My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வெண்கொடிவேலி மூலிகையில் பூச்சி மேலாண்மை!

வெண்கொடிவேலி மூலிகையில் பூச்சி மேலாண்மை!

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) என்பது, முக்கியமான மருத்துவத் தாவரமாகும். இதன் வேர், பாரம்பரிய மருத்துவ முறைகளில் நீண்ட காலமாகப் பயன்பட்டு வருகிறது. இம்மூலிகை, செரிமானத்தை மேம்படுத்தவும், பசியின்மையைப் போக்கவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல் மற்றும் வாயுத் தொல்லையைத் தணிக்கப் பயன்படுகிறது.

மேலும், ஒவ்வாமை மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், சில தோல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பயன்படுகிறது. தனது நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளால், வெண்கொடிவேலி வேர், சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவப் பயிராகப் பயிரிடும் நிலையில், பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது, நல்ல வளர்ச்சிக்கும், தரமான மூலப்பொருள் உற்பத்திக்கும் மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக, இலைகளைச் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சிலந்திப் பூச்சிகள் தாக்கும் போது, தாவர வளர்ச்சியும் இலைகளின் தரமும் பாதிக்கப்படும். எனவே, வெண்கொடி வேலியைத் தாக்கும் பூச்சிகள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

சிவப்புச் சிலந்திப் பூச்சி

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) இலைகளின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், இலைகளில் மஞ்சள் அல்லது வெண் புள்ளிகள் தோன்றும். தாக்குதல் மிகும்போது, இலைகள் வாடி உதிர்ந்து, தாவர வளர்ச்சிக் குறையும். வறண்ட மற்றும் அதிக வெப்ப நிலையில், தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலாண்மை: வயல் சுகாதாரத்தைப் பேணுதல், களைகளை அகற்றுதல், சிலந்திப் பூச்சிகளின் (mites) தாக்குதலைக் குறைக்கும்.

ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி டைகோஃபோல் (Dicofol) 18.5 EC அல்லது 3 கிராம் நனையும் கந்தகம் (wettable sulphur) வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு மாத இடைவெளியில், எக்டருக்கு 500 மி.லி. குளோர்பெனபைர் (Chlorfenapyr) 10 EC மருந்தைத் தெளித்தால், சிலந்திகள் கட்டுப்படும்.

அசுவினி

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) இளம் தளிர்கள் மற்றும் மெல்லிய இலைகளில் கூட்டமாகக் காணப்படும் அசுவினிகள், தாவரச் சாற்றை உறிஞ்சும். இதனால், இலைகள் சுருண்டு, தளிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். சில அசுவினிகள் வைரஸ் நோய்களைப் பரப்பும் வாய்ப்பும் உள்ளதால், ஆரம்பத்திலேயே கண்காணிப்பு அவசியம்.

மேலாண்மை: 0.5 சதவீத வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது ஐந்து சதவீத வேப்பங் கொட்டைப் பருப்புச்சாறு (NSKE) கரைசலைத் தெளிக்க வேண்டும்.

காக்சினெல்லிட் வண்டு (coccinellid beetle) போன்ற இயற்கை எதிரிகளை ஊக்குவிக்க வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் போன்ற இயற்கை எதிரிகளைப் பாதுகாக்க வேண்டும்.

மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சி

இந்தப் பூச்சிகள், வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) இலைக்காம்பு, இளம் தண்டு மற்றும் இலைகளில் ஒட்டிக்கொண்டு சாற்றை உறிஞ்சும். இவற்றின் தாக்குதல் மிகும் போது, தாவரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைவதுடன், பூச்சிகள் வெளியிடும் தேன் போன்ற சுரப்பால், கரும்பூஞ்சை வளர்ச்சியும் ஏற்படும்.

மேலாண்மை: பூச்சிகள் தாக்கிய தாவரப் பகுதிகளை அகற்றி அழிக்க வேண்டும். பூச்சிகள் தங்கும் மாற்றுத் தாவரங்களான களைகளை அகற்ற வேண்டும்.

பாராகாகஸ் மார்ஜினேட்டஸ் (Paracoccus marginatus) பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு கிராமத்துக்கு 100 அசரோஃபாகஸ் பப்பாயா (Acerophagus papaya) வீதம் விட வேண்டும்.

பெனோகோக்கஸ் சோலனோப்சிஸ் (Phenococcus Solenopsis) பூச்சிகளைக்  கட்டுப்படுத்த, ஏனேசியஸ் பாம்பவாலே (Aenasius bambawalei) ஒட்டுண்ணிகளை (parasitoids) நிலத்தில் விட வேண்டும்.

இரண்டு சதவீத வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது ஐந்து சதவீத வேப்பங்கொட்டைப் பருப்புச்சாறு (NSKE) மற்றும் ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் மீன் எண்ணெய் ரோசின் சோப் வீதம் கலந்து பயன்படுத்த வேண்டும்.

ஏக்கருக்கு, ஃப்ளோனிகாமிட் (Flonicamid) 50% WG மருந்து 60 கிராம் அல்லது தையோமீத்தாக்சம் (Thiamethoxam) 25% WG மருந்து 80 கிராம் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.

இலைத்தின்னிப் பூச்சிகள்

சில நேரங்களில் வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) இலைகளில், துளைகள், கடித்த சேதங்கள் மற்றும் இலைப்பரப்புக் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இளம் தாவரங்களில் கடுமையான இலைச்சேதம் ஏற்பட்டால் வளர்ச்சி மந்தமாகும்.

மேலாண்மை: கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பருவமழைக்கு முந்தய விதைப்பைத் தவிர்க்க வேண்டும்.

சரியான அளவில் விதைகளைப் பயன்படுத்த வேண்டும். செடிகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். தாக்கப்பட்ட செடிகளின் பாகங்கள், முட்டைத் தொகுதிகள் மற்றும் இளம் புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

வயல் சுகாதாரத்தைப் பேணுதல்: பூச்சி எண்ணிக்கையைக் கண்காணிக்கவும் குறைக்கவும், குறைந்தது பத்து நாட்களுக்கு ஒருமுறை, தாக்கப்பட்ட செடிகளின் பாகங்களை அகற்றி, அவற்றை மட்கும் குழியில் (compost pit) போட்டுப் புதைக்க வேண்டும்.

ஒளிப்பொறி: ரோமக் கம்பளிப்புழு (Hairy caterpillar) போன்ற, இரவு நேரப் பூச்சிகளின் வளர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க, எக்டருக்கு ஒரு ஒளிப்பொறி, அதாவது, 200 வாட் மெர்குரி வேப்பர் விளக்கு வீதம் அமைக்க வேண்டும்.

எக்டருக்கு 1.5 லிட்டர் குளோர்பைரிபாஸ் 20 EC அல்லது 1.5 லிட்டர் குயினால்பாஸ் 25 EC மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு மீட்டர் வரிசை நீளத்தில் பத்துப் பூச்சிகள் இருந்தால், அது பொருளாதாரச் சேதநிலை (ETL) ஆகும். இந்நிலையில், எக்டருக்கு 25 கிலோ குளோர்பைரிபாஸ் 1.5% DP அல்லது 25 கிலோ குயினால்பாஸ் தூள் வீதம் எடுத்துத் தூவ வேண்டும். தேவைப்பட்டால், இதை மீண்டும் செய்ய வேண்டும்.

பூச்சித் தாக்குதலை எப்படிக் கண்டறிவது?

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) இலைகளின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியை, வாரத்தில் குறைந்தது இரண்டு முறை கவனிக்க வேண்டும்.

மஞ்சள் புள்ளிகள், இலைச்சுருக்கம், வெண்மைத் தோற்றம், இலையுதிர்வு போன்ற அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்.

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) இளம் தளிர்கள் மற்றும் இலைக்காம்புகளில் அசுவினி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் இருப்பை அறிய வேண்டும்.

சிலந்தி வலையைப் போன்ற நுண்ணிய அமைப்புகள் மற்றும் இலை நிறமாற்றம் காணப்பட்டால், அது, சிலந்திப் பூச்சித் தாக்குதல் எனச் சந்தேகிக்கலாம்.

தொடக்க நிலையிலேயே தாக்குதலைக் கண்டறிந்தால், குறைந்த செலவில் மேலாண்மை செய்ய முடியும்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) ஒரு மருத்துவப் பயிர் என்பதால், தேவையற்ற பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைத் தவிர்த்து, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையைப் பின்பற்றுவது சிறந்தது. தடுப்பு, கண்காணிப்பு, இயற்கை எதிரிகளைப் பாதுகாத்தல் மற்றும் தேவையின் போது மட்டும் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமாகும்.

பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்

பூச்சித் தாக்குதல் இல்லாத தரமான விதை அல்லது நடவுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

நிலத்தைச் சுற்றியுள்ள களைகள் மற்றும் பூச்சிகளுக்கு மாற்று வாழிடமாக இருக்கும் தாவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நைட்ரஜன் உரத்தை அதிகமாக இடுவதைத் தவிர்த்து, சமச்சீர்ச் சத்து மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும்.

நிலத்தைத் தொடர்ந்து கண்காணித்து, ஆரம்ப நிலையில் காணப்படும் பூச்சிகளைக் கைகளால் அகற்றலாம். அல்லது பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றலாம்.

மாவுப்பூச்சி போன்றவை குறைந்தளவில் இருந்தால், அவற்றை, நீரழுத்தத் தெளிப்பு மூலம் அகற்றலாம்.

பயிர்களுக்கு நன்மை செய்யும் பொறி வண்டுகள், சிலந்திகள் மற்றும் பயனுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஆரம்ப நிலையில் வேப்பெண்ணெய் அல்லது சரியான தாவரங்கள் சார்ந்த தயாரிப்புகளை, வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் அளவில் பயன்படுத்தலாம்.

சிலந்திப்பூச்சித் தாக்குதலின் போது, நிலத்தில் அதிக வறட்சியைத் தவிர்த்து, தேவையான பாசனத்தை வழங்க வேண்டும்.

தாக்குதல், பொருளாதாரச் சேத அளவைத் தாண்டினால், வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் பூச்சிக்கொல்லிகளை மட்டும், சரியான அளவு மற்றும் காத்திருப்புக் காலத்துடன் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவப் பயிர் என்பதால் கூடுதல் கவனம்

வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) வேர், மருத்துவத்தில் பயன்படுவதால், பூச்சிக் கட்டுப்பாட்டில், உணவு மற்றும் மருத்துவ மூலப்பொருள் பாதுகாப்பு விதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, அறுவடைக்கு முன் பூச்சிக்கொல்லிக் காத்திருப்புக் காலத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். தேவையற்ற இரசாயனப் பயன்பாட்டைத் தவிர்த்து விட்டு, ஒருங்கிணைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மை முறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது.

விவசாயிகளுக்கான ஆலோசனை

பூச்சி வந்த பிறகு மருந்தைத் தெளிப்பதை விட, பூச்சி வருவதற்கு முன்பே கண்காணித்துத் தடுப்பதே சிறந்த மேலாண்மை. எனவே, தரமான நடவுப்பொருள், வயல் சுத்தம், சமச்சீர் உரமிடுதல், முறையான பாசனம், தொடர் கண்காணிப்பு, நன்மை செய்யும் உயிரிகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினால், வெண்கொடிவேலி (Plumbago zeylanica L.) பூச்சித் தாக்குதலைக் குறைத்து, தரமான மருத்துவ மூலப்பொருளைப் பெற முடியும்.


முனைவர் பெ.அனுராதா,

பூச்சியியல் துறை, முனைவர் ம.அம்மான், தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை. 


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • ஆடிப்பட்டத் துவரை சாகுபடி!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • பாக்கு சாகுபடி!

  • ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு!

  • மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை!

  • அறுவடைக்குப் பிறகு வாழைத்தார்களைத் தாக்கும் நோய்கள்!

  • மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வகைகள்!

  • பயிர்களைப் பாதுகாக்கும் பூஞ்சைகள்!