My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! – விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115458 e3f627a8 https://pachaiboomi.net/54654-8/

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாமரத்தூர் க.விஷ்ணு. இவரைப் பொள்ளாச்சியில் சந்தித்தேன். பொறியியல் பட்டதாரி, முப்பத்து ஐந்து வயது இளைஞர். அலுங்காமல், அழுக்குப் படாமல் சம்பாதிக்கும் படிப்பைப் படித்து விட்டு, வெய்யில், மழை, நேரங்காலமற்ற கடும் உழைப்பு நிறைந்த விவசாயத்தில் ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.

அறிவியல் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகள்; நீரை, நிலத்தை, காற்றை என, இயற்கை வளங்களை மாசுபடுத்தி வருகின்றன. இந்தச் சூழல் மாசால்; பருவமழை பொய்த்தல், கூடுதலாகப் பெய்தல் அல்லது குறைவாகப் பெய்தல், புவி வெப்பம் மிகுதல், கடும் வறட்சி போன்ற, மனிதனால் தீர்வு காண முடியாத இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதனால், இயற்கையின் ஆதரவில் நடக்க வேண்டிய விவசாயம், விவசாய உற்பத்தி மற்றும் விளைபொருள் சந்தையில், உறுதியற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகையால், விவசாயப் பெருங்குடி மக்களின் பொருளாதார நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது. எனவே, இதிலிருந்து மீளவும், இந்நிலை தங்களின் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றும் நினைக்கும் விவசாயிகள்; நிலத்தை விற்று விட்டு, விவசாயத்தை விட்டு விட்டு, மாற்றுத் தொழில்களைத் தேடி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பசிப்பிணி எல்லோருக்கும் பொதுவானது. அது, ஏழை, பணக்காரர் என்று பேதம் பார்க்காது, குழந்தை, பெரியவர், முதியவர் என்னும் கணக்கும் பார்க்காது. இந்தப் பிணியைப் போக்கும் மருத்துவர்கள் விவசாயிகள் மட்டும் தான். ஏனெனில், அவர்களால் தான் உணவென்னும் மருந்தை உற்பத்தி செய்து கொடுக்க முடியும்.

பற்றுகள் அனைத்தையும் கடந்து விட்டதாகக் கூறும் துறவிகள் கூட, விவசாயிகளின் கையை எதிர்பார்த்துத் தான் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நல்ல நாட்டுக்கு இலக்கணம் கூறும் அதே திருவள்ளுவர், உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு என்கிறார்.

இங்கே அவர் முதலில் வலியுறுத்துவது, பசியில்லாத நாடு என்பதைத் தான். அந்தப் பசியில்லா நாட்டை உருவாக்குவது விவசாயம், விவசாயப் பெருங்குடி மக்கள். அதனால் தான் உழவுத் தொழிலே உலகின் முதல் தொழிலாக, ஒப்பற்ற தொழிலாகப் போற்றப்படுகிறது.

இந்த விவசாயத்தை நம்பி வாழ முடியாமல், தாக்குப் பிடிக்க முடியாமல், எண்ணற்ற விவசாயிகள் அதிலிருந்து வெளியேறி வரும் வேதனையான நிலையில், ஆலாமரத்தூர் விஷ்ணு போன்ற இளைஞர்கள், விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபடும் போது, அவர்களை ஆதரித்தல், வாழ்த்துதல், போற்றுதல், ஊக்கமளித்தல் நமது கடமையாகிறது.

ஒரு பலம் மண்ணை, பலமுறை உழுது, கால் பலமுள்ள புழுதியாக மாற்றி விட்டால், அந்த மண்ணில் பயிர்கள் செழித்து வளரும், உரமிடத் தேவையில்லை என்கிறார் வள்ளுவர். அவர் கூறுவதைப் போல, ஒரு பக்கம் விவசாயிகள் வெளியே போகும் நிலையில், இன்னொரு பக்கம், ஆற்றல் மிக்க, கால் பலமுள்ள புழுதியாக, விவசாயத்தை நோக்கி இந்த இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115429 248e17d9 https://pachaiboomi.net/54654-8/

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எனவே, தாத்தா, பாட்டி பார்த்த விவசாயத்தை, அப்பாவின் மேற்பார்வையில் நடந்த விவசாயத்தைப் பொறுப்பேற்று நடத்தி வரும், விஷ்ணுவின் விவசாய அனுபவங்களை அறியும் பொருட்டு, அவரைப் பார்க்க, ஆலாமரத்தூருக்குச் சென்றோம்.

ஆலாமரத்தூர். கடலைப் போல, கண்ணுக்கு எட்டிய மட்டும் தென்னை மரங்கள், தென்னந் தோப்புகள் நிறைந்த, இயற்கை வளம் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இப்படி அமைந்திருப்பதை மேம்போக்காக எடுத்துக் கொள்ள முடியாது. திட்டமிட்டு வேலை செய்தால், விவசாயத்திலும் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆலாமரத்தூர் விளங்குகிறது.

வாழ்விக்கும் புவியன்னையின் மீது, சுடுவெய்யிலோ, கடுமழையோ படக்கூடாது, அவள் உடல் நோகக்கூடாது என, பச்சைக் குடை பிடித்து, அன்னைப் பாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளன அந்தத் தென்னை மரங்கள். தங்களை வளர்த்து வரும் விவசாயிகளுக்குச் செய்யும் நன்றிக்கடனாக, அவர்களுக்கு வளம் சேர்க்கும் வகையில், குடம் குடமாய் இளநீரும், தேங்காயும், தெவிட்டத் தெவிட்டத் தரும் வகையில் நெடுநெடுவென வளர்ந்துள்ளன அந்த மரங்கள்.

மொத்தத்தில் ஆலாமரத்தூர், ஆயிரமாயிரம் ஆலமரங்கள் சூழ்ந்து நின்று, கண்ணுக்குக் குளிர்ச்சியும், மனதுக்கு இனிமையும் தரும் ஆலமரத்தூராக அமைந்துள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இந்நிலையில், நம்மைக் கண்டதும் மகிழ்வுடன் வரவேற்று உபசரித்த விஷ்ணு, தோப்புக்குள் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். அப்போது உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றோம். அவர் பேசத் தொடங்கினார்.

பாட்டியின் விருப்பம்

நான் சென்னையில் தான் என் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு, வேலைக்குச் செல்ல விரும்பாமல், சொந்தமாகத் தொழில் செய்யலாம் என முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். அப்போது என்னுடைய பாட்டி, நமக்கு நல்ல வருமானம் தரும் தொழிலாக விவசாயம் இருக்கும் போது, நீ எதற்கு வேறு தொழிலைச் செய்ய வேண்டும்? பேசாமல் விவசாயத்தைப் பொறுப்பாகச் செய் என்று கூறினார். பாசமும், என்மீது அக்கறையும் கொண்ட என் பாட்டியின் சொல்லைத் தட்ட முடியாமல், 2004 ஆம் ஆண்டில் இருந்து முழுமையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

டாக்டர் தோட்டம்

எங்கள் தோப்பை எல்லோரும் டாக்டர் தோட்டம் என்று தான் சொல்வார்கள். என் அப்பாவின் பெயர் கண்ணன். அவர், கால்நடை அறிவியல் கல்வியில் பி.வி.எஸ்சி. பட்டம் பெற்றவர். கால்நடைத்துறை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். அதனால், எங்கள் தோட்டம் டாக்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இது நாற்பது ஏக்கர் பரப்பைக் கொண்டது. எங்களது பூர்விகச் சொத்து. இந்த நிலத்தில் எங்கள் தாத்தா விவசாயம் பார்த்தார். அடுத்து, என் அப்பா விவசாயம் செய்தார். இப்போது அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பை வாங்கி நான் விவசாயம் செய்து வருகிறேன்.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115449 09763228 https://pachaiboomi.net/54654-8/

மூன்று தலைமுறை மரங்கள்

எங்கள் நிலம் முழுவதும் தென்னை மரங்கள் தான் உள்ளன. சுமார் மூவாயிரம் தென்னை மரங்கள் இருக்கின்றன. எங்கள் தாத்தா நட்டு வளர்த்த நாற்பது வயது மரங்கள், என் அப்பா நட்டு வளர்த்த இருபத்து ஐந்து வயது தென்னை மரங்கள், இப்போது நான் நட்டு வளர்க்கும் பத்து வயது, மூன்று வயது தென்னை மரங்கள் என, மூன்று தலைமுறை மரங்கள் நல்ல காய்ப்பில் உள்ளன.

தென்னை வளர்ப்புச் சூழல்

பொதுவாகக் கொங்குப் பகுதி மக்கள், உறுதியாக வருமானம் கிடைக்கும் தொழில்களைத் திட்டமிட்டுச் செய்வார்கள். அது விவசாயத்துக்கும் பொருந்தும். இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் எண்ணூறு அடிக்குக் கீழே தான் உள்ளது. அதனால், இதை வறட்சியான பகுதி என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதால், மழைக்காலத்தில் சுமார் இருபது நாட்கள் வரையில் இங்குள்ள கால்வாயில் நீர் வரும். நன்றாக மழை பெய்தால் ஒரு மாதம் வரையிலும் இந்தக் கால்வாயில் நீர் வரும். திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடுவார்கள்.

அப்போது இந்த நீர் முழுவதையும் நிலத்தில் பாய்ச்சுவோம். இந்த நீரானது மரங்களுக்குப் பயன்படுவதுடன், நிலத்தடி நீர் ஓரளவு கூடுவதற்கும் உதவியாக இருக்கும். கால்வாயில் நீர்வரத்து நின்றதும், கிணற்று நீரைத் தென்னை மரங்களுக்குத் தருவோம். எங்களிடம், திறந்தவெளிக் கிணறு ஒன்றும், நான்கு ஆழ்துளைக் கிணறுகளும் உள்ளன. தென்னை பல்லாண்டுப் பயிர் என்பதாலும், வருமானப் பாதிப்பு இருக்காது என்பதாலும், இந்த மரங்களை வளர்த்து வருகிறோம்.

வறட்சி மற்றும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க, சொட்டுநீர்ப் பாசன முறையில் மரங்களுக்கு நீரைத் தருகிறோம். இதனால், வறட்சிப் பகுதியாக இருந்தாலும், அது வெளியே தெரியாத அளவில், மரங்களைச் சிறப்பாக வளர்த்து, நல்ல விளைச்சலை எடுத்து வருகிறோம்.

தென்னை இரகங்கள் & பராமரிப்பு

எங்கள் தோப்பில், டிப்தூர் நெட்டை, அரசம்பட்டி நெட்டை, வெஸ்ட்கோஸ்ட் ஆகிய இரகங்களைச் சேர்ந்த தென்னை மரங்கள் உள்ளன. எங்கள் நிலம் கொஞ்சம் களிமண் சார்ந்தது என்பதால், இந்த மரங்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மரத்துக்கு 100 லிட்டர் வீதம் நீரைத் தருவோம்.

ஜூன், ஜூலையில், மரத்துக்கு 250 கிராம் யூரியா, ஒரு கிலோ டி.ஏ.பி., ஒரு கிலோ பொட்டாஷ் மற்றும் இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற இரண்டாம் நிலை உரக்கலவை 500 கிராம் வீதம் இட்டுப் பாசனம் செய்வோம். இதே அளவில், இதே உரங்களை, டிசம்பர், ஜனவரியிலும் இடுவோம்.

மேலும், ஜூன், ஜூலையில் இரசாயன உரங்களை இட்ட பிறகு, செப்டம்பர், அக்டோபர் வாக்கில், மரத்துக்கு மட்கிய தொழுவுரம் 25 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ, தென்னை நுண்ணுரம் 300 கிராம் வீதம் இட்டுப் பாசனம் செய்வோம்.

அடுத்து, பிப்ரவரி மார்ச் வாக்கில் மீண்டும் இதே அளவில் இயற்கை உரங்களை இடுவோம். இப்படி, ஆண்டுக்கு நான்கு முறை உரங்களை இட்டு எங்கள் தென்னை மரங்களைப் பராமரித்து வருகிறோம். இந்தப் பகுதி தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் மற்றும் ஈரியோபைட் என்னும் சிவப்புச் சிலந்தியின் தாக்குதல் இருந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த, மரத்துக்கு 10 மி.லி. மானோகுரோட்டாபாஸ் வீதம் எடுத்து, 50 மி.லி. நீரில் கலந்து வேர் மூலம் கொடுத்து வருகிறோம். மற்றபடி வேறு எந்தச் சிக்கலும் இல்லை.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115429 248e17d9 https://pachaiboomi.net/54654-8/

அறுவடை & விற்பனை

தேங்காய் அறுவடை 40-50 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும். மட்டையை உரித்து விட்டு, காய்களை கிலோ கணக்கில் விற்பனை செய்வோம். இன்றைய நிலையில், ஒரு டன் தேங்காய்களின் விலை 23,500 ரூபாயாக உள்ளது. கொப்பரையாகவும் விற்பனை செய்வோம். மேலும், மரங்களில் இருந்து உதிர்ந்து முளைக்கும் தேங்காய்க் கன்றுகளையும் விற்பனை செய்வோம்.

மதிப்புக்கூட்டல் & கன்று உற்பத்தி

இந்த நிலையில், நம்மிடம் சிறந்த இரகங்கள், முறையான பராமரிப்பு, தரமான தேங்காய்கள் என இருப்பதால், இவற்றைத் தரமான கன்றுகளாக உற்பத்தி செய்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு, மக்களுக்கு, நம்பகத் தன்மையுடன் விற்பனை செய்யலாம்; இதனால், நமக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும்; இதன் மூலம், வேளாண் சமூக வளர்ச்சியில் நமது பங்களிப்பும் இருக்கும் என்று நினைத்தேன்.

ஏற்கெனவே, தாமாக உதிர்ந்து முளைத்த தேங்காய்க் கன்றுகளை வாங்கிச் சென்றவர்களிடம், அவை நல்ல முறையில் வளர்ந்து மகசூலைக் கொடுத்து வருவதால், கன்றுகள் விற்பனை நன்றாகவே இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

தாத்தாவின் பாடம் & பாட்டியின் ஆதரவு

இந்த நாற்றங்கால் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று முடிவு செய்ததற்கு என் தாத்தா, அதாவது, என் அம்மாவின் அப்பா கல்யாணசாமி முக்கியக் காரணமாவார். அவர், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தென்னை நாற்றங்கால் தொழிலை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அப்போது அங்கே அடிக்கடி செல்வேன். தாத்தா சொல்லும் வேலைகளை ஆர்வமாகச் செய்வேன். அவர், கன்றுகளை விற்பதை, அங்கே வருவோரிடம் பேசுவதைக் கூர்ந்து கவனிப்பேன். தாத்தாவும் நிறையச் சொல்லித் தருவார். இந்த எல்லாமே எனக்குப் பாடமாக அமைந்தன. மேலும், நான் நர்சரியைத் தொடங்குவதற்கு, என் பாட்டியும் ஆதரவாக இருந்தார்.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115547 4434a7cf https://pachaiboomi.net/54654-8/

ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் தொடக்கம்

எனவே, தமிழக அரசின் விதைச் சான்றளிப்புத் துறையில் விண்ணப்பித்து, முறையான அனுமதியைப் பெற்று, 2017 ஆம் ஆண்டில், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டனைத் தொடங்கினேன். எங்கள் நர்சரி கார்டன், உடுமலை- பொள்ளாச்சி சாலையில், உடுமலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கே, தாய் மரங்களுக்கு என்றே, கர்நாடக மாநிலம் டிப்தூரில் இருந்து, மரபியல் குணங்கள் மாறாமல் கொண்டு வந்து, எங்கள் தோப்பில் வளர்த்துள்ள, டிப்தூர் நெட்டை மரங்களில் இருந்தும், அரசம்பட்டி நெட்டை, வெஸ்ட்கோஸ்ட் தென்னை மரங்களில் இருந்தும் கிடைக்கும் தேங்காய்களை, கன்றுகளாக உருவாக்கி விற்பனை செய்கிறோம். மேலும், நெட்டைxகுட்டை, குட்டைxநெட்டை மற்றும் குட்டை இளநீர்க் கன்றுகளையும் விற்பனை செய்து வருகிறோம்.

கன்று உற்பத்தி முறை

தாய் மரங்களில் இருந்து உதிரும் காய்களைச் சேகரித்து, அவற்றில் தரமான காய்களைத் தேர்ந்தெடுத்து, கன்று உற்பத்திக்குப் பயன்படுத்துவோம். இந்தக் காய்களை ஒரு மாதம் வரையில் உறக்க நிலைக்கு விட்டு விடுவோம். அதற்குப் பிறகு அவற்றை எடுத்து, தென்னைநார்க் கழிவுப் படுக்கைக்குள் இட்டு முளைக்க வைப்போம்.

வாரம் இருமுறை நீரைத் தெளித்து வந்தால், இரண்டு அல்லது இரண்டரை மாதங்களில் முளைப்பு வந்து விடும். இரண்டு இரண்டரை அடி உயரம் வளர்ந்த கன்றுகளை, முளைப்புப் படுக்கையில் இருந்து எடுத்து, பைகளுக்கு மாற்றுவோம். மூன்றடிக்கு மேலுள்ள தென்னை நாற்றுகளை விற்பனை செய்யலாம். முளைத்து ஆறு மாதமான கன்றுகள், அதாவது 3-6 இலைகள் உள்ள கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. கன்றின் அடித்தண்டு ஊக்கமாக இருக்க வேண்டும்.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115440 cb95ff9e https://pachaiboomi.net/54654-8/

டிப்தூர் தென்னையின் சிறப்புகள்

அரசம்பட்டி நெட்டை, வெஸ்ட்கோஸ்ட் ஆகிய தென்னை மரங்களில் இருப்பதைக் காட்டிலும், டிப்தூர் நெட்டை தென்னை மரங்களில், பயனுள்ள சிறப்புகள் பல உள்ளன. அதாவது, இந்த மரங்கள் 3.5-4 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆண்டுக்கு 180-220 காய்களைக் காய்க்கும். வெய்யில் காலத்தில் குரும்பை உதிர்தல் குறைவாக இருக்கும். இந்த மரங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம். தென்னங் குலைகள், மட்டைகளில் அமர்வதால், குலைகள் சரிதல் என்பதே இருக்காது.

டிப்தூர் தென்னை ஓலைகள் 15-18 அடி நீளம் இருக்கும். இந்த மரங்கள் வெள்ளை ஈக்களின் தாக்குதலைச் சமாளிக்கும். வாடல் நோய்த் தாக்கத்தைத் தாங்கி வளரும். தேங்காய் மட்டையின் கனம் குறைவாகவும், தேங்காய்ப் பருப்பின் கனம் அதிகமாகவும் இருக்கும். அதனால், நூறு கிலோ காய்களில் இருந்து 15-18 கிலோ கொப்பரை கிடைக்கும். நூறு கிலோ கொப்பரையில் இருந்து 75 சதம் எண்ணெய் கிடைக்கும்.

டிப்தூர் தென்னங் கன்றுகளை 25 அடி இடைவெளியில் நடலாம். ஏக்கருக்கு 70-72 கன்றுகள் தேவைப்படும். எனவே, பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள டிப்தூர் கன்றுகளை வளர்ப்பதிலும், அவற்றை விவசாயிகளுக்கு வழங்குவதிலும் நாங்கள் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம்.

பிற மரக்கன்றுகள்

முறையாக நாற்றங்கால் என்று நடத்தும் போது, அங்கே தென்னங் கன்றுகள் தேவைப்படுவோர் மட்டுமே வருவார்கள் என்று சொல்ல முடியாது. மற்ற மரக்கன்றுகள் தேவைப்படுவோரும் வருவார்கள். ஆகையால், அவர்களின் தேவையையும் நாம் நிறைவு செய்ய வேண்டும். அதற்காகப் பல்வேறு பழமரக் கன்றுகள் மற்றும் பண மதிப்பு, சமூக மதிப்புள்ள கன்றுகளையும் இங்கே வைத்து விற்பனை செய்கிறோம். எங்கள் ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டனில் தினமும் விற்பனை நடக்கும். சில்லறை விற்பனையும் உண்டு, மொத்த விற்பனையும் உண்டு.

எங்கள் நர்சரி கார்டனில், பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், அல்போன்சா, நீலம், மல்லிகா, பெங்களூரா ஆகிய மாம்பழக் கன்றுகள் கிடைக்கும். பாலாஜி மற்றும் மார்க்கெட் எலுமிச்சை இரக எலுமிச்சைக் கன்றுகள் கிடைக்கும். என்.ஏ.47, பவானிசாகர் வகை நெல்லிக் கன்றுகள் கிடைக்கும்.

பி.கே.எம்.3, காளிப்பட்டி ஒட்டு வகை சப்போட்டா பழக்கன்றுகள் கிடைக்கும். தைவான் பிங்க், சிவப்புக் கொய்யா, லக்னோ 45 என்னும் வெள்ளைக் கொய்யா ஆகிய கொய்யாக் கன்றுகள் கிடைக்கும். ஜம்பு நாவல் கன்றுகள் கிடைக்கும்.

சிங்கப்பூர் பலா, வியட்நாம் சூப்பர் ஏர்லி பலா, சிவப்புப் பலா ஆகிய பலாக் கன்றுகள் கிடைக்கும். வியட்நாம் சூப்பர் ஏர்லி பலாக்கன்று, இரண்டு மூன்று ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். இப்பழத்தில் பிசின் தன்மை குறைவாக இருக்கும். சுளை பெரிதாகவும், சுவையாகவும் இருக்கும். சிங்கப்பூர் பலாக்கன்று நான்கு ஆண்டுகளில் மகசூலுக்கு வந்து விடும். சிவப்புப் பலாக்கன்று மூன்று நான்கு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும்.

ஆரஞ்சு, சாத்துக்குடியில் பூனா இரகக் கன்றுகள் எங்களிடம் உள்ளன. இந்தக் கன்றுகள் செம்மண் மற்றும் மணல் கலந்த மண்ணில் நன்றாக வரும். 1.5-2 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும்.

நீர் ஆப்பிள் கன்றுகளும் எங்கள் நாற்றங்காலில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பழம் பேரிக்காயைப் போல இருக்கும். இந்த நீர் ஆப்பிளில், பிங்க், வெள்ளை, பச்சை என்று மூன்று இரகங்கள் உள்ளன. இந்தக் கன்றுகள், நட்டு இரண்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும்.

புளிப்பும் இனிப்பும் கலந்த ஸ்டார் ஃபுரூட் பழங்களைத் தரும் கன்றுகள் எங்கள் நர்சரி கார்டனில் கிடைக்கும். ஒன்றரை ஆண்டில் காய்க்கத் தொடங்கி விடும். ஒரு பழத்தின் எடை கால் கிலோ வரை இருக்கும். சிங்கப்பூர் செர்ரி, மாதுளை, பாதாம் மரக்கன்றுகளும் எங்களிடம் கிடைக்கும்.

தென்னங் கன்றுகளை எங்கள் தோப்பில் நாங்களே சொந்தமாக உற்பத்தி செய்கிறோம். ஏனைய பழமரக் கன்றுகளை, ஆந்திரா, பூனா போன்ற இடங்களில் இருந்து வாங்கி இங்கே விற்பனை செய்கிறோம். இவற்றைத் தவிர, பண மதிப்புள்ள தேக்கு, மகாகனி, மகிளம், நிழலைத் தரும் வேம்பு, புங்கன் போன்ற மரக்கன்றுகளும் ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டனில் கிடைக்கும்.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115517 c6de2553 https://pachaiboomi.net/54654-8/

ஆலோசனை

வீட்டுத் தோட்டம் அமைக்க நினைப்பவர்கள், விவசாய நிலங்களில் மரங்களை வளர்த்துத் தோப்பாக மாற்ற நினைக்கும் விவசாயிகள், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டனை அணுகலாம். அவர்களுக்குத் தேவைப்படும் தரமான கன்றுகள் சரியான விலையில் கொடுப்போம். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

மரங்களின் அவசியம்

மாதம் மும்மாரி பெய்த இந்த மண்ணில் இன்று ஆண்டுக்கு மூன்று மழை என்பது கூடச் சில இடங்களில் அரிதாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் சூழல் மாசு. இந்தச் சூழல் மாசை அகற்றும் வல்லமை மரங்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால், பல்வேறு பெயர்களைச் சொல்லி மரங்கள், காடுகள் அழிக்கப்படுகின்றன. எனவே, பெருகி வரும் சூழல் மாசு, புவி வெப்பம் பெருகக் காரணமாகிறது. வெப்பப் பகுதியில் மழை எப்படிப் பெய்யும்?

மாடு மேய்ந்த காட்டை நோங்கும், மழை பெய்த காட்டை நோங்கும். இந்த நாட்டுப் பழமொழி மழைக்கான சூழலை மிக எளிமையாக விளக்குகிறது. அதாவது, குளிர்ச்சியான சூழல் எங்கே உள்ளதோ, அங்கே தான் மழை பெய்யும் என்கிறது இந்த முதுமொழி. இந்தக் குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் மரங்களுக்கு மட்டும் தான் உண்டு.

தாத்தா கற்றுக் கொடுத்த பாடம்! - விவரிக்கிறார், ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டன் க.விஷ்ணு WhatsApp Image 2025 08 01 at 115529 30968440 https://pachaiboomi.net/54654-8/

மழையின் உறவுகள்

நமது உறவினர்கள் எங்கே உள்ளார்களோ அங்கே தான் நாம் ஆசையுடன் செல்வோம். உறவற்ற இடங்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம். அதைப் போலத் தான் மழையும். மரங்கள் தான் மழைக்கு உறவுகளாம். அதனால் மரங்கள் இருக்கும் இடங்களுக்குத் தான் மழை ஆசையாகச் செல்லுமாம். இதை அருமையாக விளக்குகிறது, மரமே மழைக்கு உறவாம், அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம் என்னும் இந்தப் பசுமை மொழி.

இன்றைய ஒவ்வொரு பெற்றோரும் பெற்றெடுக்கும் குழந்தைகள், நாளைக்கு இந்த மண்ணில் நலமாக வாழ வேண்டுமானால், இங்கே மரங்களும் இருக்க வேண்டும். எனவே, வீட்டுத் தோட்டம் அமைத்து மரங்களை வளருங்கள். வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் வீதியெல்லாம் தோப்பாகும், ஆளுக்கொரு மரம் வளர்த்தால் அண்டமெல்லாம் வனமாகும்.

இப்படியெல்லாம் நினைத்து நான் ஸ்ரீ அம்பாள் நர்சரி கார்டனைத் தொடங்கவில்லை. ஆனால், அது இயற்கையாக அமைந்து விட்டது, எனது சுயநலம் பொதுநலம் மிக்கதாக மாறி விட்டது. எங்கள் நர்சரி கார்டன், சூழல் வளம் நோக்கிய சிந்தனையை எனக்குள் விதைத்து விட்டிருக்கிறது. இனி, அதை நோக்கியும் பயணம் செய்வேன் என்றார். இவருடன் பேச: 97914 46633.

இளைஞர் விஷ்ணுவின் நல்லெண்ண முயற்சிகள் அனைத்தும் எளிதில் ஈடேற வாழ்த்தி விடை பெற்றோம்.


பசுமை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்: