அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..!

“அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..’’

“அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுது..’’

“இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“நன்கு புளித்த மோர் 5 லிட்டர், இளநீர் ஒரு லிட்டர், அரப்பாகப் பயன்படும் உசிலைத் தழை 1-2 கிலோ, பழங்கள் அரை கிலோ..’’

“சரிண்ணே.. எப்பிடித் தயாரிக்கிறதுன்னு சொல்லுண்ணே?..’’

“புளித்த மோரையும் இளநீரையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, பழங்களையும், இடித்த உசிலைத் தழைகளையும் நைலான் வலையில் போட்டுக் கட்டி, மோர் இளநீர்க் கலவைக்குள் வைத்து, ஏழு நாட்களுக்குப் புளிக்க விட்டால் அரப்பு மோர்க் கரைசல் தயாராகி விடும்..’’

“இதை எப்பிடிப் பயன்படுத்துறதுன்னு சொல்லுண்ணே..’’

“இந்தக் கரைசலை வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் என்னுமளவில் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் பயிர்களுக்குத் தெளிக்கலாம்..’’

“சரிண்ணே.. இதனால என்ன நன்மைண்ணே?..’’

“அரப்பு மோர்க் கரைசல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. பயிர்களைத் தாக்க விடாமல் பூச்சிகளை விரட்டுகிறது.. பூசண நோய்களைத் தாங்கி வளரும் ஆற்றலைப் பயிர்களுக்கு அளிக்கிறது..’’

“நல்லதுண்ணே.. நன்றிண்ணே..’’


பசுமை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்து?