My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

களர் உவர் நிலங்களும் பயிர்ச் சத்துகளும்!

வர் நிலங்களில் பயிர் விளைச்சல் பல விதங்களில்  பாதிக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக அமைவது, செடிகளில் ஊட்டகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாகும்.

செடிகளுக்குத் தேவைப்படும்  சத்துகள் மொத்தம் பதினாறு. இவற்றில் சில அதிகளவில் தேவைப்படுகின்றன. இவற்றைப் பேரூட்டச் சத்துகள் என்று குறிப்பிடுகிறோம். கரிமம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மக்னீசியச் சத்து, கந்தகச் சத்து ஆகியன இதில் அடங்கும். மீதமுள்ள 7 சத்துகளான இரும்பு, மங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரைடு மிகச் சிறிதளவே தேவைப்படுவதால், இவை நுண் சத்துகள் எனக் கூறப்படுகின்றன.

உவர் நிலம்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

உவர் நிலத்தில், களர் சோடியம், சுண்ணகம், மக்னீசியம், குளோரைடு சல்பேட், போரான்  போன்ற அயனிகள் அதிகமாக அமைந்துள்ளன. இதனால், செடியில் ஊட்டகம் அனுகூலமாக அமையாமல் போய் விடுகிறது.

உவர் நிலத்தில், பெய்கின்ற மழைநீரில் அல்லது பாய்ச்சப்படும் பாசனநீரில் உப்புகள் கரைந்து விடுவதால், வேர்கள் நீரை உறிஞ்சுவது கடினமாகி விடுகிறது. அதாவது, பயிர்களுக்குத் தேவைப்படும் நீரை, போதியளவில் வேர்களால் உறிஞ்ச முடிவதில்லை. இதனால், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், செடியிலிருந்து நீராவிப்போக்கு முறையில் வெளியேறும் தண்ணீரின் அளவு, வேர் உறிஞ்சும் தண்ணீரை விட மிகுதியாகிச் செடி வாடி விடுகிறது.

செடிகளின் திசுக்களில் நடைபெற வேண்டிய பணிகள் பாதிக்கப்படுவதால், சத்துகள் கிரகிப்பும் பாதிக்கப்படுகிறது. இதனால், திசுக்களின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதாவது, இலைகளில் நடைபெற வேண்டிய முக்கியமான ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது. இதேபோல, போரான்  சத்து அளவுக்கு அதிகமாகக் கிரகிக்கப்படுவது, செடியின் வளர்ச்சிக்குக் குந்தகமாக அமைகிறது. இத்தகைய போரான் நச்சுத் தன்மை, உவர் மண்ணில் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

அடுத்தபடியாக, சுண்ணகச் சத்து மற்றும் மக்னீசியச் சத்தைப் பற்றிப் பார்ப்போம். இவை, செடியின் வளர்ச்சிக்கு ஓரளவுக்குத் தேவை.  அதே சமயம்  அளவுக்கு மீறி விட்டால், செடி அவதியுற நேரிடும். சுண்ணக அயனிகள் மண்ணில் அதிகமாகி விட்டால், மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்புச் சத்து ஆகியவற்றின் கிரகிப்புப் பாதிக்கப்படும்.

மேலும், கிரகிக்கப்பட்ட சத்துகள் செடியின் பல பாகங்களுக்கும் பரவ முடியாத நிலை உருவாகும்.  திசுக்களின் திரவத்தில் கார அமில நிலை அதிகமாகி அதன் பணிகள் தடைபடும். இதேபோல், மக்னீசிய வகை உப்புகள் உவர் மண்ணில் அதிகமாக இருக்கும் நிலையில், செடியினுள் அளவுக்கு மீறி புகுந்து ஒரு நஞ்சாக அமைந்து விடும்.

சோடிய அயனி மிகுந்திருப்பதை விட மக்னீசிய அயனிகள் மிகுந்திருப்பது செடிக்கு அதிகக் கேடாக அமையும். கந்தகச் சத்தானது உவர் நிலத்தில் அதிகமாக இருந்தாலும், இதனால் குறிப்பிடத்தக்க தீமைகள் ஏற்படுவதில்லை.

உவர் நிலத்தில் தழைச்சத்து ஊட்டகம் திருப்திகரமாக அமைவதில்லை. இதற்குக் காரணம், நுண்ணுயிர்களின் செயல்பாடு, பெருக்கம் உவர் நிலங்களில் பாதிக்கப்படுவது தான். அதனால், உவர் நிலத்தில், இயற்கை உரங்களாகிய, தொழுவுரம், கம்போஸ்ட் மற்றும் ஆலைக்கழிவு போன்ற கரிம உரங்களை அதிகளவில் இட வேண்டும். இவை, நுண்ணுயிர்களின் செயல்பாட்டுக்கு ஆதாரமாக அமைவதோடு, தழைச்சத்தின் கிடைக்கையை உயர்த்தும்.

பொதுவாக, மண்ணிலுள்ள நீரில் கரையாத பொருளாக மணிச்சத்து மாற்றப்பட்டு, செடிகளுக்குக் கிடைக்கும் அளவு வெகுவாகக் குறைகிறது. சுண்ணக, மக்னீசிய சார்பு உப்புகள், உவர் மண்ணில் அதிகமாக இருந்தால், மணிச்சத்தின் கிரகிப்புப் பெரிதும் பாதிக்கப்படும். சில சமயங்களில் மெக்னீசிய நச்சுத் தன்மையைக் குறைக்க, பெரியளவில் மணிச்சத்தை இட வேண்டும்.

சாம்பல் சத்தானது மண் வகைகளில் போதியளவில் இருந்தாலும், சுண்ணாம்பு வகை உப்புகள் அதிகமாகி, உவர் நிலங்களாக அமையுமானால், சுண்ணாம்பு, சாம்பல் சத்து எதிர்ப்புச் செய்கை மேலோங்கி, போதியளவில் சாம்பல் சத்தைக் கிரகிக்க முடியாத நிலை உருவாகலாம்.

களர் நிலம்

களர் மண்ணின் குணாதிசியங்கள், மண்ணின் பௌதிகக் குணங்களைச் செடிக்கு ஆதாரமாக அமையாமல் செய்து விடுகின்றன. கோடைக்காலத்தில் மண் இறுகியும், மழைக்காலத்தில் சதசதப்பாகவும் இருப்பதால், மண்ணில் காற்றோட்டம், வேரின் வளர்ச்சி ஆகியன பாதிக்கப்படும்.  வேரின் உறிஞ்சும் தன்மையானது, மண், காற்று, வேர் பரவும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஆகையால், களர் நிலங்களில் மண்ணின் பௌதிகக் குணங்கள், செடியின் ஊட்டத்தை மறைமுகமாகப் பாதிக்கச் செய்யும்.

செடிகளுக்கு வேண்டிய சத்துகளின் கிடைக்கை, மண்ணின் கார அமில நிலையைப் பொறுத்து அமையும். மண்ணின் கார அமில நிலையிலிருந்து 8 வரை இருந்தால், பொதுவாக, சத்துகள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும். ஆனால், களர் நிலத்தில்  கார அமில நிலை 8.5-க்கு மேல் இருப்பதால், ஊட்டகம் பாதிக்கப்படும்.

களர் நிலத்தில் நுண்ணுயிர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதால் தழைச்சத்துக் கிடைக்கையும் வெகுவாகக் குறையும். ஆகவே தான், தழை உரங்களைப் போட்டு மிதித்தல், இயற்கை உரங்களாகிய தொழுவுரம், கம்போஸ்ட், செயற்கை உரமாகிய ஆலைக்கழிவு போன்றவை, களர் நில விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், பொதுவாகச் சிபாரிசு செய்யப்படும் தழைச்சத்தோடு 20 சதம் கூடுதலாக இடுவதும் நன்மை பயக்கும்.

மணிச்சத்தைப் பொறுத்தவரை, களர் நிலங்களில் பெரும் பிரச்சனை இல்லை. எனினும், மண் பரிசோதனைப்படி சிபாரிசு செய்யப்படும் மணிச்சத்து உரத்தை, சூப்பர் பாஸ்பேட் வடிவத்தில் இடுவது சாலச் சிறந்தது.

பொதுவாகச் சாம்பல் சத்தானது, மற்ற நிலங்களைப் போலவே களர் நிலங்களுக்கும் பிரச்சனையாக இருப்பதில்லை. சாம்பல் சத்து அதிகமாக இருந்தால், சோடியத்தின் வீரியத்தைக் குறைக்கும். ஆகவே, மண் பரிசோதனைப்படி, களர் நிலங்களுக்கும் சாம்பல் சத்தை இட வேண்டும்.

அடுத்ததாக, களர் நிலத்தில் அமைந்துள்ள முக்கியச் சத்துப் பிரச்சனைகளில் சுண்ணக, மக்னீசியச் சத்துகளின் பற்றாக்குறை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான விளக்கத்தோடு கூற வேண்டுமெனில், சுண்ணக, மக்னீசியச் சத்து, நீரில் கரையாத பொருளாக மாறுவது தான், மண் களராக அமைவதற்குக் காரணம்.

சுண்ணக, மக்னீசியப் பற்றாக்குறையால், மண்ணின் வடிவம் சீர்கெடுகிறது. வேரின் வளர்ச்சிக் குறைகிறது. திசுக்களில் அமிலம் மிஞ்சி, அவற்றின் பணி நிலை தடுமாறுகிறது.  இதனால், செடிகள் வளர்ச்சிக் குன்றி, இலைகள் வெளுத்து, மகசூலும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. ஆகவே தான், களர் நிலச் சீர்திருத்தத்தில், சுண்ணகச் சல்பேட் எனப்படும் ஜிப்சத்தை இடுகிறோம். இது, களிமண் மீதான சோடிய அயனிகளை நீக்குவதோடு, ஒரு சத்து உரமாகவும் அமைகிறது.

களர் நிலத்தில் இருக்கும் சோடிய கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகள், செடிகளின் ஊட்டகத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்கின்றன. இவை, வேரின் உறைகளை அரிக்கின்றன. மேலும், மண்ணின் கார அமிலநிலை உயர்வையும், இரும்புச்சத்து, மக்னீசியச் சத்து, தாமிரச் சத்து மற்றும் துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகின்றன.

இவற்றில் நெல் விவசாயத்தைப் பொறுத்தமட்டில் துத்தநாகச் சத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக, துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையை, எல்லாக் களர் நிலங்களிலும் காணலாம். இதற்காககத் தான் ஒரு ஏக்கருக்கு 12 முதல் 20 கிலோ வரை, துத்தநாகச் சல்பேட் உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.

களர் உவர் நிலங்களில் அமைந்துள்ள பல குறைபாடுகளில், சத்துப் பாதிப்பு என்பது, மிக முக்கியமானது. களர் உவர் நிலங்களைச் சீர்திருத்துவதன் மூலம் தான், பயிர்களுக்கு ஏற்ற சத்துச் சூழ்நிலையை உருவாக்க முடியும்.


முனைவர் தா.ஷெரின் ஜெனிதா ராஜம்மாள், இணைப் பேராசிரியர் – மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாவலூர் குட்டப்பட்டு, திருச்சி – 620 027.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!