தமிழகத்தின் கிராமப்புறங்களில் இயல்பாக வளரும் பிரண்டை – Pirandai (Cissusquadrangularis) என்னும் மூலிகை, பல தலைமுறைகளாக உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. பொதுவாக, துவையல், இரசம், வற்றல் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்தச் செடி, எலும்பு முறிவு மற்றும் மூட்டு வலிக்கு நல்ல மருந்து என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த எளிய மூலிகை, உலக மருத்துவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, பிரண்டையில் உள்ள உயிர்ச் சத்துகள், பல்வகைப் புற்றுநோய்ச் செல்களுக்கு எதிராகச் செயல்படக் கூடியவை எனத் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) வெளியிட்ட 2024 மதிப்பீட்டின்படி, 2022-ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 20 மில்லியன் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதே ஆண்டில் 9.7 மில்லியன் புற்று நோயாளிகள் இறந்துள்ளனர். 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்று நோயாளிகள் எண்ணிக்கை 35 மில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு, நகர்ப்புற வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மாசு, மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் போன்றவை முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால், குறைந்த பக்க விளைவுகளுடன் கூடிய இயற்கை சார்ந்த மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் பிரண்டை ( Pirandai ) முக்கிய மருத்துவ மூலிகையாகப் பார்க்கப்படுகிறது. பிரண்டை விட்டேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி வகை மூலிகை. இது, இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக வளர்கிறது. தமிழில் பிரண்டை, இந்தியில் ஹட்ஜோட், சமஸ்கிருதத்தில் அஸ்திசம்ஹாரகா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பழங்காலத்தில் இருந்து பிரண்டை, எலும்பு முறிவு, வீக்கம், செரிமானக் கோளாறு, ஆஸ்துமா, வலி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள், இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள் எனப்படும் தாவர உயிர்ச் சத்துகள்; புற்றுநோய்ச் செல்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடும் என்று காட்டுகின்றன.
ஆய்வுகளின்படி, பிரண்டையில் குவெர்செடின், ரெஸ்வெராட்ரோல், ஃபிளாவனாய்டுகள், டிரைடெர்பெனாய்டுகள், கரோட்டினாய்டு, பி-சிட்டோஸ்டெரால், ஆல்கலாய்டுகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சேர்மங்கள் உள்ளன. இவை, உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்துச் செல்களைப் பாதுகாக்கின்றன. 2024-ஆம் ஆண்டு வெளியான பல மருத்துவ ஆய்வுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் தாவரங்களிலிருந்து பெறப்படும் பைட்டோ கெமிக்கல்கள்; எதிர்காலத்தில் புற்றுநோய்ச் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றன.
இவ்வகை இயற்கைச் சேர்மங்கள் அப்போப்டோசிஸ் (திட்டமிடப்பட்ட செல் இறப்பு), செல் சுழற்சி நிறுத்தம் மற்றும் கட்டி அடக்கம் போன்ற செயல் முறைகள் மூலம், புற்றுநோய்ச் செல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரண்டை தொடர்பான ஆய்வுகளும் இதையே உறுதி செய்கின்றன.
வாய்ப்புற்று நோய்க் குறித்த ஆய்வில், பிரண்டையின் எத்தனால் தண்டுச்சாறு KB வாய்வழி மேல் தோல் புற்று நோய்ச் செல்களில் அப்போப்டோசிசைத் தூண்டியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ROS உருவாக்கம், மைட்டோ கான்ட்ரியல் சேதம் மற்றும் பி-53 செயல்படுத்தல் மூலம், புற்று நோய்ச் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்ப்பப்பை புற்று நோய்த் தொடர்பான ஹெலா செல் ஆய்வில், பிரண்டை extract dose- dependent முறையில், புற்று நோய்ச் செல்களின் உயிர்த் தன்மையைக் குறைத்ததாகக் கண்டறியப்பட்டது. முக்கியமாக, சாதாரணச் செல்களுக்கு அதிகப் பாதிப்பு இல்லாமல், புற்றுநோய்ச் செல்கள் மீது அதிகத் தாக்கம் செலுத்தியதாக ஆய்வு கூறுகிறது.
நுரையீரல் புற்றுநோய்க் குறித்த 2021- ஆம் ஆண்டின் ஆய்வில், பிரண்டையின் எத்தனாலிக் சாறு, மனித நுரையீரல் புற்று நோய்ச் செல்களில் குறிப்பிடத்தக்க செல் நச்சு விளைவை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தோல் புற்று நோய்த் தொடர்பான ஆய்வில், புற ஊதாக் கதிர்வீச்சு மூலம் உருவாகும் A431 தோல் புற்று நோய்ச் செல்கள் மீது, பிரண்டைச்சாறு அப்போப்டொசிஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, புற்று நோய்ச் செல் பெருக்கத்தைக் குறைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மார்பகப் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் சார்ந்த ஆய்வுகளிலும் குவெர்செடின், ரூட்டின், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்ற பிரண்டைச் சேர்மங்கள்; புற்று நோய்ச் செல்களை எதிர்த்துச் செயல்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு வெளியான பெரிய நூலியல் பகுப்பாய்வு ஒன்றின்படி, தாவரங்களில் இருந்து பெறப்பட்ட புற்று நோய் எதிர்ப்புச் சேர்மங்கள் குறித்த ஆராய்ச்சி, கடந்த 30 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இந்தியா, சீனா, தென் கொரியா போன்ற, பாரம்பரிய மூலிகை மருத்துவ மரபுள்ள நாடுகள், இந்தத் துறையில் அதிகப் பங்களிப்பைச் செய்து வருகின்றன.
மேலும், உலகளவில் தற்போது பயன்படுத்தப்படும் சில புற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் கூட, தாவரங்களில் இருந்து பெறப்பட்ட பைட்டோ கெமிக்கல்கள் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், மருத்துவத் தாவரங்கள் மீதான ஆராய்ச்சிகள், மருத்துவ உலகில் புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகின்றன.
இருப்பினும், பிரண்டை சார்ந்த பெரும்பாலான ஆய்வுகள் இன்னும், ஆய்வக நிலை மற்றும் செல் வரி ஆய்வுகள் நிலையிலேயே உள்ளன. மனிதர்களில் மருத்துவப் பரிசோதனைகள், மருந்தளவைத் தரப்படுத்தல் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு ஆய்வுகள் போன்றவை, இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதனால், இப்போது பிரண்டையை, புற்று நோய்க்கான முழுமையான மருந்து என்று கூற முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இயற்கை சார்ந்த புற்று நோய் எதிர்ப்புச் சிகிச்சையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மூலிகையாகப் பிரண்டை பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் சமையலறை மூலிகையாக மட்டும் கருதப்பட்ட பிரண்டை, இன்று நவீன உயிரியல் மற்றும் புற்று நோய் மருத்துவ ஆராய்ச்சியின் மையமாக மாறி வருகிறது. பாரம்பரியத் தமிழர் அறிவும், நவீன அறிவியலும் இணையும் இடத்தில், பிரண்டை, எதிர்கால மருத்துவ உலகுக்குப் புதிய நம்பிக்கையை வழங்கக்கூடிய, இயற்கையின் அரிய பரிசாக உருவெடுத்து வருகிறது.

முனைவர் மு.வெங்கிடசாமி,
உதவிப் பேராசிரியர் – பால்வளப் பொறியியல் துறை, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுச் சாலை, சேலம் – 636 112.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

