₹30,000 காப்பீட்டுக் கட்டணம், ₹7 இலட்சம் பயிர் இழப்பு, ஆனால் கிடைத்த இழப்பீடோ வெறும் ₹1,274 மட்டுமே…
ஏழு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுக்கு, காப்பீட்டு பிரிமியம் தொகை 30 ஆயிரம் ரூபாயைக் கூட தராமல், வெறும் 1,274 ரூபாயைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயி, அந்தத் தொகையை, அப்படியே பிரதமருக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இது மத்தியப் பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் நடந்துள்ளது.
அம்மாவட்டம் உள்பட பெரும்பாலான இடங்களில், சோயாபீன்ஸ் சாகுபடிதான் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட வறட்சியால் சுமார் 80,000 விவசாயிகள் பாதிப்படைந்தனர். அதில், மோர்தார் கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திர பிரஜாபதி என்ற விவசாயியும் அடங்குவார். அவர், 21 ஏக்கரில் சோயாபீன்ஸைப் பயிரிட்டிருந்தார்.
அதற்குக் காப்பீடாக, 6 ஆயிரம் ரூபாயை அவர் பங்கிற்குச் செலுத்தியிருந்தார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்கையும் கணக்கிட்டால், மேற்கொண்டு 24 ஆயிரம் ரூபாய் என்று, காப்பீடு நிறுவனத்துக்கு, 30,000 ரூபாய் பிரீமியமாகச் சென்றுள்ளது.
இந்த நிலையில், 21 ஏக்கரில் சோயா பீன்ஸை சாகுபடி செய்தால், சுமார் 140 குவிண்டால் மகசூல் கிடைக்க வேண்டும் என்பது எதார்த்தம்.
அப்படிக் கணக்கிட்டால், குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு என்றாலும், 140 குவிண்டால் என்கிறபோது, 7 இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் என்கிறார் பிராஜாபதி.
சரி; 50 சதவீத இழப்பைக் கணக்கிட்டாவது கொடுத்திருந்தால் கூட, மூன்றரை இலட்சம் கிடைத்திருக்க வேண்டும் என்பது அவரது வாதம். ஆனால், காப்பீட்டு நிறுவனமான HDFC, தனக்கு வெறும் 1,274 ரூபாயை மட்டுமே கொடுத்திருப்பதாக சாடுகிறார்.
இந்த நிலைமை அவருக்கு மட்டுமல்ல; அவரைப் போல இன்னும் பல விவசாயிகளுக்கும் இதே தான்.
இதுபற்றி விவசாயிகள், அதிகாரிகளிடம் முறையிட்டால், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, முதற்கட்டமாகக் குறைவானத் தொகையே எல்லோருக்கும் வரவு வைக்கப்பட்டிருப்பதாக மழுப்புகிறார்கள் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிரஜாபதியோ, ஒரு அடி முன்னே சென்று, தனக்குக் கிடைத்த, அந்தக் காப்பீட்டுத் தொகையை, அப்படியே வரைவோலையாக எடுத்து, பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துவிட்டார். விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் திட்டங்களெல்லாம், அதிகாரிகளின் சுரண்டல்களாக மாறிவிட்டன என்று அவர் சாடினார்.
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, உரிய நேரத்தில் நியாயமான இழப்பீடு, காப்பீட்டு நிறுவனங்களின் பொறுப்புணர்வு என்றைக்கு மேம்படுகிறதோ, அன்றுதான் விவசாயிகள் பெருமூச்சு விட முடியும் என்று நொந்து சென்றார்.