My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு! kini https://pachaiboomi.net/331-2/

ளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழி இனங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது.

எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது.

இந்தியாவில், கோழி, காடை, வாத்து வளர்ப்புக்கு அடுத்த நிலையில், கினிக்கோழி வளர்ப்பு உள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

குறைந்த முதலீடு மற்றும் குறைவான பராமரிப்பில், அதிக இலாபம் தரும் கினிக் கோழிகள், இறைச்சிக்கு என, சிறிய அளவில் வளர்க்கப் படுகின்றன.

கினிக்கோழி வகைகள்

இந்தியாவில், சாம்பல், வெள்ளை, இலாவென்டர், வெள்ளை மார்பக வகைக் கினிக் கோழிகள் உள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், நந்தனம் கினிக்கோழி 1 என்னும் தரம் மேம்பட்ட கினிக்கோழியை உருவாக்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஈசட் நகரிலுள்ள மத்திய கோழியின ஆராய்ச்சி நிலையம், கடம்பரி, சிற்றம்பரி, செடெம்பரி ஆகிய கினிக்கோழி வகைகளை உருவாக்கி உள்ளது.

தரம் மேம்பட்ட இந்தக் கினிக் கோழிகள், குறைந்த வயதில், அதிக எடையில் வளரும் திறனும், முட்டையிடும் திறனும் மிக்கவை.

கினிக்கோழியின் சிறப்புகள்

கறுத்த உடலில் வெள்ளைப் புள்ளிகளுடன் பார்ப்பதற்கு அழகாக, அதிக நோயெதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எல்லாத் தட்ப வெப்பச் சூழலிலும் வளரும். வீட்டுக்கும் வயலுக்கும் காவலாக இருக்கும்.

கீரை போன்ற இலை தழைகள், புற்களைத் தீனியாகக் கொள்வதால், தீவனச் செலவும் குறையும். புறக்கடை வளர்ப்புக்கு ஏற்றது.

மண்ணிலுள்ள புழு, பூச்சிகள் மற்றும் களைகளை உண்பதால், சிறந்த பூச்சிக்கொல்லி உயிரியாக விளங்குகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பாம்பைக் கண்டால், ஓசையெழுப்பி அதைத் துரத்தும் தன்மை மிக்கது.

வீட்டில் வளர்த்தாலும் இதன் இறைச்சி, காட்டுக்கோழி இறைச்சியைப் போலவே வாசமாக இருக்கும். இந்த இறைச்சி சிறந்த விலங்கினப் புரதமாகும்.

இதில், உயிர்ச் சத்துகள் நிறைந்தும், கொழுப்புக் குறைந்தும் இருப்பதால், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் உண்ணலாம்.

முட்டை ஓடு தடித்து இருப்பதால், உடைவது குறைவாக இருக்கும்; நெடுநாட்கள் கெடாமல் இருக்கும். இதன் எச்சம் நல்ல எருவாகும்.

கினிக்கோழியின் உற்பத்தித் திறன்

முட்டையின் எடை: 38-40 கிராம்

ஒருநாள் குஞ்சின் எடை: 25-29 கிராம்

4 வாரத்தில் உடல் எடை: 160-180 கிராம்

8 வாரத்தில் உடல் எடை: 500-550 கிராம்

12 வாரத்தில் உடல் எடை: 800-1,000 கிராம்

16 வாரத்தில் உடல் எடை: 1,100-1,200 கிராம்

இறைச்சி விற்பனை வயது: 12-16 வாரங்கள்

உயிர் வாழும் திறன்: 94-96 சதம்

வளர்ந்த சேவலின் எடை: 1.5 கிலோ

வளர்ந்த பெட்டை எடை: 1.2-1.4 கிலோ

முட்டையிடத் தொடங்கும் காலம்: 20-24 வாரங்கள்

இடும் முட்டைகள்: 150-160

சேவல்:பெட்டை விகிதம்: 1:4

குஞ்சுப் பொரிப்புக் காலம்: 27 நாட்கள்

கருவளத் தன்மை: 70-80 சதம்

குஞ்சுப் பொரிப்புத் திறன் : 50-60 சதம்

வளர்ப்பு முறை

திறந்தவெளி மேய்ச்சல் முறை: இதில், வெட்ட வெளியில் மேயும் கினிக் கோழிகள், இரவில் மரக் கிளைகளில் தங்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 400-500 கினிக் கோழிகளை வளர்க்கலாம்.

கொட்டகை மற்றும் அடர் தீவனச் செலவு இல்லாததால், முதலீட்டுச் செலவும், பராமரிப்புச் செலவும் குறைவாகவே இருக்கும்.

ஆனால், இம்முறையில், கோழிகளைக் கவனிப்பதும், நோய்த் தடுப்பு முறைகளை எடுப்பதும், முட்டைகளைச் சேகரிப்பதும் கடினம்.

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை: இது, கிராமங்களில் பரவலாக உள்ள புறக்கடை கோழி வளர்ப்பு முறை.

இதில், பகலில் வெளியில் மேயும் கினிக் கோழிகள், இரவில் கொட்டகையில் தங்கும். இதனால், விலங்குகளிடம் இருந்து இவற்றைப் பாதுகாக்க முடியும்.

மேலும், மாலை நேரத்தில் சிறு தானியம், சமையல் கழிவு அல்லது அடர் தீவனத்தை அளிப்பதால், சத்துக் குறைகளைத் தவிர்க்கலாம்.

கொட்டில் முறை: வணிக நோக்கில் பெரியளவில் மற்றும் குறைவான இடத்தில் அதிகளவில், கினிக் கோழிகளை வளர்க்க, கொட்டில் முறையே சிறந்தது.

கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். நீளம் நூறு அடிக்கு மிகாமலும், அகலம் 24 அடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். தட்பவெப்ப நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில், ஆழ்கூள முறையில் இறைச்சிக்கு வளர்க்கப்படும் கினிக் கோழிக்கு 1.5 சதுரடி, முட்டைக்கு வளர்க்கப்படும் கினிக் கோழிக்கு 2.5 சதுரடி வீதம் இடவசதி இருக்க வேண்டும்.

கூண்டு முறையில் இறைச்சிக்கு வளர்க்கப்படும் கினிக்கோழிக்கு 0.75 சதுரடி, முட்டைக்கு வளர்க்கப்படும் கினிக்கோழிக்கு ஒரு சதுரடி வீதம் இடவசதி இருக்க வேண்டும்.

வளர்ப்புப் பருவம்

கோழிகளைப் போலவே, கினிக்கோழி வளர்ப்பில், நான்கு வாரம் வரை இளம் குஞ்சுப் பருவம், 5-8 வாரம் வரை குஞ்சுப் பருவம்,

9-20 வாரம் வரை வளர் பருவம், 20 வாரங்களுக்கு மேல் முட்டையிடும் மற்றும் இனப்பெருக்கப் பருவம் எனக் கணக்கிட்டுப் பராமரிக்க வேண்டும்.

இளம் குஞ்சுகள் பராமரிப்பு

ஒருநாள் கினிக்கோழிக் குஞ்சின் எடை 25-30 கிராம் இருக்கும். இந்தக் குஞ்சுகளுக்குச் செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.

இதற்கான குஞ்சுக் காப்பானை, குஞ்சுகள் பிறப்பதற்கு ஒருநாள் முன்பே தயாராக வைக்க வேண்டும்.

தரையில் மூன்று அங்குல உயரத்தில் நெல் உமியைப் பரப்பி, அதற்கு மேல் செய்தித்தாள் அல்லது கோணிப் பையை விரித்து வைக்க வேண்டும்.

குஞ்சுக் காப்பான், குடிநீர்க் கலன், தீவனக் கலன் ஆகியன, வட்ட வடிவில் இருக்க வேண்டும்.

ஒரு ச.மீ. பரப்பில் 20 குஞ்சுகளை வளர்க்கலாம். முதல் வாரத்தில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொடுக்க வேண்டும்.

அடுத்து, வாராவாராம் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீதம் குறைத்து, அறையின் இயல்பான வெப்ப நிலையை வழங்க வேண்டும்.

இந்தக் குஞ்சுகளைக் கூண்டில் வளர்க்க, எட்டு வாரம் வரையில், சாதாரணக் கோழிக்குஞ்சுக் கூண்டையே பயன்படுத்தலாம்.

தீவனக் கலன், குடிநீர்க் கலன் வசதியுடன் கூடிய 2x2x1 அடி நீள, அகல, உயரக் கூண்டில் 22 கினிக்கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாம்.

வளர்நிலைக் கோழிகள் பராமரிப்பு

கினிக்கோழி வளர்ப்பில், 9-20 வார வயதுள்ள கினிக் கோழிகள் வளரும் கோழிகள் எனப்படும்.

இப்போது ஒரு கினிக் கோழிக்கு 1.5 சதுரடி வீதம் இடம் தர வேண்டும். செயற்கை வெப்பம் தேவையில்லை.

வளர்நிலை கினிக் கோழிகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

முட்டைக் கோழிகள் பராமரிப்பு

இருபது வாரங்களைக் கடந்த கினிக் கோழிகள், முட்டை மற்றும் இனவிருத்திக் கோழிகள் எனப்படும்.

மேய்ச்சல் முறை கினிக்கோழி முட்டையிடும் இடத்தில், ஒரு பொய் முட்டையைச் செய்து அந்த இடத்தில் வைத்து விட்டு, அதன் முட்டையைச் சேகரிக்க வேண்டும்.

இல்லையெனில், மறுநாள் முட்டையிடும் இடத்தை மாற்றி விடும். ஒரு கோழி ஓராண்டில் 150-160 முட்டைகளை இடும்.

சேவலுக்கு 3 சதுரடி, பெட்டைக்கு 2.5 சதுரடி வீதம் இடம் தர வேண்டும்.

இனப்பெருக்கக் கினிக் கோழிகள் பருவத்துக்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும்.

24 வாரத் தொடக்கத்தில் ஆண்: பெட்டைக் கோழிகளை 1:4 வீதம் பிரித்து விட வேண்டும்.

இது, அதிக முட்டைகளை இடவும், கரு உற்பத்தி மற்றும் குஞ்சுப் பொரிப்புத் திறன் கூடவும் உதவும்.

கினிக் கோழிகளில் தொடக்க நிலையில் ஆண், பெண் வேறுபாட்டை அறிவது கடினம்.

எழுப்பும் ஒலி, தலை, தாடி மற்றும் கொண்டை மூலம் பாலினத்தை அறியலாம்.

கினிக் கோழிகளின் இன விருத்தித் திறன், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும். எனவே, இந்தக் கோழிகளுக்கு ஒளி மிகவும் அவசியம்.

நூறு சதுரடிக்கு ஒரு 40 வாட் குண்டு விளக்கு வீதம், ஆறடி உயரத்தில் 16 மணி நேரம் தொடர்ந்து எரிய வேண்டும்.

குஞ்சுப் பொரிப்புத் திறன்

கினிக்கோழி முட்டையின் அடைக்காலம் 28 நாட்கள். 5-7 நாட்களில் சேகரித்த முட்டைகளை, இயற்கை முறையில் நாட்டுக் கோழிகள் மூலமும்,

செயற்கை முறையில், குஞ்சுப் பொரிப்பான் மூலமும் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

கினிக்கோழி முட்டைகளின் குஞ்சுப் பொரிப்புத் திறன் 70 சதம் இருக்கும். இதை மேலும் கூட்ட, செயற்கை கருவூட்டல் முறையைக் கையாளலாம்.

வாய்ப்பற்ற கால நிலைகளில் ஏற்படும் கருவுறும் திறன் இழப்பைத் தவிர்க்க, செயற்கை கருவூட்டல் முறை உதவும்.

தீவன நிர்வாகம்

மேய்ச்சல் முறையில் வளரும் கினிக் கோழிகள்; கொசு, உண்ணி, வண்டு, புழுக், நத்தை, கம்பளிப் புழு போன்றவற்றை உண்டு, தமது சத்துத் தேவையைச் சரிக்கட்டிக் கொள்ளும்.

ஆனால், கொட்டிலில் வளரும் கோழிகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை. எனவே, எல்லாச் சத்துகளும் அடங்கிய அடர் தீவனத்தை இந்தக் கோழிகளுக்குத் தர வேண்டும்.

தீவனச் செலவைக் குறைக்க, வேலிமசால், முயல் மசால், சூபாபுல், அசோலா மற்றும் கரையானைத் தீனியாகத் தரலாம்.

புரதம் மிகுந்த அடர் தீவனம் கிடைக்காத நிலையில், சோயாப் புண்ணாக்கு மற்றும் கருவாட்டை முட்டைக் கோழித் தீவனத்தில் கலந்து தரலாம்.

கொட்டிலில் தீவனத் தட்டுகள், நீர்க்கலன்கள் போதியளவில் இருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் எந்நேரமும் இருக்க வேண்டும்.

கினிக்கோழித் தீவனக் கலவைகள்

இளம் குஞ்சுத் தீவனம்: மக்காச்சோளம் 44 சதம், கம்பு 10.75 சதம், சோயாப் புண்ணாக்கு 36.25 சதம், கருவாடு 7.5 சதம், தாதுப்பு 0.5 சதம், சுண்ணாம்பு 1 சதம் கலந்து இருக்க வேண்டும்.

குஞ்சுத் தீவனம்: மக்காச்சோளம் 40 சதம், கம்பு 12 சதம், எண்ணெயற்ற அரிசித் தவிடு 17.5 சதம், சோயாப் புண்ணாக்கு 21.25 சதம், கருவாடு 8 சதம், தாதுப்பு 0.5 சதம், சுண்ணாம்பு 0.5 சதம் கலந்து இருக்க வேண்டும்.

வளர்கோழித் தீவனம்: மக்காச்சோளம் 39.5 சதம், கம்பு 15 சதம், எண்ணெயற்ற அரிசித் தவிடு 21.5 சதம், சூரியகாந்தி புண்ணாக்கு 7 சதம், சோயாப் புண்ணாக்கு 8.5 சதம், கருவாடு 7 சதம், தாதுப்பு 1 சதம், சுண்ணாம்பு 0.75 சதம் கலந்து இருக்க வேண்டும்.

இனப்பெருக்கக் கோழித் தீவனம்: மக்காச்சோளம் 41 சதம், கம்பு 14.5 சதம், எண்ணெயற்ற அரிசித் தவிடு 9 சதம், சூரியகாந்தி புண்ணாக்கு 7 சதம், சோயாப் புண்ணாக்கு 11.5 சதம், கருவாடு 10 சதம், தாதுப்பு 1.5 சதம், கிளிஞ்சல் 5 சதம், சுண்ணாம்பு 0.5 சதம் கலந்து இருக்க வேண்டும்.

தீவன அளவு

இந்தக் கினிக்கோழித் தீவனத்தை, 0-4 வார இளம் குஞ்சுக்குத் தினமும் 10-30 கிராம், 5-8 வாரக் குஞ்சுக்கு 35-45 கிராம்,

9-24 வார வளர்நிலைக் கோழிக்கு 50-85 கிராம், 25 வாரத்துக்கு மேலான இனவிருத்திக் கோழிக்கு 100-110 கிராம் வீதம் வழங்க வேண்டும்.

இப்படிக் கொடுத்து வளர்த்தால் 14-16 வாரங்களில் 1-1.2 கிலோ எடையை அடையும். இதுவே விற்பனைப் பருவமும் ஆகும்.

ஆலோசனை

கினிக் கோழிகளை வளர்க்க விரும்புவோர், தங்களின் சுற்றுப்புறத்தில் கினிக்கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை வாய்ப்புகளை நன்கு அறிந்து கொண்டு, இதைச் செய்ய வேண்டும்.


கினிக்கோழி வளர்ப்பு! Dr. K.PREMAVALLI e1629361785551 https://pachaiboomi.net/331-2/

முனைவர் க.பிரேமவல்லி,

இணைப் பேராசிரியர், கோழி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203, செங்கல்பட்டு மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!