தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காவிரித் தாயின் மாபெரும் பரிசான மேட்டூர் அணை, 92 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த அணையின் மூலம் ஆண்டுதோறும் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
காவிரியின் பரந்த பயணம்
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு, 20-க்கும் மேற்பட்ட துணை ஆறுகளைச் சேர்த்து, அகண்ட காவிரியாக, 748 கிலோ மீட்டர் கடந்து, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக் கடலில் வந்து கலக்கிறது. இப்பெரும் ஆற்றின் நீர்தான் டெல்டா மாவட்ட விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரம்.
வெள்ளப்பெருக்கு – விவசாயிகள் துயரம்
மேட்டூர் அணைக் கட்டப்படுவதற்கு முன்பு, காவிரியில் அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. அதேசமயம் நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் வசதி இல்லாததால், கோடைக்காலத்தில், விவசாயிகள் பாசனத்திற்குத் தண்ணீர் இன்றித் தவித்தனர். இதற்குத் தீர்வாக, காவிரியை அடக்கி, நீரை தேக்கிவைத்து, தேவையானபோது பாசனத்துக்கு விடுவதற்காக, மேட்டூரில் அணையைக் கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது.
அணைக் கட்டுமானப் பணி
1925 ஆம் ஆண்டு மேட்டூரில் அணைக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. கர்னல் எல்லீஸ் தலைமையில், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் 9 ஆண்டுகள் பாடுபட்டு, 1934 ஜூலை 14 அன்று பணியை நிறைவு செய்தனர். அணையைக் கட்ட அப்போது செலவிடப்பட்ட தொகை 4.80 கோடி ரூபாய்.
1934 ஆகஸ்ட் 21 அன்று, அப்போது சென்னை கர்னலாக இருந்த ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி, மேட்டூர் அணையைத் திறந்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேட்டூர் அணையின் சிறப்புகள்
அணையின் நீளம்: 5,300 அடி
நீர்த்தேக்கப் பகுதி: 59.25 சதுர மைல்
அதிகபட்ச நீர்மட்டம்: 120 அடி
நீர்ச் சேமிப்பு திறன்: 93.5 டிஎம்சி
உபரிநீர் வெளியேற்றம்: 16 கண் மதகு (இவை கர்னல் எல்லீஸ் கால்வாய் என்றே அழைக்கப்படுகிறது)
பாசனத்துக்கு உயிர்நாடி
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன் அடைகின்றன. மொத்தம் 17 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கிறது.
நீர்த் திறக்கும் தேதிகள் – சாதனைகள்
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்காக தண்ணீர்த் திறக்கப்படும். இதுவரை, 20 முறை அந்த தேதியிலேயே நீர் திறந்துவிடப் பட்டிருக்கிறது. நீரின் அளவைப் பொறுத்து, அந்த தேதிக்கு முன்கூட்டியே 11 முறையும், தாமதமாக 61 முறையும் திறக்கப்பட்டதும் காலத்தின் குறிப்புகளே.
இந்த ஆண்டு, 92 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மேட்டூர் அணை, 5 ஆவது முறையாக முழுமையாக நிரம்பிச் சாதனை படைத்துள்ளது.
தற்போதைய நிலை (21.8.2025)
நீர்வரத்து: 30,850 கனஅடி (முந்தைய நாள் 40,750 கனஅடி)
காவிரிக்கு வெளியேற்றம்: 30,000 கனஅடி
கால்வாய்களுக்கு வெளியேற்றம்: 750 கனஅடி
அணை நீர்மட்டம்: 120 அடி
நீர் இருப்பு: 93.47 டிஎம்சி