My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

Micro greens

ன்றைய அவசர உலகில், உடலுக்கு நலம் பயக்கும் உணவைத் தேடுவோர்க்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான், மைக்ரோ கிரீன்ஸ் (Micro greens) என்று அழைக்கப்படும் நுண் கீரைகள். இவை, சாதாரணக் கீரைகளை விடப் பல மடங்கு சத்துகள் நிறைந்தவை.

உலகெங்கிலும் உள்ள நுகர்வோரின் ஆயுட் காலத்தையும் உடல் நலத்தையும் அதிகரிக்க உதவும் பல்வேறு சத்துகளைக் கொண்ட தனித்துவ உணவாக நுண் கீரைகள் வகைப்படுத்தப்படுகின்றன. இவை, மிகவும் குறைந்த செலவில் பயிரிடவும் மற்றும் வீட்டிலேயே எளிதாக வளர்க்கவும் ஏற்றவை.

இவை அளவில் சிறியதாக இருந்தாலும் புரதம் நிறைந்தவை. மேலும், ஏனைய வளர்ந்த கீரைகளை விட ஒன்பது மடங்கு சத்துகளைக் கூடுதலாகக் கொண்டவை. எனவே, சத்துமிகு உணவுப் பொருளை விரும்பும் அனைவரும், குறைந்த நேரம் மற்றும் குறைந்த முதலீட்டில், இந்த நுண்கீரை சாகுபடியில் ஈடுபடலாம்.

நுண் கீரைகள் என்றால் என்ன?

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நுண் கீரைகள் (Micro greens) என்பது, உண்ணத்தக்க புதிய வகைக் காய்கறிகள் ஆகும். இவை முளைக்கட்டிய தானியங்களுக்கு (Sprouts) அடுத்த நிலையில் உள்ளவை. இவற்றில் இலைகளும் தண்டுகளும் மட்டுமே உணவாகப் பயன்படும்.

நுண் கீரைகள் 1-3 அங்குலம், அதாவது 2.5-7.5 செ.மீ. உயரம் வரை வளர்க்கப்படும். சத்துகளும் நறுமணச் சுவையும் மிக்க இந்தக் கீரைகள், முளைத்த 7-14 நாட்களுக்குப் பிறகு, அதாவது, கீரைகளில் முதல் இலைகள் தோன்றியதும் அறுவடை செய்யப்படும்.

நுண் கீரைகளின் நன்மைகள்

ஒரு விதையில், தாவரத்தின் முதற்கட்ட வளர்ச்சிக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் உள்ளன. இவற்றின் முதிர்ந்த இலைகள், பூக்கள் மற்றும் பழத்துண்டுகளை உண்பதை விட, முளைத்த உடனே இவற்றை உண்ணும் போது, நமக்கு வைட்டமின்களும் தாதுகளும் அதிகளவில் கிடைக்கும்.

நுண் கீரைகளைப் (Micro greens) பச்சையாக உண்ணும் போது, அஸ்கார்பிக் அமிலம் போன்ற வெப்ப உணர் திறனுள்ள வைட்டமின் முழுமையாக நமக்குக் கிடைக்கும். இது, தோல், எலும்புகள் மற்றும் பிற இணைப்புத் திசுக்களின் முக்கிய அங்கமான கொலாஜன் உற்பத்திக்கு உதவும். மேலும், அஸ்கார்பிக் அமிலம் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படும், ஃப்ரீ ரேடிக்கல் மூலம் செல் சிதைவைத் தடுக்கும். இதைப்போல, குளோரோபில் மற்றும் பீனாலிக் சேர்மங்கள் நுண் கீரைகளில் அதிகமாக இருக்கும்.

சாதாரண முதிர்ந்த கீரைகளுடன் ஒப்பிடும் போது, இந்த நுண் கீரைகளில் (Micro greens) 4 முதல் 40 மடங்கு அளவில் சத்துகள் கூடுதலாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் கீரைகளில் நெடுநாட்கள் இளமையாக இருப்பதற்கான இரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், தினமும் தங்கள் உணவுப் பட்டியலில், இந்தக் கீரைகளைச் சிறியளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

திக ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள்: இவை உடலிலுள்ள நச்சுகளை நீக்க உதவும். இவற்றிலுள்ள புத்தம் புதிய குளோரோபில், சக்தி வாய்ந்த இரத்தச் சுத்திகரிப்பானாகச் செயல்படும்.

வைட்டமின்கள்: இந்தக் கீரைகளில் வைட்டமின்கள் C, E, K ஆகியன செறிந்துள்ளன.

தாதுகள்: முதிர்ந்த கீரைகளில் இருப்பதை விட இந்த நுண் கீரைகளில், (Micro greens) பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம் போன்ற நன்மை பயக்கும் சத்துகள் ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளன. இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன அதிகளவில் உள்ளன.

நோயெதிர்ப்பு சக்தி: இந்தக் கீரைகளில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியால். இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகள் குறைகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கொத்தமல்லியில் கண்களுக்கு நலம் புரியும் லுடீன் (Lutein), பீட்டா கரோட்டின் (Beta Carotene) ஆகியன மிகுதியாக உள்ளன. புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், புற்றுநோய்ச் செல்களின் செயலைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயக்கீரை, இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தது. மேலும், இதில் அதிகமாக இருக்கும் இரும்புச்சத்து, இரத்தச்சோகை சரியாக உதவுகிறது.

வீட்டில் வளர்ப்பது எப்படி?

நுண் கீரைகளை (Micro greens) வளர்க்க, பெரிய தோட்டம் தேவையில்லை; நம் வீட்டுச் சன்னல் ஓரமே போதுமானது.

1-2 அங்குலத் தொட்டியில் மட்கிய தென்னைநார்க் கழிவு அல்லது மண்ணை நிரப்பி, விதைகளை மேற்பரப்பில் அடர்த்தியாகவும் சமமாகவும் விதைக்க வேண்டும். தென்னைநார்க் கழிவை மீண்டும் மீண்டும் சிலமுறை பயன்படுத்தலாம். இதனால், செலவைக் குறைக்கலாம்.

சூரியகாந்தி, கோதுமைப்புல் போன்ற பெரிய விதைகளை, 6-8 மணி நேரம் நீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.

விதைத்த பிறகு விதைகளை மண்ணால் மூடி வைக்க வேண்டும். மண்ணை ஈரப்பதமாகவும் நீர்த் தேங்காமலும் வைக்க வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்க, ஒரு மூடியால் அல்லது துணியால் மூடி, 2-3 நாட்கள் இருண்ட மற்றும் வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும்.

விதைகள் முளைத்ததும், தினமும் 3-4 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி தேவையில்லை, வெளிச்சம் இருக்கும் இடத்தில் வைத்தால் போதும். தினமும் லேசாக நீரைத் தெளித்து வர வேண்டும். இதற்கு, பாட்டில் ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தலாம்.

செடிகள் 2-3 அங்குலம் வளர்ந்ததும், கத்தரிக்கோலால் தண்டுப் பகுதியை வெட்டிச் சேகரிக்கலாம்.

நுண் கீரைகளைச் (Micro greens) சிறிய பகுதிகளில் பயிரிட்டுப் பராமரிப்பது எளிதானது. இந்தக் கீரைகளை, மண் அல்லது மண்ணில்லா ஊடகங்களில், உள்ளே அல்லது வெளியே, செயற்கை அல்லது இயற்கை ஒளியில் வளர்க்கலாம். விவசாயிகள் சமையலறைக்குள் சிறியளவிலும் வணிக நோக்கில் பெரியளவிலும் இந்தக் கீரைகளை வளர்க்கலாம்.

நுண்கீரை சாகுபடியின் முக்கியத்துவம்

நுண் கீரைகளை, விதைத்ததிலிருந்து 7 முதல் 14 நாட்களில் அறுவடை செய்யலாம். இதற்காக அதிகக் காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆண்டு முழுவதும் இந்தக் கீரைகளை வளர்க்க முடியும், இதைக் கூடுதல் வருமான ஆதாரமாகப் பயன்படுத்தி, வருவாயைப் பெருக்க முடியும். விவசாயிகள் குறைந்த மூலதனத்தில் இதை மேற்கொள்ளலாம்.

நுண் கீரைகள் (Micro greens) இரண்டு வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால், பூச்சிக்கொல்லிகளோ, களைக்கொல்லிகளோ பயன்படுத்தத் தேவையில்லை. அதனால், இரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகள் நமக்குக் கிடைக்கும்.

உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் உணவுகளில் நுண் கீரைகளைச் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அதிகளவில் அறிந்து வருகின்றனர். இதனால், நுண் கீரைகளின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், வயல்வெளி சாகுபடியில் பல்வேறு இடற்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, சன்னலோர மற்றும் சமையலறை சாகுபடி என்பது பாதுகாப்பானது. ஆகவே, இன்று முதல் உங்கள் வீட்டிலும் நுண் கீரைகளை வளர்க்கத் தொடங்குங்கள்.


சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்! PARTHIBAN 1 https://pachaiboomi.net/micro-greens-a-treasure-trove-of-nutrition/

முனைவர் த.பார்த்திபன்,

ஈ.அய்யப்பன், ரா.விஜயபிரதீபா, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!