செப்டம்பர் மாதத்துக்கான 36.76 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43 ஆவது கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. டெல்லியில், எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறைச் செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரித் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாகப் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் முன்வைத்தக் கோரிக்கைகள்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது முழுக் கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக உள்ளது.
இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 7,684 கனஅடி நீர்வரத்து உள்ளது.
விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காக, வினாடிக்கு 12,850 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக அணைகளிலும், போதுமான அளவில் நீர்வரத்து மற்றும் சேமிப்பு இருப்பதால், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, செப்டம்பர் மாதத்திற்கு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட்டு, அதை எல்லைப் பகுதியான பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.