காலக்கெடு நீட்டிக்கப்பட்ட போதிலும், நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு 18 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது.
அம்மாவட்டத்தில் மொத்தம் 79 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்துள்ளது. ஆனால் 13,820 ஹெக்டேர் பயிர் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு அவகாசம், ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து, கடந்த 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை.
இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, விவசாயிகளின் கோரிக்கைகளை, காப்பீடு நிறுவனங்கள், முந்தைய காலங்களில் சரிவர நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது. மற்றொன்று, திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் பம்புசெட்டுகளை கொண்டுப் பருவக் காலத்துக்கு முன்னதாகவே விவசாயிகள் சாகுபடியை முடிப்பதால், அவர்களுக்கு மழை வெள்ள அபாயம் நீங்குகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 வேளாண் மண்டலங்களில், 5இல் மட்டுமே சாகுபடி தாமதமாக நடக்கும். அதனால் அவர்கள் மட்டுமே பயிர்க் காப்பீட்டின் அவசியத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மொத்தத்தில், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 8 சதவீதம் மட்டுமே இந்தாண்டு காப்பீடு நடந்துள்ளது.
அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் 41 சதவீதம் ஹெக்டேர் அளவிலான பயிர், காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காரணம், அங்கு காவிரிநீரை எதிர்நோக்கி விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்வதால், அவர்களுக்கு மழை வெள்ள அபாயம் உள்ளது.