இதுபற்றி தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலையில்லாத மற்றும் சுயதொழில் தொடங்க விரும்பும், வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கலாம்.
ஆயிரம் உழவர் நல சேவை மையங்களைத் தொடங்க, நடப்பு நிதியாண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது. 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது.
20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்தத் திட்டத்தில் இணைந்து, 10 இலட்சம் முதல் 20 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில், சேவை மையங்களை தொடங்கலாம்.
அதற்கு முறையாக வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து, கடன் கிடைத்ததும், உரிய ஆவணங்களுடன் AGRISNET இணையதளத்தில் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 6 சதவீத மானியம், அதாவது 3 முதல் 6 இலட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும்.
உழவர் நல சேவை மையங்களைத் தொடங்குவோருக்கு அனைத்து உரிமங்களையும் வேளாண் மற்றும் உழவர் நலத் துறை வழங்கும். மேலும் உழவர் பயிற்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பயற்சியும் அளிக்கப்படும்.
உழவர் நல சேவை மையங்களில் விதை, உரங்கள் விற்பதோடு, விவசாயிகளுக்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் சார்ந்த ஆலோசனைகளைக் கொடுக்கலாம். வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டுதல் பற்றிய வழிகாட்டுதல்களையும் தரலாம். இந்த வாய்ப்பை வேலையில்லாத பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.