பருவம்: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்.
நிலம் தயாரித்தல்: செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்தவை. கோடை மழையைப் பயன்படுத்தி, சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். கோடை உழவினால் மண்ணரிப்பைத் தடுத்து மழைநீரைச் சேமிக்கலாம். கோடை மழையில் முளைக்கும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின் போது மேலே வந்து அழிவதால், பயிர்க் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.
விதையளவு: வரிசை விதைப்புக்கு எக்டருக்கு 10 கிலோ. தூவுவதற்கு 12.5 கிலோ.
இடைவெளி: வரிசைக்கு வரிசை 22 செ.மீ. பயிருக்குப் பயிர் 10 செ.மீ.
விதையும் விதைப்பும்: கை விதைப்பு அல்லது விதைக்கும் கருவி மூலம் வரிசையில் விதைக்கலாம். இப்படிச் செய்தால், அதிகப் பரப்பளவில் மண் ஈரம் காயுமுன்பே விதைத்து முடிக்கலாம்.
நுண்ணுயிர் விதை நேர்த்தி: ஒரு எக்டர் விதைக்குத் தேவையான அசோபாசை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால், எக்டருக்குத் தேவையான அசோபாசை, 25 கிலோ மணல் மற்றும் 5 கிலோ தொழுவுரத்தில் கலந்து தூவ வேண்டும்.
உரமிடுதல்: ஒரு எக்டர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை, கடைசி உழவின் போது பரப்பி நிலத்தை உழ வேண்டும். பிறகு, 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். மேலுரமான 20 கிலோ தழைச்சத்தை, விதைத்து 20-25 நாட்கள் கழித்து, கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி இட வேண்டும்.
களை நிர்வாகம்: விதைத்த 18-20 நாளில் ஒருமுறை களையெடுத்தல் அவசியம். பின், 40 நாளில் தேவைப்பட்டால் இன்னொரு முறை களையெடுக்கலாம்.
பயிர்களைக் களைதல்: விதைத்த 18-20 நாளில் பயிர்களைப் பிடுங்கி, தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: இந்தப் பயிரைப் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே, பயிர்ப் பாதுகாப்பு அவசியம் இல்லை.
இரகங்கள்: கோ.6. இது, 85-90 நாட்களில் விளையும். எக்டருக்கு 1,500-1,700 கிலோ மகசூல் கிடைக்கும். இறவை மற்றும் மானாவாரியில் விதைக்கலாம். கோ(தி)7. இது, 85-90 நாட்களில் விளையும். எக்டருக்கு 1,900-2,000 கிலோ மகசூல் கிடைக்கும். மானாவாரியில் பயிரிட ஏற்றது.
ஆடி, புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் தினைப்பயிர் நன்கு வளரும். செம்மண், இருமண் கலந்த நிலங்கள் உகந்தவை. உயர் விளைச்சலைத் தரக்கூடிய இரகத்தை விதைத்தால், அதிக விளைச்சலைப் பெறலாம். குறிப்பாக, கோ(தி)7 தினை இரகத்தின் மூலம் நல்ல விளைச்சலைப் பெறலாம்.
அறுவடையும் விளைச்சலும்: கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்ததும் அறுவடை செய்து களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்துச் சுத்தம் செய்தல் வேண்டும். உயர் விளைச்சல் இரகங்களை விதைப்பது மற்றும் சீரிய சாகுபடிக் குறிப்புகளைக் கடைபிடிப்பதன் மூலம், எக்டருக்கு 1,855 கிலோ தானிய மகசூலையும், 5,500 கிலோ தட்டை மகசூலையும் பெறலாம். தானியத்தைச் சாக்குப் பைகளில் வைத்து நீண்டகாலம் சேமிக்கலாம்.
மா.சௌந்தர்ராஜன், வேளாண்மை அலுவலர், நாமக்கல்.