நீடித்த மற்றும் நிலையான வேளாண்மை, வறட்சியை வெல்லும்; வறட்சியைக் கொல்லும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர்…
கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தில், சாலை வசதி கூட முறையாக இல்லாத கிராமம் தீர்த்தா. இங்குள்ள மக்கள், சரியான மழைப்பொழிவு இன்றி வேளாண்மை வறண்டு, வாடிய நாட்கள் நிறைய.
இந்த நிலையில், அந்த ஊர் பெண்கள் 15 பேர் ஒன்று சேர்ந்து, பீபி பாத்திமா என்ற பெயரில், 2018 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைத் தொடங்கினர். அவர்களுக்குத் தெரிந்ததோ விவசாயம் மட்டும்தான். அதனால், வேளாண்மையில் எவ்வாறு வெல்லலாம் என்று யோசித்தபோது, அவர்களின் பாட்டன் – முப்பாட்டன் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்ற மானாவாரி விவசாயம் கைக் கொடுத்தது.
ஆரம்பத்தில், கம்பு உள்ளிட்ட பல்வேறு தானியங்களைப் பயிர் செய்தபோது, சரியான வளர்ச்சி இல்லை. பிறகு, விதைகளில் தொடங்கி, அறுவடை வரை, அக்கால நடைமுறையை விடாமல் கையாண்டனர். விளைவு, அவர்கள் பயிரிட்ட மற்றும் தற்போது பயிரிட்டு வருகிற கம்பு சாகுபடி பெரும் வெற்றியைத் தந்துவிட்டது.
அவர்கள் தங்கள் பயிர் முறையை, தங்களோடு இல்லாமல், சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கும் எடுத்துக் கூறினர்.
மேலும் உள்ளூர் விதைகளைப் பாதுகாக்க, விதை வங்கி ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனால், கம்பு மீண்டும் இப்போது உள்ளூர் உணவாகி விட்டது. கால்நடைகளுக்கும் தீவனமாகிறது.
மழைக் காலங்களில் மட்டும், அதற்கு ஏற்ற வேளாண்மையைக் கையாண்டு வரும் இவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களை மதிப்புக்கூட்டிச் சந்தைப் படுத்தி நல்ல இலாபமும் பார்த்து வருகின்றனர்.
இப்படி, காலநிலை மாற்றத்தையும், உணவுப் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ள, இவர்கள் கையாண்ட முயற்சிக்கு, ஐக்கிய நாடுகள் சபையே தலைவணங்கி விட்டது.
ஆண்டுதோறும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், Equator Initiative Award என்னும் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான விருது, காலநிலை நடவடிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் போக்கு என்ற தலைப்பில் வழங்கப்பட்டது. இதற்கு உலகளவில் 103 நாடுகளில் இருந்து 700 விண்ணங்கள் பெறப்பட்டன. அதில் தேர்வு செய்யப்பட்ட 10 குழுக்களில் ஒன்றுதான் கர்நாடகத்துக்கு இந்த 15 பெண்களும்.
சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் தூர உற்றுநோக்கும் பாங்கு மட்டும் இருந்தால், ஒரு சிறிய கிராமம்கூட உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு இவர்களே சான்று!