சிறுதானியங்களின் அவசியம்!

சிறுதானியங்களின் அவசியம்!

னிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிர்கள் சிறுதானியப் பயிர்கள். சிறிய உருவிலான போயேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த தானியங்கள், சிறுதானியங்கள் எனப்படுகின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு, குலசாமை ஆகியன சிறுதானியப் பயிர்களாகும். இந்திய அரசு 2018-ஆம் ஆண்டில் சிறுதானியங்களுக்குச் சத்துமிகு தானியங்கள் என்னும் பெயரை வழங்கியுள்ளது.

சிறுதானியங்களின் சிறப்புகள்

நெல், கோதுமை போன்றவற்றில் உள்ளதைப் போலவே, சிறுதானியங்களில் மாவுச்சத்து உள்ளது. ஆனால், புரதம் 8-12 சதம், நார்ச்சத்து 12-18 சதம் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஆகியன அதிகளவில் உள்ளன. குறிப்பாகக் கேழ்வரகில் சுண்ணாம்புச் சத்து, பாலில் இருப்பதைப் போல, மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. சிறுதானியங்கள் பல நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.

+ வரகு, நரம்பு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்தும்.

+ கேழ்வரகு, எலும்பு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்தும். மேலும், இரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

+ குதிரைவாலி, இரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்கும்.

+ சோளம், குடல் புற்று நோயைத் தடுக்கும்.

+ கம்பு, உடல் தசைச் சிதைவைத் தடுக்கும்.

+ தினை, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

+ பனிவரகு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

+ சாமை, எலும்புகளை வலுவாக்கும்.

+ வறட்சி, வெள்ளம் போன்ற காலச் சூழல்களைத் தாங்கி விரைவில் மீண்டு வரும் தன்மை இந்தப் பயிர்களுக்கு இருப்பதால், திடீர் இழப்புகளில் இருந்து விவசாயிகள் தப்பிக்க இயலும்.

+ குறைவான நீரிலேயே விளைந்து விடும். ஆண்டுக்கு 300-400 மி.மீ. மழை பெய்தாலே போதும்.

+ வாகன எரிபொருளில் கலக்கப் பயன்படும் எத்தனால் தயாரிப்பில், சிறுதானியங்கள் பயன்படுகின்றன.

+ சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை, உமியை நீக்காமலே உணவாகக் கொள்ளலாம்.

+ நெல்லில் உமியை நீக்கிப் பளபளப்பாக்கும் போது, அதிலுள்ள தயமின் என்னும் வைட்டமின் நீங்கி விடும். இதனால், தொடர்ந்து அரிசி உணவை உண்டு வரும்போது சத்துக்குறை ஏற்படும். எனவே, சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.

+ சிறுதானியங்கள் நமது உடலுக்கு வேண்டிய சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதால் தான், நமது இந்திய அரசின் பரிந்துரையை ஏற்று, 2023-ஆம் ஆண்டை, சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக அறிவித்தது ஐ.நா.சபை.

சிறுதானிய சாகுபடி

+ கார், ராபி, கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் சிறுதானியங்களைப் பயிரிடலாம்.

+ கார் பருவத்தில், ஜூன், ஜூலையில் விதைக்கலாம். ராபி பருவத்தில், செப்டம்பர், அக்டோபரில் விதைக்கலாம். கோடைப் பருவத்தில், ஜனவரி, பிப்ரவரியில் விதைக்கலாம்.

+ சோளத்தில், கார் காலத்தில் விதைக்கத் தகுந்த இரகங்களும், ராபி காலத்தில் விதைக்கத் தகுந்த இரகங்களும் உள்ளன. எனவே, கால நிலைக்கு ஏற்ற, நோயெதிர்ப்பு சக்தியுள்ள உயர் விளைச்சல் இரகங்களை விதைக்க வேண்டும்.

+ விதைகளைக் கை விதைப்பாக விதைக்கலாம். அல்லது வரிசையில் விதைக்கலாம். வரிசை விதைப்பே சிறந்தது.

+ கேழ்வரகை மட்டும் நாற்றாக வளர்த்து நட வேண்டும்.

+ விதைகளை 2-5 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

+ சாகுபடிக்கு முன் ஏக்கருக்கு 5-10 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில், தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும்.

+ சோள விதைப்புக்கு எக்டருக்கு 7-8 கிலோ விதைகள் தேவைப்படும். மற்ற சிறுதானியப் பயிர்களை வரிசையில் விதைக்க 5 கிலோ விதைகளும், கை விதைப்பாக விதைக்க 8-10 கிலோ விதைகளும் தேவைப்படும்.

+ களைகளைக் கட்டுப்படுத்த, கோடையில் உழவு செய்ய வேண்டும். பயிர்ச் சுழற்சி மற்றும் ஊடுபயிர் சாகுபடி மூலம், களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

+ வரிசை விதைப்பாக இருந்தால், கருவிகள் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

+ களைக்கொல்லித் தெளிப்பின் மூலமும், களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

+ மானாவாரிப் பயிர்களுக்குப் பாசனம் தேவையில்லை. மழையைப் பொறுத்து, உயிர்நீர், தூர்க்கட்டும் போது, பூக்கும் போது மற்றும் கதிர்ப் பருவத்தில், தெளிப்பான் மூலம் நீரைக் கொடுத்தால் போதும்.

+ பொதுவாக, சிறுதானியப் பயிர்களைப் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. பூச்சி தாக்கிய பயிர்களைச் சேகரித்து அழித்து விட வேண்டும்.

+ சரியான பருவத்தில் சாகுபடி செய்ய வேண்டும். எதிர்பார்க்கும் மழை பெய்வதற்குப் பத்து நாட்களுக்கு முன் விதைத்து விட்டால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

+ இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப்பொறி போன்றவற்றை அமைத்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சித் தாக்குதல் கூடுதலாக இருந்தால், பூச்சிக்கொல்லியைத் தெளிக்கலாம்.

+ உரங்களை அதிகமாக இடுவதைத் தவிர்த்தால், நோய்களைக் கட்டுப்படுத்தலாம். பயறு வகைகளை விதைத்துப் பயிர் சுழற்சியை மேற்கொள்ளலாம்.

+ நோயெதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்களை விதைக்க வேண்டும். சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

+ விதை நேர்த்தி செய்து விதைத்தால், நோய்களில் இருந்து பயிர்களைக் காக்கலாம்.

அறுவடை

சோள அறுவடை: 90-105 நாட்கள்.

கேழ்வரகு அறுவடை: 100-125 நாட்கள்.

சாமை அறுவடை: 75-90 நாட்கள்.

தினை அறுவடை: 85-90 நாட்கள்.

பனிவரகு அறுவடை: 65-75 நாட்கள்.

கம்பு அறுவடை: 75-90 நாட்கள்.

வரகு அறுவடை: 125-130 நாட்கள்.

குதிரைவாலி அறுவடை: 90-100 நாட்கள்.

சிறுதானிய சாகுபடியில் அரசின் நடவடிக்கைகள்

+ தற்போது, 60-70 சத சிறுதானியங்கள் நேரடியாக உணவில் பயன்படுகின்றன.

+ சிறுதானிய உற்பத்தி விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் போன்றோர், சிறுதானிய மாவு, பிஸ்கட், முறுக்கு, இட்லி மாவு, ரவா, சேமியா, பாஸ்தா, அவல், மிக்சர், இனிப்பு வகைகள் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்து கூடுதல் இலாபம் பெற வகை செய்யப்படுகிறது.

+ இதற்கான தொழில் நுட்பங்களை, ஐதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம் வழங்குகிறது.

+ மேலும், இந்த நிறுவனம், தொழில் முனைவோர் பயிற்சிகள் மற்றும் இயந்திரங்களை வழங்குகிறது.

+ மேலும், சிறந்த தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குகிறது. இந்த வாய்ப்புகளை விவசாயிகளும் பயன்படுத்தலாம்.


முனைவர் நா.செ.பென்சாம், வேளாண்மை அலுவலர், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு, கன்னியாகுமரி.


விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


தொடர்புடையவை!