துவரையானது புரதச்சத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பயறுவகைப் பயிராகும். உலகளவில் துவரை சாகுபடி 6.35 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதன் மூலம், 5.47 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
உலகளவில் இந்தியா 4.28 மில்லியன் டன், மலாவி 0.424 மில்லியன் டன், மியான்மர் 0..339 மில்லியன் டன், டான்சானியா 0.136 மில்லியன் டன், ஹெய்டி 0.123 மில்லியன் டன் துவரம் பருப்பை உற்பத்தி செய்கின்றன.
இந்தியாவில், கர்நாடகத்தில் 14.10 இலட்சம் எக்டரிலும், மராட்டியத்தில் 11.76 இலட்சம் எக்டரிலும், மத்திய பிரதேசத்தில் 4.37 இலட்சம் எக்டரிலும், உத்தர பிரதேசத்தில் 3.64 இலட்சம் எக்டரிலும், தெலுங்கானாவில் 2.27 இலட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது. இதன் மூலம், 3.66 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
பருவநிலை
இந்தியாவில் துவரையானது, வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் வரை 26-30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், பிந்தைய மழைக்காலமான நவம்பர் முதல் மார்ச் வரை 17-28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் பயிர் செய்யப்படுகிறது. துவரை, பூக்கும் பருவத்தில் மழையாலும், மோசமான மேக மூட்டத்தாலும் அதிகமாகப் பாதிக்கப் படுவதால், வளர்ச்சித் தடைபடுகிறது.
விதைக்கும் பருவம்
குறுகியகால இரகமாக இருந்தால், ஜூன் 15-ஆம் தேதிக்குள்ளும், நீண்டகால இரகமாக இருந்தால், ஜூலை 30-ஆம் தேதிக்குள்ளும் விதைக்கலாம்.
விதைப்பு முறை மற்றும் பயிர் இடைவெளி
குறைந்த வயது துவரையை அகலப்பாத்தி அமைத்தும், அதிக வயது துவரையைப் பார்கள் மற்றும் வாய்க்கால்களை அமைத்தும் விதைக்கலாம். பார் முறை விதைப்பு, நல்ல காற்றோட்டம் மற்றும் வேர் முடிச்சுகள் உருவாக வழி வகுக்கும்.
குறைந்த வயதில், அதாவது, 120-135 நாட்களில் விளையக்கூடிய, கோ.(ஆர்.ஜி)7, வம்பன் 1, வம்பன் 3, கோ.10 ஆகிய துவரை வகைகளை, 90×30 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.
அதிக வயதில், அதாவது, 180-200 நாட்களில் விளையக்கூடிய, கோ.6, கோ.8, கோ.9, வம்பன்2, எல்.ஆர்.ஜி.41, எல்.ஆர்.ஜி.52 ஆகிய துவரை வகைகளை, 120×30 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.
விதையளவு
நீண்டகாலத் துவரையைத் தனிப்பயிராகப் பயிரிட, எக்டருக்கு 10 கிலோ விதைகளும், கலப்புப் பயிராகப் பயிரிட, எக்டருக்கு 5 கிலோ விதைகளும் தேவைப்படும். குறைந்த வயதுள்ள துவரையைத் தனிப்பயிராகப் பயிரிட, எக்டருக்கு 15 கிலோ விதைகளும், கலப்புப் பயிராகப் பயிரிட, எக்டருக்கு 7 கிலோ விதைகளும் தேவைப்படும்.
விதை நேர்த்தி
விதைப்பதற்கு முன், ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் திரம் மற்றும் 1 கிராம் கார்பன்டாசிம் அல்லது 3 கிராம் திரம் அல்லது 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், இந்த விதை நேர்த்தி செய்த ஒருநாள் கழித்து, ரைசோபியல் கல்ச்சர் சி.பி.ஆர்.6 அல்லது சி..பிஆர்.9 பாஸ்போபாக்டீரியா (பேசில்லஸ் மெகாடிரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தயாரிப்பான 200 கிராம் பி.ஜி.பி.ஆர். சூடோமோனஸ் எஸ்.பி.-யில் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உர நிர்வாகம்
ஒரு எக்டருக்குத் தேவையான, 25 கிலோ நைட்ரஜன், 50 கிலோ பாஸ்பரஸ், 25 கிலோ பொட்டாஷ் மற்றும் 20 கிலோ கந்தக உரத்தைத் தருவதற்கு, 55 கிலோ யூரியா, 313 கிலோ சூப்பர் பாஸ்பேட், 42 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ், 154 கிலோ ஜிப்சம் வீதம் இட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை, எக்டருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, ஊட்டமேற்றிய தொழுவுரமாக இட வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்த நாளன்று ஒரு நீரும், விதைத்த மூன்றாம் நாள் உயிர் நீரும் தர வேண்டும். மேலும், பூக்கும் போதும், 50 சதவீதப் பூக்கள் பூக்கும் போதும், காய்களின் வளர்ச்சிப் பருவத்திலும் பாசனம் தர வேண்டும். நீர்த்தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். பூக்கும் பருவத்திலும், காய்களின் வளர்ச்சிப் பருவத்திலும், வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
களைக்கட்டுப்பாடு
பூக்கள் பூப்பதற்கு முன், விதைத்த 20-ஆம் நாள் மற்றும் 35-ஆம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லியாக இருந்தால், எக்டருக்கு 0.75 கிலோ (2.5 லிட்டர்) பென்டிமெத்தலின் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும்.
தொடர்ந்து, களை முளைத்த பிறகு, அதாவது, விதைத்த 15-ஆம் நாளில், எக்டருக்கு 60 கிராம் இம்மாசித்திபார் வீதம் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி
பூக்கும் முன்பு, ஒரு லிட்டர் நீருக்கு 40 மி.கி. என்.ஏ.ஏ. வீதம் ஒருமுறையும், அடுத்து, பதினைந்து நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி அல்லது 20 கிராம் யூரியா வீதம் கலந்து, பூக்கும் காலத்தில் ஒருமுறையும், 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. சாலிசிலிக் அமிலம் வீதம் கலந்து, செடிகள் பூப்பதற்கு முன் தெளிக்க வேண்டும். இதையே பதினைந்து நாட்கள் கழித்து மறுபடியும் தெளிக்க வேண்டும்.
பூச்சிக் கட்டுப்பாடு
காய்ப்புழுக்கள், பச்சைக் காய்த்துளைப்பான், புள்ளிக் காய்த்துளைப்பான், இறகுப்பூச்சி, துவரங்காய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 150 மி.லி. குளோரின் திரோனேபுரோல் 18.5% மருந்து, 220 கிராம் எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி. மருந்து, 100 மி.லி. ப்ளூபென்டமைடு 39.35% எஸ்.சி. மருந்து, 125 மி.லி. ஸ்பினோசட் 45% எஸ்.சி. மருந்து, 1,250 மி.லி. குளோரிபைரிபாஸ் 20 ஈசி. மருந்து ஆகியவற்றில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
கதிர்நாவாய்ப் பூச்சியைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டைமெத்தேயேட் 30% ஈசி. மருந்து அல்லது 500 மி.லி. மீதைல் டெமட்டான் 25% ஈசி. மருந்தைத் தெளிக்க வேண்டும்.
கொப்புள வண்டைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 1,000 மி.லி. லேம்ப்டா சயலத்ரின் 5 ஈசி. மருந்து வீதம் எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நோய்க் கட்டுப்பாடு
வாடல் நோய் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனஸ் எஸ்.பி. அல்லது டிரைக்கோடெர்மா அஸ்பரில்லம் வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, விதைத்த 30-ஆம் நாள் நிலத்தில் இட வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத சிலந்திப் பூச்சியால் பரவும் மலட்டுத் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளை அகற்றி விட வேண்டும்.
மேலும், நோய்த் தென்பட்டதும், ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. ஸ்பைரோ மைசிஃபென் மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.கி. பெனசோகுயூன் மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. புராபர்கைட் 57% ஈசி. மருந்து அல்லது எக்டருக்கு 3 கிலோ வெட்டெபில் சல்பர் 40 டபுயூ.பி. வீதம் எடுத்து, 700 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
எண்பது சதவீதக் காய்கள் முதிர்ந்த பின் செடிகளை அறுவடை செய்து, ஒரு வாரம் குவித்து வைத்திருக்க வேண்டும். பின்பு, குச்சியால் அடித்துக் காய்களைப் பிரித்தெடுத்து வெய்யிலில் காய வைக்க வேண்டும். 75 சதவீதக் காய்கள் பழுப்பு நிறத்துக்கு மாறிய பிறகு, விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் 10-12 சதவீதம் இருக்க வேண்டும்.
விளைச்சல்
மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களைக் கையாண்டால், எக்டருக்கு 2,000 முதல் 2,500 கிலோ துவரை மகசூல் கிடைக்கும். 5-6 டன் குச்சிகளைப் பெறலாம்.

முனைவர் அ.கோபிகிருஷ்ணன்,
முனைவர் அ.திருமுருகன், முனைவர் பு.திலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

