உளுந்து (Block gram), பயறுவகைப் பயிர்கள் சாகுபடியில் முதன்மைப் பயிராக விளங்கி வருகிறது. இதுவொரு வெப்ப மண்டலப் பயிராகும். தென்னிந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நம் அன்றாட உணவில் உளுந்தின் பங்களிப்பு அவசியமானது. உளுந்து பலவகையான உணவுகளில் பயன்படுகிறது.
இந்த உளுந்தில் (Block gram), உடலுக்குத் தேவையான புரதச்சத்து, தானிய வகைகளில் இருப்பதை விட அதிகமாக உள்ளது. ஆனால், உளுந்து சாகுபடியும் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், உளுந்து விளைச்சலைப் பெருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். உளுந்தில் பல்வேறு இரகங்கள் உள்ளன. அவற்றில் வம்பன் உளுந்து 11 இரகம் குறிப்பிடத்தக்கது.
வம்பன் 11 உளுந்தின் சிறப்புகள்
இந்த இரகத்தை, ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், மார்கழி- தைப்பட்டம், சித்திரைப் பட்டம் என, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது, குறைந்த நாட்களில், குறைந்த இடுபொருள் செலவில், அதிக இலாபத்தைத் தரக்கூடியது.
இந்த இரகம், மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரும் திறன் மிக்கது. காய்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடைவதால், இயந்திர அறுவடைக்கு ஏற்றது. இந்த இரகத்தைத் தமிழ்நாட்டில், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.
விதைப்பு
ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்து, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூசணக்கொல்லியில் நேர்த்தி செய்த விதைகளை, 24 மணி நேரம் கழித்துத் தான், உயிர் உரங்களில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, 600 கிராம் ரைசோபியம் மற்றும் 600 கிராம் பாஸ்போபாக்டீரியா மூலம் நேர்த்தி செய்து, 15-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். அல்லது இந்த ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை, தலா 2 கிலோ வீதம் எடுத்து, 25 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, கடைசி உழவின் போது நிலத்தில் இட வேண்டும். பின்பு, 30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும்.
உர நிர்வாகம்
விதைப்பதற்கு முன், பரிந்துரை செய்த உரங்களை அடியுரமாக நிலத்தில் இட வேண்டும். அதாவது, ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்தைத் தரும் 22 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்தைத் தரும் 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 10 கிலோ சாம்பல் சத்தைத் தரும் 17 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ், 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக இட வேண்டும்.
மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக இடும் போது, கந்தகச்சத்தைத் தனியாக இட வேண்டிய அவசியமில்லை. ஆனால், டிஏபி என்னும் டை-அம்மோனியம் பாஸ்பேட்டை இடும் போது, பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை, 45 கிலோ ஜிப்சம் மூலம் தர வேண்டும். இந்த உரங்களை ஒன்றாக இடுவதன் மூலம் விளைச்சல் கூடும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தும் முளைப்பு நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும் அவசியம் தர வேண்டும். பிறகு, காலநிலை மற்றும் மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் தர வேண்டும். செடிகள் பூக்கும் போதும் காய்க்கும் போதும், தகுந்த நீர் நிர்வாகம் முக்கியமாகும். பூக்கும் பருவம் முதல் காய்கள் முற்றும் பருவம் வரை, நிலத்தைக் காய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
களை நிர்வாகம்
களைகளைக் கட்டுப்படுத்த, விதைத்த மூன்றாம் நாள், 1.3 லிட்டர் பென்டிமெத்திலின் களைக்கொல்லி, 200 லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பின்பு, விதைத்த 20-25 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். அல்லது விதைத்த 15-ஆம் நாள், ஏக்கருக்கு 200 மி.லி. இமாஸ்சிதபயர் களைக்கொல்லி வீதம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியைப் பயன்படுத்தாத நிலையில், விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும்.
மகசூலைக் கூட்டும் த.வே.ப.க. பயறு ஒன்டர்
தமிழ்நாட்டில் பெரும்பாலான மானாவாரி விவசாயிகள், பயறு வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிக மகசூலை எடுக்க, சரியான உத்திகளைக் கையாள வேண்டும். இவ்வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பயறு ஒன்டர் என்னும் நுண்ணூட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, பயறுவகைப் பயிர்களுக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டராகும்.
இது, வறட்சியைத் தாங்கி வளரும் திறனைப் பயிர்களுக்குத் தருகிறது. பூத்த பிறகு இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தே விதைகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, த.வே.ப.க. பயறு ஒன்டர் மூலம் கிடைக்கும் தழைச்சத்து, இலைகளைப் பச்சையாக வைத்திருந்து அதிக மாவுச்சத்து உற்பத்திக்கு உதவுகிறது. பயிரில், பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மணியின் எடை கூடவும், பூக்கள், பிஞ்சுகள் உதிர்வது குறைந்து, மகசூல் 20 சதவீதம் வரை உயரவும் உதவுகிறது.
எனவே, இந்த பூஸ்டரை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவம் கலந்து இலைவழியாக அளிக்க வேண்டும். இது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களில் இடைக்கும்.
இலைவழி ஊட்டத்தின் பயன்கள்
பயறு வகைகளில் புரதம் அதிகமாக இருப்பதால், இந்தப் புரத மாற்றத்துக்கு மணிச்சத்து மிகவும் அவசியம். இது, நிலத்திலிருந்து கிடைப்பதை விட இலைகள் மூலம் எளிதில் கிடைக்கும். மேலும், பயிர்கள் பூத்த பிறகு, வேர்கள் மூலம் சத்துகளை எடுக்கும் தன்மையும், நிலத்திலிருந்து சத்துகள் கிடைப்பதும் குறைந்து விடும். எனவே, இலைகள் மூலம் தரப்படும் தழைச்சத்து, மணிச்சத்துள்ள டிஏபி கரைசல் நல்ல பயனைத் தரும்.
பயிர்ப் பாதுகாப்பு
காய்த்துளைப்பான் தாக்குதல், பொருளாதாரச் சேத நிலையை எட்டினால், 5 சத வேப்பங் கொட்டைச் சாறு கரைசலைத் தெளிக்கலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, செடிகளின் வேர்ப்பாகம் நனைய ஊற்ற வேண்டும்.
மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், இவற்றைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 500 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 500 மி.லி. டைமீத்தோயேட் 30 இ.சி. அல்லது 250 மி.லி. பாஸ்போமிடான் 85 WSC வீதம் தெளிக்க வேண்டும்.
அறுவடை
வம்பன் 11 உளுந்து இரகக் காய்கள் ஒரே நேரத்தில் முதிர்வதால், ஒரே சமயத்தில் அறுவடை செய்யலாம். காய்கள் 80 சதம் முதிர்ந்ததும் செடிகளை அறுவடை செய்து வெய்யிலில் காய வைத்து, மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். .
மகசூல்
ஒரு செடியில் 60-80 காய்களும், ஒரு காயில் சராசரியாக 6-8 விதைகளும் இருக்கும். எனவே, எக்டருக்கு 1,230 கிலோ உளுந்து மகசூலாகக் கிடைக்கும்.
சேமிப்பு
அறுவடை செய்த விதைகளை 10 சதவீத ஈரப்பதம் வரும் வரை காய வைக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால், முளைப்புத் திறனை விதைகள் விரைவில் இழந்து விடும். சேமிப்பின் போது வண்டுகள் தாக்காமலிருக்க, 100 கிலா விதையுடன் 1 கிலோ வேப்ப எண்ணெய் அல்லது ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணைக் கலந்து சேமித்து வைக்கலாம்.

முனைவர் சி.இராஜாபாபு,
இணைப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

