தேவையான பொருள்கள்: விதைப் பந்துகள் தயாரிக்க நன்கு தூளாக்கப்பட்ட களிமண், மட்கிய தொழுவுரம், தேவையான மர விதைகள், பருத்தி நூல் அல்லது திரவத்தாள்.
அளவு: களிமண் தூள் 5 பங்கு, தொழுவுரம் 3 பங்கு, விதை ஒரு பங்கு.
செய்முறை: களிமண்ணையும் தொழுவுரத்தையும் நீர் சேர்த்துக் கலந்து மாவு உருண்டையைப் போலப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு உருண்டையின் நடுவில் விதையை வைத்து மூடி, பருத்திநூல் அல்லது திரவத்தாளால் சுற்றி, முதலில் நிழலில் உலர்த்த வேண்டும்.
அடுத்து வெய்யிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு தேவையான இடங்களில் போட்டு விடலாம். மழை பெய்ததும் இந்த உருண்டைகள் நனைந்து விதைகளை முளைக்க வைக்கும். விதைப்பந்து மூலம் முளைக்கும் விதைகளுக்கு அந்த மண்ணில் இருக்கும் ஈரமே போதுமானது.
நாம் மெனக்கெட்டு நீரை ஊற்றத் தேவையில்லை. விதைப்பந்துகளைப் பயன்படுத்தித் தரிசு நிலங்களில் காடுகளை உருவாக்கலாம். எவ்விதப் பராமரிப்பும் இதற்குத் தேவையில்லை. இம்முறையில் மரங்களை எளிதாக வளர்க்கலாம். வேம்பு, புங்கன், கொடுக்காய்ப்புளி, புளி, இலவம் போன்ற நாட்டுமர விதைகளே சிறந்தவை.