My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

கேரளாவில் களைகட்டும் விவசாயிகளின் ’கடம்பன் மூத்தன்’ கலைப் பயணம்!

டம்பன் மூத்தன் என்பது தெய்வ வழிபாடு ஒன்றுமல்ல; அதுவொரு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்கானிக் தியேட்டர் என்ற கலைக் குழுவின், வேளாண்மையைப் பரைசாற்றும் ஒரு அற்புதப் படைப்பு.

ஆண்டுதோறும் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கி, இடுக்கி வரை கிராமங்கள்தோறும், மண்ணை நேசிப்போம்; விவசாயத்தைக் காப்போம்! என்ற முழக்கத்துடன் கூடிய ஒரு நடனப் பயணம்!

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இந்தப் பயணத்தில் சாதி இல்லை; மதம் இல்லை; இனம் இல்லை. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்; யார் வேண்டுமானாலும் கடம்பன் மூத்தன் நாடகக் குழுவில் வேடம் தரிக்கலாம்.

இந்தப் பயணம், ஒவ்வொரு நாளும் சூரிய உதயமாகும் அதிகாலைப் பொழுதில்தான் நடக்கும். அந்த வகையில் கொச்சி அருகே கலமச்சேரியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெளியத்துநாடு என்னும் கிராமத்தில் இன்று மலர்ந்தது.

தேநீர்க் கடைகள் எதார்த்தமாக திறந்திருக்க, அங்கு மக்கள் எதார்த்தமாக கூடியிருக்க, அப்போது எங்கிருந்தோ தூரத்தில் உதயமானார் கடம்பன் மூத்தன்!

அந்த அதிகாலைப் பொழுதில் அவரைப் பார்த்தவர்களுக்கு அதுவொரு கடவுளே நேரில் ஜொலித்ததுபோல ஒரு அற்புதக் காட்சி. உடனே அங்கு சூழல் மாறியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, குதூகலத்தில் கடம்பன் மூத்தனை வரவேற்று, அவர்களும் ஆடிப்பாடினர். பின்னர் வயல்வெளிகளில் உலா வந்த கடம்பன் மூத்தன், ஆங்காங்கே கூடியிருந்த கிராம வாசிகளையும் உற்சாகப்படுத்தினார்.

ஒரு விவசாயக் குடும்பத்தில், வெற்றியைக் கொண்டாட வேண்டுமே தவிர, பேராசைக்கு மட்டும் இடமளித்துவிடக் கூடாது என்பது கடம்பன் மூத்தன் சித்திரம் கூறும் பாடம்.

குடும்பத்தில் நால்வர் இருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணமிருக்கம். ஆனால் வேளாண்மையை மட்டும் எக்காரணத்திலும் விட்டு வெளியேறிவிடக் கூடாது; அதற்கு ஒருவர் இடையூறு செய்தால், எப்படி சொன்னால் புரியுமோ, அப்படி அன்பாகவும், பன்பாகவும், பாசமாகவும், தேவைப்பட்டால் கோபமாகவும் பாடம் சொல்லியாவது, வேளாண்மையைக் கட்டிக்காக்க வேண்டும் என்கிறது இந்த சித்திரம்.

ஊர்க்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டு கடைசியாக வெளியத்துநாடு கிராமத்தில் இருந்து கடம்பன் மூத்தன் குழு வெளியேறியபோது, அங்குள்ள மக்கள் மனதில் ஒன்றே ஒன்று மட்டும் நிழலாடிக் கொண்டிருந்தது.

அது என்னவென்றால், நாம் அனைவரும் இறுதியில் இந்த மண்ணின் பிள்ளைகளே… என்பது தான்.!


-மகேஷ்வர சீதாபதி

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!