உணவே மருந்து என்பது, நம் முன்னோர் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். தற்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டுள்ளதால், பலவகையான நோய்களுக்கு ஆளாகிறோம்.
கேழ்வரகை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு, இருதய நோய், சுண்ணாம்புச்சத்துப் பற்றாக்குறை போன்றவற்றில் இருந்து விடுபடலாம் கேழ்வரகில் மற்ற தானியங்களைக் காட்டிலும் கால்சியம், இரும்பு, புரதம், நார்ச்சத்து ஆகியன அதிகமாக உள்ளன. எனவே, வேளாண் விஞ்ஞானிகளும் இதன் உற்பத்தியை அதிகப்படுத்த முனைகின்றனர். நல்ல பருவமழை இருந்தால், இறவையைக் காட்டிலும் மானாவாரியில் அதிக இலாபம் தரவல்லது கேழ்வரகு.
பருவம்: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்.
நிலம் தயாரித்தல்: செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலம் கேழ்வரகைப் பயிரிட உகந்தது. நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு, மூன்றாவது உழவில் தொழுவுரத்தை இட்டுப் பயிரிட்டால் கேழ்வரகு அதிக இலாபத்தைத் தரும்.
நாற்றங்கால் விதைப்பு: கேழ்வரகில் மகசூலை அதிகரிக்க, தூர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கு, சரியான பயிர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, நாற்றங்கால் விதைப்பு இறவைக்கு மட்டுமின்றி, மானாவாரிக்கும் ஏற்றதாகும்.
நாற்றங்கால் முறையில் பயிரிட எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவை. ஒரு எக்டரில் பயிரிட 12.5 சென்ட் நாற்றங்கால் தேவை. பாசனத்திற்கு ஏற்ப, பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளின் அளவு 10-20 அடி வரை, பாத்திகளின் இடைவெளி 30 செ.மீ. வரை இருக்கலாம்.
நடவு: 17-20 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை, குத்துக்கு 2-3 வீதம், 7.5 செ.மீ இடைவெளியில் நடலாம். வளர்ச்சியை அதிகரிக்க நுண்ணுயிர் உரங்களை இடலாம்.
உர நிர்வாகம்: ஒரு எக்டர் நிலத்தில் 12.5 டன் மட்கிய தொழுவுரத்தைக் கடைசி உழவின் போது பரப்பி உழ வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். இல்லையெனில், தழை, மணி, சாம்பல் சத்துகளை எக்டருக்கு முறையே 60:30:30 கிலோ இட வேண்டும்.
விதைக்கும் போதே அடியுரமாக மணி மற்றும் சத்துகள் முழுவதையும் இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதியளவு இட்டு மீதமுள்ளதைச் சரிபாதியாகப் பிரித்து மேலுரமாக இருமுறை, விதைத்த 25-30 மற்றும் 40-45 நாட்களில் இட வேண்டும். பருவமழை சரியாக இல்லாத காலங்களில் மீதமுள்ள தழைச்சத்து முழுவதையும் ஒரே தடவையில் மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப மேலுரமாக இடலாம்.
நுண்ணுயிர் உரங்கள்: பத்து பொட்டலம் அசோபாசை, 25 கிலோ மண் மற்றும் மட்கிய தொழுவுரத்தில் கலந்து ஒரு எக்டர் நிலத்தில் பரப்பலாம். இறவையில் 5 பொட்டலம் அசோபாசை, 40 லிட்டர் நீரில் கலந்து அதில் நாற்றுகளை 15-30 நிமிடம் வேர் மூழ்கும்படி நனைத்தும் நடலாம்.
களை நிர்வாகம்: விதைத்த அல்லது நாற்று நட்ட 18 நாளில் ஒரு முறையும், 45 நாளில் மற்றொரு முறையும் களையெடுக்க வேண்டும். அல்லது எக்டருக்கு 2 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 3 லிட்டர் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை 625 லிட்டர் நீரில் கலந்து, நாற்றுகளை நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்: கேழ்வரகைப் பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. எனினும், பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப்புழு, தண்டுத் துளைப்பான், சாறு உறிஞ்சிகள், இலைப்பேன், வேர் அசுவினி முதலிய பூச்சிகள் தாக்கலாம். வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, மாலத்தியான் (50 ஈசி) 200 மில்லியை நீரில் கலந்து தெளிக்கலாம்.
தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த, தூர்க்கட்டும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் மேலே கூறப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தையே தெளிக்கலாம். வேர் அசுவினியைக் கட்டுப்படுத்த, டைமித்தோயேட் 0.03 சதம் கலவையை வேர்ப் பகுதியில் ஊற்றலாம். சாறு உறிஞ்சிகளைக் கட்டுப்படுத்த, மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கலாம்.
நோய்கள்: கேழ்வரகை, குலைநோய், செம்புள்ளி நோய் மற்றும் தேமல் நோய் தாக்கும். குலைநோயைக் கட்டுப்படுத்த, 200 கிராம் பெவிஸ்டின் மருந்தை, நட்ட 20-45 நாட்களில் நீரில் கலந்து தெளிக்கலாம். செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, ஒரு எக்டருக்கு எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது மேன்கோசெப் 1 கிலோ வீதம் எடுத்து நீரில் கலந்து தெளிக்கலாம்.
தேமல் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற பயிர்களை முதலில் அகற்ற வேண்டும். இதைப் பரப்பும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மில்லி டெமட்டான் அல்லது மோனோ குரோட்டோபாஸ் 0.05 சதம் மருந்தை, நோய் தோன்றியதும் மற்றும் 20 நாட்கள் கழித்து மறுமுறை தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் சேமிப்பு: கதிர்கள் நன்கு காய்ந்து மணிகள் முற்றிய பிறகு குறைந்தது இருமுறை அறுவடை செய்ய வேண்டும். பின் கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்து விதைகளைப் பிரிக்க வேண்டும். பிறகு, விதைகளை நன்றாகக் காய வைத்துச் சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.
எண்ணற்ற வழிகள் இருந்த போதும், கீழ்கண்ட முறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால் கட்டாயம் இலாபம் உண்டு.
+ பயிர் எண்ணிக்கை, அசோபாஸ் உயிர் உர விதை நேர்த்தி.
+ சூடோமோனாஸ் உயிர் பூசணக்கொல்லி விதை நேர்த்தி.
+ அதிக இலாபம் மற்றும் மண் நலத்தைக் காக்கும் வகையில் 4:1 அல்லது 8:2 வரிசையில் கேழ்வரகுடன் துவரை அல்லது மொச்சையை ஊடுபயிராக இடுதல்.
+ நாற்று நட்ட 18-25 நாட்களில் களையெடுப்பு.
+ குலைநோய்த் தாக்காமல் இருக்க, சூடோமோனாஸ் தெளிப்பு.
+ 70-80 விழுக்காடு கதிர்கள் முற்றியதும் அறுவடை செய்தல்.
+ சுத்தம் செய்யப்பட்ட களத்தில் கல் மற்றும் மண் கலக்காத வகையில் தானியத்தைப் பிரித்தெடுத்தல்.
+ தீவனத்தைப் பூசணம் தாக்காமல் இருக்க, தாள்களை நன்கு காய வைத்து முறையாகச் சேமித்தல்.
மா.சௌந்தர்ராஜன், வேளாண்மை அலுவலர், நாமக்கல் மாவட்டம்.