தென்னை மரம், பூலோகக் கற்பகம் விருட்சம் அல்லது மரங்களின் சொர்க்கம் அல்லது வாழ்க்கை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோகஸ் நுசிஃபெரா. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். எக்டருக்கு 10,345 தேங்காய்களை விளைவிக்கும் இந்தியா, உற்பத்தித் திறனில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சுமார் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. இதன் மூலம், 6917.46 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வகையில், ஒரு எக்டருக்கான சராசரி மகசூல் 14,873 காய்களாகும். தென்னையில் இருந்து, சத்துமிகு இளநீர், தேங்காய் எண்ணெய், தென்னை நார், எரிபொருளாகும் ஓடு, கூரையாகும் ஓலை மற்றும் மரம் என, நமக்குப் பயன்படும் பல்வேறு பொருள்கள் கிடைக்கின்றன.
இத்தகைய சிறப்புமிக்க தென்னையை, கேரள வேர் வாடல் நோய் தாக்கி வருகிறது. இது, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் 1882-இல் தோன்றியது. தற்போது தமிழ்நாட்டில் கேரளத்தை ஒட்டியுள்ள, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோயால் மரங்கள் சாகும் நிலை இல்லையெனினும், மரங்கள் மெதுவாகச் சோர்வடைவதல், காய்கள் மற்றும் அவற்றின் தரம் குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நோய், அனைத்து வயது மரங்கள், வீரிய ஒட்டு மற்றும் நாட்டு இரகங்களிலும், மண்ணிலும் காணப்படுகிறது. இது, ஒரே திசையில் பரவக் கூடியதில்லை. அதாவது, மூன்று ஆண்டுகளில் 1-4 கிலோ மீட்டர் வரை மட்டுமே பரவும். இந்நோய், இள மரங்களைத் தாக்கினால், பூக்கும் காலம் தள்ளிப் போகும். இலையழுகல் நோய் உண்டாகி, காய்களின் எண்ணிக்கை குறையும். இந்நோயின் தொடக்க நிலையில் 35 சதவீத மகசூல் இழப்பும், முற்றிய நிலையில் 85 சதவீத மகசூல் இழப்பும் ஏற்படும்.
நோய் அறிகுறிகள்
கேரள வேர் வாடல் நோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். எவ்விதக் காரணமும் இன்றி, குரும்பைகள் அதிகமாக உதிர்தல், இதன் முதல் அறிகுறியாகும். பிறகு, ஓலைகள் மஞ்சளாக மாறியும், ஓலை மடல்களின் ஓரங்கள் கருகியும், கீழ்நோக்கி வளைந்திருக்கும். இது, மனிதனின் விலா எலும்பைப் போலத் தெரியும்.
கருகிய பகுதிகள் காற்று அல்லது மழையின் போது உதிர்ந்து விடுவதால், ஓலைகளில் குச்சிகள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும். இந்த இரண்டு அறிகுறிகளும் நோய் முற்றிய மரங்களில் அதிகமாகக் காணப்படும். இந்நோய், இளங்குருத்துப் பகுதியைத் தாக்குவதால், குருத்து ஓலைகளிலும் இலையழுகல் அறிகுறிகள் தென்படும். மேலும், பூங்கொத்துக் கருகல், வேரழுகல் ஆகியன, இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
பரவும் விதம்
கேரள வேர் வாடல் நோய், கேன்டிடேட்ஸ் பைட்டோ பிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி மூலம் வருவதாகும். கண்ணாடி இறக்கைப் பூச்சி, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவும்.
நோய் மேலாண்மை முறைகள்
» இந்நோய், பிற மரங்களுக்குப் பரவுவதைத் தவிர்க்க, ஆண்டுக்குப் பாத்துக் காய்களுக்கும் குறைவாக அல்லது காய்கள் காய்க்காத மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.
» இந்நோயைத் தாங்கும் திறனுள்ள, கல்ப ரக்க்ஷா என்னும் சௌகாட் பச்சைக் குட்டை, கல்பஸ்ரீ என்னும் மலேயன் பச்சைக் குட்டை மற்றும் சௌகாட் பச்சைக் குட்டை x மேற்குக் கடற்கரை நெட்டையில் இருந்து பெறப்பட்ட, வீரிய ஒட்டு இரகத்தைப் பயிரிட வேண்டும்.
» தென்னந் தோப்பில், அடிக்கடி களைக்கொல்லியைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், மண்வளம் பாதிப்பதுடன், மரங்களின் வளர்ச்சியும், அவற்றின் நோயெதிர்ப்புத் திறனும் குறையும்.
» வட்டப் பாத்திகளில், தென்னை மட்டைகள் மூலம் மூடாக்கு அமைக்க வேண்டும்.
» நீர் வசதியுள்ள பகுதிகளில் 7-10 நாட்களுக்கு ஒருமுறை, நிலம் முழுவதும் நீரைப் பாய்ச்சும் முறை வழக்கத்தில் உள்ளது. இதனால், பாசன நேரம் கூடுவதுடன், களை மற்றும் நோய்க் கிருமிகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, நீர் மூலம் பரவும்.
» அத்துடன், நீரில் கரையும் உரச்சத்துகளும் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அடித்துச் செல்லப்படுவதால், அவை, எல்லா மரங்களுக்கும் சீரான அளவில் கிடைக்காத நிலை ஏற்படும்.
» மேலும், சத்துப் பொருள்கள் நீரில் கரைந்து வேர்களுக்குக் கீழே சென்று விடுவதால், மண்வளம் குறையவும் செய்யும். எனவே, நிலமெங்கும் பரவும் வகையில், பாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
» வடிகால் வசதி நன்றாக இருக்க வேண்டும். கோடையில் வாரத்துக்கு ஒருமுறை மரத்துக்கு 250 லிட்டர் நீர் வீதம் பாய்ச்ச வேண்டும்.
» பசுந்தாள் உரங்களான தட்டைப்பயிர், சணப்பு, கலப்பக் கோணியம், பியூரேரியா, தக்கைப்பூண்டு ஆகியவற்றை, வட்டப் பாத்திகளில் அல்லது தோப்பு முழுவதும் வளர்த்து, பூப்பதற்கு முன், மடக்கி உழுது விட வேண்டும்.
» தென்னையின் வயதுக்கேற்ப, வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள், அன்னாசி, காபி, ஜாதிக்காய், மரவள்ளி போன்றவற்றை, ஊடுபயிராக இட்டு வருவாயைப் பெருக்கலாம்.
» மரத்துக்கு, தொழுவுரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 1 கிலோ மற்றும் 0.5 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து, இரண்டு பாகமாகப் பிரித்து, ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும்.
» மரத்துக்கு, டிரைக்டோடெர்மா 100 கிராம், பேசில்லஸ் 100 கிராம், தொழுவுரம் 5 கிலோ வீதம் எடுத்து, ஒன்றாகக் கலந்து, மூன்று மாத இடைவெளியில், ஆண்டுக்கு நான்கு முறை மண்ணில் இட வேண்டும்.
» மேலும், இக்கலவையை இட்டு ஒரு மாதம் கழித்து, மரத்துக்கு 75 கிராம் காப்பர் சல்பேட் வீதம் இட வேண்டும். இதை, நுண்ணுயிர்க் கலவையை இட்ட ஒவ்வொரு முறையும் இட வேண்டும். இதன் மூலம், நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும்.
» மரத்துக்கு, 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் பாஸ்போபாக்டீரியா, 50 கிராம் வேர் உட்பூசணம் வீதம் எடுத்து, தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். இதை, ஆண்டுக்கு இருமுறை செய்ய வேண்டும்.
» மரத்துக்கு, 40 மி.லி. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தென்னை டானிக் வீதம் எடுத்து, வேரில் கட்ட வேண்டும். இப்படி, ஆண்டுக்கு இருமுறை செய்ய வேண்டும். இதனால், தென்னையில் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, காய்ப்பிடிப்பு அதிகமாகி மகசூல் பெருகும்.
» நோய்க் காரணிகளான, கண்ணாடி இறக்கைப் பூச்சி, தத்துப்பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 250 கிராம் வேப்பம் புண்ணாக்குத் தூள் அல்லது 250 கிராம் ஃபிப்ரோனில் 0.3 ஜி-யை, 200 கிராம் மணலில் கலந்து, குருத்தின் அடியில் இட வேண்டும்.
» ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி.லி. டைமீத்தோயேட், 1 மி.லி. ஒட்டும் திரவம் வீதம் கலந்து, ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
» இலையழுகலைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. ஹெக்சகோனசோல் வீதம் கலந்து, மரத்தின் குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும். இப்படி, 45 நாள் இடைவெளியில் மீண்டும் வேண்டும்.
» தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கோகோகான் கலவை 2 லிட்டரை, 8 லிட்டர் நீரில் கலந்து, வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும். இப்படி, மாதம் ஒருமுறை தொடர்ந்து செய்ய வேண்டும்.
» இத்தகைய ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளைத் தென்னையில் பின்பற்றினால், மண்வளம் காத்து, தென்னையின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டி, கேரள வேர் வாடல் நோயிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்கலாம்.
கோகோகான் நுண்ணுயிரிகளைப் பெருக்குதல்
தேவையான பொருள்கள்: கோகோகான் 5 லிட்டர், கரும்புச் சர்க்கரை 10 கிலோ, தயிர் 5 லிட்டர், நீர் 150 லிட்டர், உப்பு (சோடியம் குளோரைடு) 500 கிராம்.
செய்முறை: 150 லிட்டர் நீரில், 10 கிலோ கரும்புச் சர்க்கரை மற்றும் 5 லிட்டர் தயிரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
» அடுத்து, 5 லிட்டர் கோகோகான் கலவையைச் சேர்த்து, மூங்கில் கம்பால் பத்து நிமிடம் நன்கு கலக்க வேண்டும்.
» அடுத்து, 500 கிராம் சோடியம் குளோரைடு உப்பைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
» பிறகு, சாக்கால் மூடி, நிழலுள்ள இடத்தில் 5-7 நாட்கள் வைக்க வேண்டும்.
» இந்தக் காலத்தில் தினமும் மூன்று வேளை, இந்தக் கலவையை மூங்கில் கம்பால், பத்து நிமிடம் வரை கலக்க வேண்டும்.
» இப்படி இனப்பெருக்கம் செய்த கலவையை, 2 லிட்டருக்கு 8 லிட்டர் நீர் வீதம் கலந்து, வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு மாதம் ஒருமுறை ஊற்ற வேண்டும்.
கவனிக்க வேண்டியவை
» கோகோகான் கலவையை, மற்ற பூசணக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லியுடன் கலக்கக் கூடாது.
» ஆனால், இந்தக் கலவையை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம்.
பயன்கள்
» இது, சிக்கனமான முறை. இதனால், பயிர்களின் வளர்ச்சியும் மகசூலும் அதிகமாகும்.
» இதனால், தென்னையின் நோயெதிர்ப்புத் திறன் அதிகமாகும்.
» இந்த நுண்ணுயிரிகள், மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி, பல மடங்காகப் பெருகி, மரங்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பைத் தரும்.
» இந்தக் கலவையால், நிலத்திலுள்ள மண் புழுக்கள் உள்ளிட்ட எந்த உயிரிக்கும், தீமை விளைவதில்லை.
டாக்டர். எஸ். ஸ்ரீவர புத்தி புவனேஸ்வரி, இணைப் பேராசிரியர் – வேளாண் விரிவாக்கம், அடிப்படை மற்றும் சமூக அறிவியல் துறை, வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301