மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முல்லைப் பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 134 அடி வரை மட்டுமே கேரள அரசுத் தண்ணீரைத் தேக்குகிறது என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
அதேபோல, மேகதாதுவில் அணையைக் கட்டும் முயற்சியில் உள்ள கர்நாடகத்தை, மத்திய அரசுத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முழக்கமிட்டனர்.
முல்லைப் பெரியார் அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
மேலும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பக் கொள்கையை, மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர்.