My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்! Viruthai Millets logo https://pachaiboomi.net/687583-2/

ணவுப் பொருள்களை விளைவித்தால் மட்டும் போதாது. அந்தப் பொருள்களை இடைத் தரகர்கள் இன்றி விற்பதிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். விளைவித்த பொருள்களை மதிப்புக்கூட்டி விற்றால் இன்னும் கூடுதலான வருமானத்தை விவசாயிகள் அடைய முடியும். இந்தச் சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருந்தாலும், அது அண்மைக் காலமாகத் தான் செயல் வடிவம் பெற்று வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, ஆயிரம் விவசாயிகள் அடங்கிய உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்திய பின் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள்.

அவ்வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்துச்  செயல்பட்டு வருகிறது, விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை அவர்களிடமிருந்து சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கி, அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து, விற்பனையில் கிடைக்கும் இலாபத்திலும் விவசாயிகளுக்குப் பங்கு கொடுப்பது என இருமுறை விவசாயிகளின் விளைபொருள்களுக்குப் பணம் தருவதுடன், அந்த விவசாயிகளைப் பங்குதாரர்களாகவும் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் முதன்மைச் செயல் அலுவலரான க.ராஜேந்திரனிடம் பேசினோம்.

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்! Rajendran K Photo https://pachaiboomi.net/687583-2/

“விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கினோம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குழுக்களாகப் பிரித்து அவர்களையே பங்குதாரர்களாகக் கொண்டு, இந்நிறுவனத்தை 1956 ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடத்தி வருகிறோம். தற்போது இந்நிறுவனத்தில் சுமார் 1,500 விவசாயிகளுக்கு மேல் பங்குதாரர்களாக உள்ளனர். விரைவில் 5,000 விவசாயிகளை இணைக்கத் திட்டமிட்டு அதை நோக்கி விரைவாகவும் சிறப்பாகவும் பணியாற்றி வருகிறோம்.

இப்படி இந்த நிறுவனத்தில் இணைய விரும்பும் விவசாயிகளிடமிருந்து முதலில் 1,000 ரூபாயைப் பங்குத் தொகையாகப் பெற்றுக் கொண்டு அவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்க்கிறோம். அப்படிச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் விவசாயக் கடன் வழங்குவது, அவர்களுக்குத் தேவையான உரங்களைக் கொடுப்பது, நவீனத் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவது ஆகியவற்றோடு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களை, சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கி, அவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பொருள்களை விற்பதால் கிடைக்கும் இலாபத்திலும் அவர்களுக்கான பங்கைப் பிரித்துத் தருகிறோம்.

மேலும், நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள் முதலியவற்றை மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்த ஏதுவாக, அரவை இயந்திரம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்தையும் நாங்களே சொந்தமாக வைத்துள்ளோம். இதனால் அரவை மற்றும் சுத்திகரிப்பு முதலியவற்றுக்கு வெளியில் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.  

இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமே விவசாயிகளை ஒன்று சேர்ப்பது தான். ஏனெனில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பொருள்களை விளைய வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு அவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. காரணம், கூட்டமைப்பு ஏதுமின்றி, தானுண்டு தன் வேலையுண்டு என்று, விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்து இருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் போது விலையை நாம் நிர்ணயம் செய்ய முடிகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் கிடைக்கிறது.

இவ்வகையில், எங்கள் விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. எங்கள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கு FSSAI எனப்படும் உணவுத் தரச்சான்று மற்றும் ISO 22000, அக்மார்க் முத்திரை ஆகியவற்றையும் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதோடு, வாழ்வாதாரக் கடன், ஆடு மாடுகளை வாங்கக் கடன், விவசாயம் சார்ந்த தொழில்களுக்குக் கடன் என, விவசாயிகளுக்குப் பத்துக்கோடி ரூபாய் வரையில் கடன்களையும் வழங்கியுள்ளோம்.

மேலும், தமிழக அரசின் வேளாண்மைத் துறை மூலம் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், உள்ளூர் விவசாயக் குழுக்களிடமிருந்து அவர்களின் விளைபொருள்களை வாங்கி அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 100 டன்னுக்கு மேல், முற்றிலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த குதிரைவாலியைக் கொள்முதல் செய்துள்ளோம்.

இப்படிக் கொள்முதல் செய்யப்படும் சிறுதானியங்களில் இருந்து அவல், குக்கீஸ், முருக்கு, அல்வா, தோசை, களி, சப்பாத்தி மாவு வகைகள், உளுந்து, பாசி, துவரை, கடலைப்பருப்பு போன்ற பருப்பு வகைகள், சம்பா வத்தல், குண்டு வத்தல், மிளகு, மல்லி போன்ற மசாலா பொருட்கள், மரச்செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, போன்ற பொருள்களை மிகத் தரமாகத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இதுவரை எங்களிடம் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், சிறுதானிய மதிப்புக்கூட்டல் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி என, அறுபதுக்கும் மேற்பட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மாநில அளவிலான உணவுக் கண்காட்சி முதல் தேசிய அளவிலான உணவுக் கண்காட்சி வரை எங்கு நடந்தாலும் நாங்கள் கலந்து கொண்டு எங்களின் தரமான தயாரிப்புகளை மக்களின் பார்வைக்கு வைத்து விற்பனை செய்து வருகிறோம். எதிர்காலத்தில் தேசிய அளவில் எங்கள் பொருள்களை விற்பனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று சென்னை எழிலகத்தில் விற்பனை மையம் அமைத்து எங்கள் பொருள்களை விற்பனை செய்து வருகிறோம். மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் விற்பனை மையங்களை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த 2018-2019 ஆம் ஆண்டு இறுதியில் 20 கோடி ரூபாய் அளவுக்கு விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்காகச் சீரிய முறையில் பணியாற்றி வருகிறோம்.

இந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வேளாண்மைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வங்கிகள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

விவசாயிகளின் நலம் காக்கும் விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மென்மேலும் வளர வேண்டுமென வாழ்த்தி விடை பெற்றோம்.


மு.உமாபதி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்!

  • விளைபொருள்களின் மதிப்பைக் கூட்டினால் வருமானம் கூடும்!

  • முருங்கையின் மருத்துவ மதிப்பை உயர்த்தும் குளுகோ மொரிங்கின்!

  • மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

  • கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

  • நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

  • தேங்காய் – மதிப்புமிகு பொருள்கள்!

  • தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!