயிகளுக்கு நேரடியாக நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்வோம் என்றார்.

  • மின்சார விநியோகம்:
    தற்போது ஷிப்ட் முறையில் வழங்கப்படும் மின்சாரம் காரணமாக, இரவில் விவசாயிகளால் மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

  • மானியம் மற்றும் திட்டங்கள்:
    மலர் உற்பத்திக்கு அ.தி.மு.க. அரசு வழங்கிய மானியத்தை தி.மு.க. நிறுத்திவிட்டதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, தமது ஆட்சி வந்தால் மீண்டும் வழங்கப்படும் என்றார்.  குடிமராமத்துத் திட்டமும் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

  • பயிர்க்கடன் மற்றும் நிவாரணம்:
    அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை 12,100 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது; வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,248 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதையும் எடப்பாடி சுட்டிக்காட்டினார்.

  • மாம்பழ விவசாயிகள்:
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததைக் குறிப்பிட்டு, ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், கிலோக்கு 13 ரூபாய் விலை நிர்ணயம் செய்யவும் கோரிக்கை வைத்தோம்; ஆனால் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு.

சமூக நலத்திட்ட வாக்குறுதிகள்

மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஏழை, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். தீபாவளி பண்டிகையின்போது சேலை வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

இறுதியாக, “அ.தி.மு.க. மக்கள் கட்சி; உங்கள் கட்சி; மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்சி புரியும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்! என்று உரையை முடித்த அவர், பை-பை (Bye-Bye) ஸ்டாலின் என்றும் கிண்டலடித்துள்ளார்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?