சத்துமிக்க சிறுதானிய வகைகளில் சத்துகள் நிறைந்தது கம்பு. இத்தகைய கம்பு சாகுபடி, தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாகப் பயிரிடப்படும் உணவுப் பயிராகும். இது, நீர்வளம், மண்வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. கம்பு, தானியமாக மட்டுமின்றி, சிறந்த கால்நடைத் தீவனமாகவும் விளங்குகிறது.
அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறையைப் போக்குவதில், கம்பு மிகச் சிறந்த தானியமாகும். சந்தையில் நல்ல வரவேற்புள்ள இந்தக் கம்பைப் பயிரிட்டால், அதிக இலாபம் பெறலாம்.
கம்பு இரகமும் பருவமும்
வீரிய மற்றும் ஒட்டு இரகங்களான, தன்சக்தி, கோ.9, கோ.10 போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. இந்த இரகங்களை, மானாவாரியில் ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், இறவையில் மாசிப்பட்டம் மற்றும் சித்திரைப் பட்டத்தில் பயிரிடலாம்.
விதையளவு, விதைநேர்த்தி
ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து, விதையளவு மாறுபடும். ஒரு கிலோ விதைகளுக்கு 6 கிராம் மெட்டலாக்சில் வீதம், கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அல்லது விதைப்பதற்குச் சற்று நேரத்துக்கு முன், அசோஸ்பைரில்லத்தைக் கலந்து நேர்த்தி செய்து, 45×15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
உர அளவு
எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம், 70 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். கம்பில் நுண்சத்துக் குறையைத் தடுக்க, தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை வழங்கும், சிறுதானிய நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை, 40 கிலோ மண்ணில் கலந்து இட வேண்டும்.
களை நிவாகம்
கம்பை விதைத்த, 15 மற்றும் 30 நாட்களில் களையெடுக்கும் போது, பயிருக்குப் பயிர் 15 செ.மீ. இடைவெளி இருக்கும் வகையில், பயிர் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். அல்லது களைகொல்லி மூலம் களைகளைக் கட்டுப்படுத்த, விதைத்த 3-ஆம் நாள் மற்றும் 25-30 நாட்களில், 250 கிராம் அட்ரசின் மருந்தை, 500 லிட்டர் நீரில் கலந்து, மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது, தெளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்த, 5 சதவீத வேப்பங்கொட்டைச் கரைசலைத் தெளிக்க வேண்டும். கதிர் நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 750 கிராம் கார்பரில் 50 எஸ்.பி. மருந்தை, பயிர்கள் பூக்கும் சமயத்தில் தூவ வேண்டும். தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 12 விளக்குப்பொறி பொறிகளை வைக்க வேண்டும்.
நோய்கள்: அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேன் ஒழுகல் நோயைக் கட்டுப்படுத்த, மெட்டாலாக்சில் அல்லது கார்பென்டாசிம்மை, பயிர்கள் பூக்கும் போது தெளிக்க வேண்டும். துரு நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும். தேவைப்படின், பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறமாக மாறிக் காய்ந்த நிலையில் இருக்கும். தானியங்கள் காய்ந்து கடினமாக இருக்கும். அப்போது, கதிர்களை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். ஒருவாரம் கழித்து, தட்டையைன் அறுவடை செய்து, நன்கு காயவிட்டுச் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குத் தீவனமாக இடலாம்.
மகசூல்
மானாவாரியில் 1.5-2.5 டன், இறவையில் 2.5-3.5 டன் தானியம், மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் ஸ்ரீவர புத்தி புவனேஸ்வரி, அடிப்படை மற்றும் சமூக அறிவியல் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை – 641 301.