மலையாளப் புத்தாண்டை வரவேற்கும் ’சிங்கம்’ மாதம் வந்து விட்டாலே, கேரளத்தில் வயல்வெளிகள் எல்லாம் பசுமைப் போர்த்திக் கிடக்கும்.
கோழிக்கோடு அருகே திரும்பும் திசையெங்கும் நெற்கதிர்கள் ஆனந்தமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. அதில் வேணு என்னும் விவசாயியின் பண்ணை மட்டும் தனித்துவமாகக் காட்சியளித்தது. யார் அந்த வேணு என்று விசாரித்தபோது தான் தெரிந்தது; அவர் வெறும் விவசாயி மட்டுமல்ல, பாரம்பரிய விதைகளின் உயிர்க் காப்பாளர் என்று.
அவரைப் பற்றிய ஒரு சிறியத் தொகுப்பு!
விதைகளில் புதைந்துள்ள பாரம்பரியம்!
பள்ளிக்கரத் தாழே இல்லம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு. இவருக்கென்று குறிப்பிட்ட அளவில் சொந்தமாக நிலம் உண்டு. இருந்தாலும், குத்தைக்கும் நிலங்களை வாங்கிப் பயிர் செய்து வருகிறார் வேணு.
இவரது நிலங்களில் ஒன்றல்ல; இரண்டல்ல; மூன்றல்ல… 70 வகையான நெல் இரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார். வேணு பயிரிடும் ஒவ்வொரு நெல்லுக்கும் ஒவ்வொரு குணமும் மரபும் உண்டு.
அவற்றில் சில…
நவரா: உடல் ஆரோக்கியத்திற்குப் பயன்படும் சிவப்பு நெல்!
இரக்தசாலி: இரும்புச் சத்து நிறைந்தது; குழந்தைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்!
பிளாக் ஜாஸ்மின்: கருநிறம் கொண்ட அரிசி இது. சில நோய்களுக்கு அருமருந்து!
கிருஷ்ண கமோத்: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி வகைகளில் முக்கியமான ஒன்று!
வரிநெல்லு: உடல் சோர்வைப் போக்கும் தன்மை கொண்ட நெல்லாகும்.
விதைப் பரிமாற்றம் – தொடரும் பசுமை மரபு!
வேணுவின் பண்ணை எப்போதுமே வளமாக இருக்கும் என்கிறார்கள், சுற்று வட்டாரத்தினர். காரணம், அவர் கடைப்பிடிக்கும் விதைப் பரிமாற்றம்.
ஒரு விதையைப் பகிர்ந்தால், அது நமக்குப் பல புதிய விதைகள் கொடுத்து விடுகிறது. இதுவே நிலையான பல்வகைச் சுழற்சியை உருவாக்கும் விதி என்பதை நன்கு அறிந்தவர் வேணு.
கோழிக்கோடுச் சுற்றுவட்டாரத்தில் கோயில் திருவிழாக்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு வேணுவின் நெல் வகைகள்தான் சிறப்புச் சேர்க்கின்றன. உள்ளூர் – வெளியூர் வேளாண் அதிகாரிகளும், அரிய நெல் விதைகளுக்கு வேணுவைத் தான் நாடுகின்றனர்.
இப்படி, கேரளாவின் பாரம்பரிய விதைப் பாதுகாவலராக விளங்கும் வேணு, தன்னிடம் விளையும் நெல்லை, தானே அரைத்து விற்பனை செய்கிறார். இதனால் நல்ல இலாபம் ஈட்ட முடிகிறது என்கிறார்.
சவால்கள் உண்டு – தடங்கல்கள் இல்லை!
வேணுவின் நிலங்களில் இரசாயனம் கிடையாது. விதைப்பு முதல் அறுவடை வரை, எல்லாமே அவரே முன்னின்று செய்கிறார்.
அரசின் வேளாண் நலத் திட்டங்கள் குறைவாகவே கைக் கொடுத்தாலும், எனது விடமுயற்சியே இந்தப் பலன்களுக்குக் காரணம் -வேணு
திக்கோடி வேளாண் நிலையம் (கிருஷி பவன்) வேணுவைப் பாராட்டி, முன்னோடி விவசாயி என்று சான்றளித்து இருக்கிறது.
நெல் இரகங்களைக் காப்பது தன்னோடு நின்று விடாமல், அடுத்தத் தலைமுறைக்கும் கடத்தப் பாடுபடுகிறார் வேணு!
தனதுப் பண்ணையில் நெல் விதைகளை வரிசைப்படுத்தி பள்ளி-கல்லூரி மாணவர்களை வரவழைத்து, மரபுகளைச் சொல்லிக் கொடுத்து மகிழ்கிறார் வேணு.
வாழ்வாதாரத்தைத் தாண்டிய வாழ்க்கை முறை!
வேணுவின் விதைக் காப்புப் பயணம், வெறும் விவசாயம் என்பதோடு முடிவதல்ல. கலாச்சாரம், விடாமுயற்சி, ஆரோக்கியம் போன்றவற்றுடன் பின்னிப் பிணைந்த வாழ்வாதாரத்தைத் தாண்டிய, ஒரு வாழ்க்கை முறை என்பதையே உணர்த்துகிறது.
அவருக்குப் பாரம்பரிய விதைக் காப்பாளர், முன்னோடி விவசாயி என்று அடுக்கடுக்காகப் பல பட்டங்களைக் கொடுத்தாலும், அடுத்தத் தலைமுறைக்கு மரபைக் கடத்தும் மாமனிதர் என்று நாமும் பட்டமிடலாமே..!