My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

வேளாண்மையை விழுங்கும் காட்டெருமைகள் – விவசாயிகள் கண்ணீர்..!

காட்டெருமைகள்

தேனி மாவட்டத்தில் போடி அருகே மலைக் கிராமங்களில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்து விட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விளை நிலங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி வருவதாகவும், உயிர்பலி வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்குகின்றனர்.

போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, போடிமெட்டு, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட கிராமங்களே இந்த கதறலுக்கு ஆளாகியிருப்பவை. அங்கு, சுமார் 30 ஆயிரம் ஏக்கரில், காபித் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்களில் ஏலக்காய், மிளகு மற்றும் சேமங்கிழங்கு உள்ளிட்டப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இந்த நிலையில், காட்டுப் பன்றிகளும் பயிர்களைச் சேதப்படுத்துவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விளைந்த மிளகை அறுவடை செய்யக் கூட அச்சத்துடன் தான் தோட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.

காட்டுப் பன்றிகளுக்கு மேலாக, காட்டெருமைகள், குட்டிகளுடன் தோட்டங்களில் தாராளமாக உலா வருவதாகவும், இதுவரை 10-க்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கிவிட்டதாகவும் விவசாயிகள் வருந்தம் அடைந்துள்ளனர்.

தோட்டத்துக்குச் சென்றால் உயிரோடு வீடு திரும்புவோமா என்று தங்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி விட்டதாகவும், குறிப்பாக இரவுநேரங்களில் தோட்டம் பக்கமே தலை வைக்க முடியாத அளவிற்கு அசாதாரணம் நிலவுவதாகக் கூறும் விவசாயிகள், வன விலங்குகளைத் தடுக்க, அகழிகள் அமைக்க வேண்டும்; சோலார் மின்வேலிகளை அமைத்துத் தர வேண்டும்; காடுகளில் விலங்குகளின் தாகத்தைத் தணிக்க, குட்டைகள், தடுப்பணைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும், அவை வெறும் காகிதங்களாகவே உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்கும் தீர்வாக, தேனி மாவட்ட வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றே நம்புவோம்…!


– செய்திப் பிரிவு, பச்சை பூமி

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!