போலியான விதை, உரம், பூச்சி மருந்துகள் விற்பனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். எனவே அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் ஐசிஏஆர் (ICAR) உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் தலைமையேற்றுப் பேசிய அமைச்சர், அண்மையில் ஒரு பூச்சி மருந்து, முழு சோயாபீன் பயிர்களையும் அழித்து, நூற்றுக் கணக்கான விவசாயிகளைத் திண்டாட விட்டதை, தாமே நேரடியாகக் கண்டதாகக் கூறினார்.
அப்போது போலியான பொருள்களைத் தடுக்க அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகள்!
- நாடு முழுவதும் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும்.
- தரமற்ற பொருள்களை விற்கும் ஆலைகள், கடைகளைக் குறிவைக்க வேண்டும்.
- விதிகளை மீறுவோர் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விவசாயிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை; அதன்படி ஒவ்வொரு புகாருக்கும் விரைவாகத் தீர்வு அளித்து வருகிறோம் என்றார். தவறு நடந்தால் அதை அனுமதிக்கக் கூடாது; விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுவது, நமது பொறுப்பு என்று அப்போது அவர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.
போலி நிறுவனங்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் திடீர் ஆய்வுகளுக்கும், விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தவும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.