My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் இங்கே பார்க்கலாம்.

நாற்றுக்கருகல் நோய்
விளம்பரம்:


இந்நோயின்  அறிகுறிகள்,  நாற்றுகளின்  இலைகள்,  தண்டுகள் அல்லது  ஒட்டுக் கட்டிய செடிகளில் காணப்படும். இலைகளில் சிறிய நீர்த் திவலைகள்  போன்ற பழுப்புப் புள்ளிகள் தோன்றும். பிறகு, அவை ஒன்றாக இணைந்து பழுப்பாகவும், அடுத்துக் கறுப்பாகவும் மாறும். தண்டிலும் இத்தகைய நீர்த்திவலைகள் தோன்றிக் கறுப்பாக மாறி விடும். இந்தப் பாதிப்பானது தண்டு முழுவதும் ஏற்படும். இதனால் நாற்றுகள் வாடி விடும்.

கட்டுப்படுத்துதல்: பாதிக்கப்பட்ட செடிகளை எடுத்து அழித்து விட வேண்டும். ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது 0.2 சதவீத காப்பர் ஆக்சிகுளோரைடு கலவையை, மழைக்கு முன்னும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

கருங்காய் நோய்

இந்நோய், காய் முதல் பழம் வரையிலான எந்த நிலையிலும் தாக்கும். காய் அல்லது பழத்தின் மேல், நீர்க் கோர்த்த நிலையில், வட்டமான பழுப்புப் புள்ளிகள் தோன்றி, பழம் முழுவதும் பரவும். காய்கள், கரும் பழுப்பு அல்லது கறுப்பாக மாறி விடும். உட்பகுதியும் கறுப்பாக மாறுவதால் விதைகள் அழுகி விடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கட்டுப்படுத்துதல்: காய்ந்த மற்றும் நோயுற்ற காய்களை, பழங்களை அகற்ற வேண்டும். நிலத்தில் நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். நிழலைக் குறைத்து, நல்ல காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரு சதவீத போர்டோ கலவையை மழைக்கு முன் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

கேங்கர் நோய்

இந்நோய், மரத்தின் முக்கியத் தண்டு மற்றும் விசிறிக் கிளைகளில் காணப்படும். தொடக்கத்தில் நீர்க் கோர்த்த புள்ளிகள் தோன்றும். பிறகு, சிவப்பாக மாறும். இந்தப் பகுதியிலிருந்து செந்நிறத் திரவம் வடிந்து காய்ந்து விடும். இதனால், மரத்தின் நடுப்பகுதியில் பிளவு உண்டாகி ஒடிந்து விடும். இந்நோய்க்குக் காரணமான பூஞ்சையானது, கருங்காய் நோய்த் தாக்கிய காய்கள் மற்றும் மண்ணிலிருந்து மரத்துக்குப் பரவும்.

கட்டுப்படுத்துதல்: இதைக் கட்டுப்படுத்த, கருங்காய் நோயால் தாக்குண்ட காய்களைக் கண்டறிந்து அகற்றி அழிக்க வேண்டும். நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். இந்நோயின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சிறிதளவு செதுக்கி விட்டு, போர்டோ பசையைத் தடவ வேண்டும்.

மரக்கரி காயழுகல் நோய்

இந்நோயின் தாக்கம் கோடையில் அதிகமாக இருக்கும். இதனால், காய் முதல் பழம் வரையில் பாதிப்பு ஏற்படும். காய், பழம், தண்டு அல்லது நுனிப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் உண்டாகும். பிறகு, பழுப்பு நிறமாக மாறி விடும். காய்கள் மற்றும் பழங்களின் மேல் பூசண விதைகள் தோன்றுவதால், கரும்பாசி படர்ந்ததைப் போலத் தெரியும்.

கட்டுப்படுத்துதல்: முறையான உத்திகள் மூலம் மரங்களை நன்கு பராமரிக்க வேண்டும். நோயுற்ற காய்கள் மற்றும் பழங்களை அகற்ற வேண்டும். ஒரு சதவீத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும்.

நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் குழாய் அடைப்பு நோய்

நாற்றுகளின் மேல் நுனியிலிருந்து இரண்டு அல்லது மூன்றாம் இலை, மஞ்சளாகி வெளிரிப் போகும். நோயுற்ற இலைகள் சில நாட்களில் விழுந்து விடும். நோயுற்ற இலைகளில் வெண்பூசணம் வளர்ந்து பரவும். பாதிக்கப்பட்ட கிளைகளை நீளவாக்கில் வெட்டிப் பார்த்தால், குழல் கோடு பகுதியில் கரும் கீற்றுகள் காணப்படும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்ற கிளைகளை அகற்றி விட்டு, நோய் அறிகுறி தோன்றிய பாகத்திலிருந்து 30 செ.மீ.க்கு மேல் வெட்டி எடுத்து விட்டால் நோய் வராமல் தடுக்கலாம். நோய்க்கு எதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்களை வளர்க்க வேண்டும்.

வெள்ளை நூற்கருகல்

இலைகள், இளம் தண்டுகள் மற்றும் கிளைகளின் மேற்பரப்பில் பூசண இழைகள் நூலைப் போல நீளமாகத் தோன்றும். அதனால், இலைகள் கறுப்பாக மாறி, கிளைகளில் இருந்து பிரிந்து, பூசண இழைகளால் பின்னப்பட்டுத் தொங்கும்.

கட்டுப்படுத்துதல்: நிழல் அதிகமாக இருக்கக் கூடாது. இதைக் கட்டுப்படுத்த, ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது ஒரு லிட்டருக்கு 3 கிராம் வீதம் கலந்த காப்பர் ஆக்சிகுளோரைடு கலவையை, மழைக்கு முன் தெளிக்க வேண்டும். தேவைப்படின், 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

செர்லி வாடல் நோய்

இதற்கு இளங்காய்கள் வாடல் நோய் என்னும் பெயருமுண்டு. கோகோ பிஞ்சுசுகளில் இந்நோயின் தாக்குதல் தீவிரமாக இருக்கும். ஜனவரி முதல் மே வரை அதிகமாக இருக்கும். நோயுற்ற பிஞ்சுகள் கருகி உருமாறி வாடி, கீழே விழாமல் மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். பூச்சி, பூசணத் தாக்குதல், சத்துப் பற்றாக்குறை, காய்கள் அதிகமாகக் காய்த்தல் ஆகியன, இந்த நோய் பரவுவதற்கான காரணங்களாகும்.

கட்டுப்படுத்துதல்: எதனால் இந்நோய் ஏற்பட்டது என்பதை அறிந்து, அதற்கேற்ற கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.


PB_K ARUN KUMAR

கா.அருண்குமார்வாசனை மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் துறை,  தோட்டக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை-641003.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


உங்கள் கருத்து?

படிக்கலாம்:

  • சிறு மக்காச்சோள சாகுபடி!

  • வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

  • எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

  • விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

  • இலவங்கப் பட்டை மர சாகுபடி!

  • பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!

  • எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

  • எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

  • பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!