My page - topic 1, topic 2, topic 3

இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

இயற்கை வேளாண்மை

பாரத பிரதமர் நரேந்திர மோடி, தென்னிந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடீசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை, 19.11.2025 அன்று தொடக்கி வைத்தார்.

இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாகத் தயாரித்துச் சந்தைப்படுத்துவது தொடர்பான கண்காட்சியை, பிரதமர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் உரையாடினார். அப்போது, இயற்கை வேளாண்மை செய்வதில் ஏற்படும் இடர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்குவது, பயிற்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு கூறுகளில் சிறந்து விளங்கும் ஏழு விவசாயிகளுக்கு, விருது வழங்கிக் கவுரவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:

கோவை என்னும் இந்தப் புனித மண்ணில், மருதமலையில் குடியிருக்கும் முருகனை, முதலில் தலை வணங்குகிறேன். கோவை கலாச்சாரம், கனிவு, கவின் படைப்புத் திறன் ஆகியவற்றைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பூமி. இந்த நகரம், தென்னிந்திய தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம்.

தன் ஜவுளி உற்பத்தி மூலம், தேசத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் கோவை, தற்போது மேலும் ஒரு காரணத்தால் சிறப்புப் பெறுகிறது. இங்கே எம்.பி.யாக இருந்த சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று துணைக் குடியரசுத் தலைவராக இருந்து நம் அனைவருக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இயற்கை விவசாயம் விசேஷமானது. என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. இம்மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளைச் சென்று பார்த்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்றவரும், இஸ்ரோவில் சந்திரயான் திட்டத்தில் பணிபுரிந்தவரும் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்துக்கு வந்துள்ளனர்.

இவர்களின் பணி ஊக்கமளிக்கிறது. மற்றவர்களுக்கும் பயிற்சியளித்து, புதிய உத்திகளையும் வழிமுறைகளையும் கைக்கொண்டு வேளாண் தொழிலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

ஒருவேளை நான் இங்கே வராமல் இருந்திருந்தால், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் போயிருப்பேன். என் கற்றல் குறைந்து போயிருக்கும். வரும் ஆண்டுகளில் இந்திய வேளாண்மைத் துறையில் பல மாறுதல்கள் ஏற்பட உள்ளன. பாரதம், உலகளாவிய இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக மாறும் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நமது பல்லுயிர்ச் சூழல் புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இளைஞர்களும் தற்போது விவசாயத்தை விரும்பிச் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், ஊரகப் பொருளாதாரம் மேம்படும் என அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

கடந்த, 11 ஆண்டுகளில் தேசத்தின் ஒட்டுமொத்த வேளாண் துறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நமது வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகி இருக்கிறது. விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டிய அனைத்து வழிகளையும் விவசாயிகளுக்கு அரசு திறந்து விட்டிருக்கிறது.

கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக மட்டும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கால்நடைகளைப் பராமரிப்போர்க்கும், மீன்களை வளர்ப்போருக்கும் வேளாண் கடன் அட்டை கிடைத்திருப்பதால், அவர்களும் நிறைவான பயன்களை அடைந்துள்ளனர். உயிர் உரங்கள் மீதான, ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த மேடையில் இருந்து சற்று முன்னர், தேசத்தின் அனைத்து மூலையில் இருக்கும் விவசாயிகளுக்கும், 21-ஆம் தவணையாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இலட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில், பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மையைப் பரவலாக்குவது என்பது, 21-ஆம் நுாற்றாண்டு வேளாண்மையின் தேவை. தேவை அதிகரிப்பால், வயல்களில் இரசாயனங்களின் பயன்பாடு விரைவாக அதிகரித்து வருகிறது. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகப் பயன்பாடு காரணமாக, மண்வளம் குறைகிறது. மண்ணின் ஈரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாகுபடி செலவினமும், ஒவ்வோராண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வு என்னவெனில், பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மண்வளம் பொருட்டும், பயிர்ச் சத்துகளின் நீள் உயிர்ப்பின் பொருட்டும், இயற்கை வேளாண் பாதையில் நாம் முன்னேறியே ஆக வேண்டும். இதுவே நம் தொலைநோக்கு; அவசியத் தேவையும் கூட. அப்போது தான் வரும் தலைமுறைக்கு நமது உயிரி பன்முகத் தன்மையைப் பாதுகாத்து அளிக்க முடியும்.

இயற்கை வேளாண்மையானது, சூழல் மாற்றம், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நமக்குப் பேருதவியாகவும், மண்வளத்தைச் சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்களில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இம்மாநாடு இந்த இலக்கில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கவுள்ளது.

நமது அரசு, பாரத்தின் வேளாண் பெருமக்கள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள ஏராளமாக ஊக்கமளித்து வருகிறது. இயற்கை விவசாயத் தேசிய இலக்கைத் தொடக்கி வைத்ததால், இலட்சோப லட்சம் விவசாயிகள் ஒன்றாக இணைய முடிந்தது. இதன் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை, தென்னிந்தியா முழுவதும் காண முடிகிறது. தமிழகத்திலும் 35 ஆயிரம் எக்டர் நிலத்தில் இயற்கை வேளாண்மை நடைபெற்று வருகிறது.

இயற்கை வேளாண்மை, பாரதத்துக்குச் சொந்தமான சுதேசி கருத்து. இதை நாம் எங்கிருந்தும், யாரிடமிருந்தும் பெறவில்லை. இறக்குமதி செய்யவில்லை. நம் பாரம்பரியத்தில் பிறந்தது. நம் சுற்றுச்சூழலுக்கு உவப்பானது, உகந்தது.

தென்னிந்திய விவசாயிகள், இயற்கை வழி வேளாண்மையின் பாரம்பரியங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்றவற்றை நிரந்தரமாக உள்வாங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இயற்கை வேளாண்மையோடு சிறுதானிய சாகுபடியையும் இணைக்க வேண்டும். இவை பூமித்தாயின் பாதுகாப்புக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்கின்றன.

நம் தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு, தேனும் தினைமாவும் படைக்கப்படுகின்றன. தமிழகத்தில் கம்பு, சாமை, கேரளம் மற்றும் கர்நாடகாவில் இராகி, தெலுங்கு மக்களிடம் சப்ஜா, ஜொன்னா ஆகியன, பல தலைமுறைகளாக நம் உணவுப் பழக்கத்தோடு ஒன்று கலந்தவை.

நம்முடைய அரசின் முயற்சி என்னவெனில், நமது இந்த சூப்பர் உணவானது, உலகச் சந்தைக்குச் சென்று சேர வேண்டும். அதற்கு இயற்கை வேளாண்மை, இரசாயனமற்ற வேளாண்மை ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.

எனவே தான், இம்மாநாட்டில், இதோடு தொடர்புடைய விவாதங்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறேன். ஒற்றைப் பயிருக்குப் பதிலாக, பல்வகைப் பயிர்கள் இருக்க வேண்டும் என்பதே எனது ஆழ்ந்த விருப்பம். இதற்கான கருத்தாக்கம், உத்வேகம் தென்பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன.

கேரளம் மற்றும் கர்நாடக மலைப் பகுதிகளில் பல்லடுக்கு வேளாண்மை செய்யப்படுகிறது. ஒரே வயலில் தென்னை, பாக்கு, பழ மரங்களும், ஊடுபயிராக மசாலா பொருள்கள், மிளகு போன்றவையும் பயிர் செய்யப்படுகின்றன. சிறிய இடத்தில் இத்தனை பயிர்களை விளைவிக்க முடியும். இதுதான் இயற்கை வேளாண்மையின் அடிப்படைக் கோட்பாடு.

இந்த வேளாண் மாதிரியை, இந்தியா முழுக்கக் கொண்டு செல்ல விரும்புகிறோம். இதைச் செயல்படுத்த வேண்டும் என மாநிலங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்.

தென்னிந்தியா, விவசாயத்தின் வாழும் பல்கலைக் கழகமாக விளங்கி வருகிறது. உலகின் மிகப் பழமையான, இன்றும் செயல்பட்டு வரும் அணைகள் இப்பகுதியில் உள்ளன. 13-ஆம் நுாற்றாண்டில் காலிங்கராயன் கால்வாய் உருவாக்கப்பட்டது. கோயில்களில் பரவலாக்கப்பட்ட நீர்ச் சேகரிப்பு முறைகள், குளங்கள் நீர் நிலைகள், முன் மாதிரியாக விளங்குகின்றன.

இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவியல் சார்ந்த நீர்ப் பொறியியல் மேலாண்மை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேசத்திலும் சரி, உலகிலும் சரி, இயற்கை வேளாண்மைக்குத் தலைமை ஏற்பது எனில், அது இந்த நிலப்பகுதி தான் என்பது என் அசையாத நம்பிக்கை.

வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக, வருங்கால விவசாயச் சூழல் அமைப்பினை உருவாக்க, நாம் அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும். நம் நாட்டின் அனைத்து விவசாயிகள், தமிழக விவசாயப் பிரதிநிதிகளாகக் கூடியிருக்கும் வேளாண் துறை சகோதர சகோதரிகளான நீங்கள் அனைவரும், ஒரு ஏக்கர் ஒரு பருவம் என்பதில் இருந்து தொடங்குங்கள்.

அதாவது, ஒரு பருவத்தில், ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்குங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பயன்களைப் பொறுத்து, இயற்கை விவசாயத்தை விரிவாக்கம் செய்யுங்கள். இயற்கை விவசாயத்தை, வேளாண் பாடத் திட்டத்தில் சேருங்கள். கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளின் வயல்களை உங்களின் பரிசோதனைக் கூடங்களாக மாற்றுங்கள் என, அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் எப்படியாவது இயற்கை விவசாயத்தை, அறிவியல் சார்பு இயக்கமாக ஆக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்தில், மாநில அரசுகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் மன்றங்களின் பங்களிப்பு மகத்தானது. கடந்த சில ஆண்டுகளில், பத்தாயிரம் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாகியுள்ளன. உழவர் உற்பத்தியாளர் மன்றங்களின் உதவியோடு, விவசாயிகளின் சிறு சிறு குழுக்களை உருவாக்கியுள்ளோம்.

இவர்களுக்குச் சுத்திகரித்தல், பதப்படுத்துதல், சிப்பமிடல் போன்ற வசதிகளைச் செய்து தர வேண்டும். மின்னணுச் சந்தை, இணையவழிச் சந்தையில் நேரடியாக இணைக்க வேண்டும். இவற்றின் வாயிலாக இயற்கை விவசாயிகளுக்கு மேலும் இலாபம் கிடைக்கும் நிலை உண்டாகும்.

நமது விவசாயிகளின் பாரம்பரியமான ஞானம், அறிவியலின் பலம், அரசு ஆதரவு என்னும் இம்மூன்றும் இணையும் போது, விவசாயிகள் வளம் பெறுவர், தன்னிறைவு அடைவர். நம் பூமித்தாயும் நலமாக இருப்பாள்.

எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. மிகப்பெரிய நம்பிக்கை. இம்மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்குப் புதிய திசையைக் காட்டும். இங்கே பிறக்கும், புதிய கருத்துகள் மற்றும் எண்ணங்கள் மூலமாகப் புதிய தீர்வுகள் பிறக்கும். அந்த நம்பிக்கையோடு உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


மு.உமாபதி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

  • கரிசல் நிலம்!