விழுப்புரம் மாவட்டத்தில் கொய்யா விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைச்சலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோலியனூர், கண்டமங்கலம், மேல்மலையனூர், செஞ்சி, ஒலக்கூர் பகுதிகளில், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் பழங்கள், உள்ளூர் சந்தை மட்டுமின்றி சென்னை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கொய்யா பழங்கள், தற்போது 10–15 ரூபாய்க்கு விற்கப்படுவதாகத் தெரிகிறது.
இதனால் உற்பத்தி செலவு, பூச்சி மருந்து மற்றும் ஆள்கூலிக்குக் கூட, கொள்முதல் விலை இல்லை என்பது விவசாயிகளின் கவலை. இதனால் பழங்களை அறுவடை செய்யாமல், அப்படியே விட்டுவிடும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இப்படி விலை வீழ்ச்சி ஏற்படும் சூழ்நிலையில், கொய்யாவைப் பதப்படுத்தி வைக்க, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு நிலையத்தை தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய, அரசு நிவாரண உதவிகளை செய்துதர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.