My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

73 வயதில் வாழ்க்கையை இயற்கை வேளாண்மைக்கு மடை மாற்றியப் பொறியாளர்!

இயற்கை வேளாண்மை

பெரும்பாலானோருக்கு ஓய்வு என்பது அமைதியாக வாழும் காலம்!

ஆனால், சென்னையைச் சேர்ந்த 78 வயதான, எச்.ஆர். ஐயர் என்பருக்கு ஓய்வு வாழ்க்கை, ஒரு புதிய அத்தியாயமாக மாறியிருக்கிறது. இயந்திரச் சத்தங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அவர், இலைகளின் சலசலப்பில் வாழ விரும்பி, 72 வயதில் தொடங்கிய இயற்கை வேளாண் வாழ்க்கைப் பயணம் குறித்த ஒரு செய்தித் தொகுப்புதான் இது…

தொழில் உலகில் இருந்து விவசாய உலகுக்கு..!

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஐயர், இயந்திரவியல் பொறியாளர் ஆவார். இந்தியாவின் எண்ணெய்த் தொழில்துறைக்கு, இறக்குமதிக்கு மாற்றாகக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தார். தொழிலில் வெற்றி, மரியாதை என்று எல்லாம் இருந்தும், அது தந்த அழுத்தம் என்னவோ அவரது மனநிறைவைக் கெடுத்தது.

வியாபாரம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது என்றாலும், உள்ளுக்குள் ஒவ்வொருநாளும் வெறுமை தான் மிஞ்சியது -ஐயர்.

வேறு என்ன செய்யலாம் என்று அவர் ஒவ்வொருநாளும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவரதுத் தொழிற்சாலையின் உணவகத்தில் நடந்த ஒரு சின்ன விஷயம்தான் அவரது வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது.

உணவுப் பொருட்களின் தரத்தில் சந்தேகம்

தன்னிடம் வேலை செய்தத் தொழிலாளர்களுக்கு, இலவசமாக உணவு வழங்கும் பழக்கம் கொண்டிருந்தார் ஐயர். அவ்வப்போது அவருக்கு உணவுப் பொருள்களின் தரம் மீது சந்தேகம் எழுந்தது. பிறகு ஒருநாள், ஆர்வத்தில் ஒரு சிறிய நிலத்தில், இயற்கை முறையில் காய்கறிகளைப் பயிர் செய்தார்.

இயற்கை முறையில் விளைவித்தக் காய்கறிகளைச் சாப்பிடும்போது சுவை முற்றிலும் வேறுபட்டது; ஏதோவொரு புதிய உயிரோட்டம் தெரிந்தது -ஐயர்.

கொடைக்கானல் பயணத்தில் திடீர் தீர்மானம்!

ஒருமுறை கொடைக்கானலுக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள மலைப் பகுதியில் உள்ள தோட்டத்தில் அவருக்குக் கிடைத்த அமைதி, அவரை ஆச்சரியப்படுத்தியது. அன்றே தீர்மானித்தார்… 51 ஆண்டுகள் தொழில் செய்தவர்; 73-வது வயதில் தொழிற்சாலையை மூடிவிட்டு, விவசாயத்திற்குத் திரும்புவது என்று.

இயற்கைப் பண்ணையை உருவாக்குதல்!

2021இல், கொடைக்கானல் அருகே 18 ஏக்கர் நிலத்தை வாங்கினார் ஐயர். அங்கே இரசாயனங்கள், பிளாஸ்டிக் போன்றவற்றைப் பயன்படுத்துவது கிடையாது என்று முடிவெடுத்தார். மாறாக ஜீவாமிருதம், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயிர்களுக்கு அளிக்கிறார். துல்லியப் பாசன முறையையும் அவர் கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் அவரது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், ”ஐயா, வாருங்கள்; புழுக்கள் நிறைந்துவிட்டன” என்று கூப்பிட்டதும் அதிர்ச்சியுடன் சென்றார் ஐயர். பயிர்களுக்குச் சேதம் தான் ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சிய அவருக்கு, அங்கு நிறைந்திருந்த மண்புழுக்கள் ஆனந்தத்தைத் தந்தன.

மண் மீண்டும் உயிர் பெற்றுவிட்டது என்பதற்கான அடையாளம் தான் மண்புழுக்களின் தோற்றம் -ஐயர்.

இப்போது ஐயரின் பண்ணையில் காபி, மிளகு, ஏலக்காய் என்று அனைத்தும் இயற்கை முறையில்தான் விளைவிக்கப் படுகின்றன.

இயற்கை வேளாண்மை

சவால்களும் படிப்பினையும்..!

யானைகள், காட்டுப் பன்றிகள், எருமைகள் போன்றவைப் பயிர்களை தினம்தினம் சேதப்படுத்தி வந்தன. அதிகப் பணம் செலவழித்து, வேலிகளை அமைக்க வேண்டியிருந்தது. இயற்கையை எதிர்கொள்வது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. இதனால் முதல் இரண்டு ஆண்டுகளாகப் பொருளாதாரமும் சவாலாக இருந்தது என்கிறார் ஐயர்.

அப்போது கற்றுக்கொண்ட பாடம்: நமது தரத்தை மதித்து, நம்பிக்கையோடு யார் முன்பே பணம் கொடுக்கிறார்களோ, அந்த வாடிக்கையாளருக்கே, விற்பனையில் முன்னுரிமை என்று முடிவு செய்தார் ஐயர்.

முதல் இரண்டு ஆண்டுகள் சவாலான காலம்; மூன்றாவது ஆண்டில் இருந்து, ஆண்டுக்குச் சுமார் 5 இலட்சம் ரூபாய் வரை இலாபம் தர ஆரம்பித்தது ஐயரின் பண்ணை. 

அன்றாட வாழ்க்கை

நான்கு நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் ஐயர், பருவக் காலங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப தினக்கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கிறார். அதற்காக அவரொன்றும் ஒய்யாரமாக இல்லை; அவரும் அனுதினமும் தன் நிலத்தில் பாடுபடத்தான் செய்கிறார்.

ஐயரின் பண்ணையில் அதிகாலையில் தாவரங்களுக்குச் சங்கீதம் ஒலிக்கப்படுகிறது. ஐயரின் ஆற்றல், அவரிடம் வேலை செய்யும் தங்களுக்கும் உத்வேகம் தருகிறது. ஐயர் சார், எங்களுடன் மாட்டுச்சாண உர உற்பத்தி வரை, உடனிருந்து வேலை செய்யக் கூடிய நல்ல மனிதர் -தொழிலாளர்கள்!

இயற்கை வேளாண்மை
ஐயரின் பண்ணைத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன்…

குடும்பத்தின் ஆதரவு

காலம் போன கடைசியில் வேளாண்மைக்குத் திரும்பிய ஐயரைக் கண்டு, ஆரம்பத்தில் அவரது மனைவியும் மகளும் அதிர்ச்சிதான் அடைந்தனர். உறவினர்கள் வெளியே பாராட்டினாலும், உள்ளுக்குள் ஆளாளுக்குச் சந்தேகங்களைக் குழுமிக் கொண்டிருந்தனர். ஆனால் தன் மனைவியும், மகளும் தன்னை விட்டுவிடவில்லை என்று பெருமிதம் கொள்கிறார் ஐயர்.

வாழ்க்கையை மறுபடியும் கண்டறிதல்!

இந்த வாழ்க்கையைக் கண்டறிந்து ஈடுபடத் தொடங்கியதில் இருந்தே உடல்நலம் மேம்பட்டுவிட்டது; மனதுக்கு அமைதிக் கிடைக்கிறது; இயற்கையின் உண்மையான இணைப்பை இப்போது உணர்கிறேன் என்கிறார், தற்போது 78 வயதாகும் எச்.ஆர். ஐயர்!

ஐயரின் இந்த வாழ்க்கைப் பயணம் ஒன்றைச் சொல்கிறது…

எதற்கும் வயதுத் தடையல்ல; எதைத் தொடங்குவதிலும் யாரும் தாமதப்படவில்லை; மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் இந்த பூமி நமக்கு நிறைய வெற்றிகளைப் பரிசலிக்கும்..!


மகேஷ்வர சீதாபதி

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!