விவசாயத்தில் மகசூல் இழப்புக்குப் பயிர் நோய்கள் முக்கியக் காரணமாக உள்ளன. பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நூற்புழுக்கள் போன்ற நோய்க் காரணிகள்; வேர், தண்டு, இலை, பூ, காய் என, பயிரின் பல்வேறு பகுதிகளைத் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இரசாயன மருந்துகள் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், இவற்றை அதிகமாகவும் தொடர்ந்தும் பயன்படுத்துவதால், மண் மாசு, நீர் மாசு, நச்சு எச்சங்கள், பயனுள்ள நுண்ணுயிரிகளின் பாதிப்பு மற்றும் நோய்க் கிருமிகளில் மருந்து எதிர்ப்புத் திறன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு இயற்கையான மாற்றாக அமைவது, உயிரியல் நோய்க் கட்டுப்பாடு.
இதில், நோய்க் கிருமிகளை இயற்கையாகக் கட்டுப்படுத்த, நன்மை தரும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று, சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ்.

சூடோமோனாஸ் என்றால் என்ன?
சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ் என்பது, நன்மை தரும் பாக்டீரியா. இது, தாவரத்தின் வேர் மண்டலத்தில் நிலை பெற்று, அங்குள்ள நோய்க் கிருமிகளுடன் போட்டியிடுகிறது. அதுமட்டுமின்றி, நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் இயற்கைச் சேர்மங்களை உருவாக்குவதோடு, தாவரத்தின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறனையும் தூண்டுகிறது.
சூடோமோனாஸ் எப்படி நோயைக் கட்டுப்படுத்துகிறது?
சூடோமோனாஸ் ஒரே ஒரு வழியில் மட்டும் செயல்படுவதில்லை. பல்வேறு செயல் முறைகள் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகின்றன.
இடம் மற்றும் உணவுக்கான போட்டி
நோய்க் கிருமிகளுக்குத் தேவையான உணவு, இடம் மற்றும் தாதுக்களை அடைய விடாமல், நன்மை தரும் நுண்ணுயிரிகள் போட்டியிடுகின்றன. இதனால், நோய்க் கிருமிகளுக்குக் கிடைக்கும் வளங்கள் குறைகின்றன.
நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சேர்மங்கள்
சூடோமோனாஸ் போன்று நன்மை தரும் சில நுண்ணுயிரிகள், நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் இயற்கைச் சேர்மங்களை உருவாக்குகின்றன.
தாவரத்தின் இயற்கைப் பாதுகாப்பைத் தூண்டுதல்
சூடோமோனாஸ், தாவரத்தின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பைத் தூண்ட உதவுகிறது. இதனால், நோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு எதிராக, தாவரத்தின் பாதுகாப்புத் திறன் அதிகரிக்கிறது.
எந்தெந்த நோய்களுக்கு உதவும்?
சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ், நாற்றழுகல், வேரழுகல், வாடல் நோய், சில இலை நோய்கள், மண் வழியாகப் பரவும் சில நோய்களைக் கட்டுப்படுத்த உதவும், உயிரியல் காரணியாக விளங்குகிறது.
எந்தெந்தப் பயிர்களில் பயன்படுத்தலாம்?
சூடோமோனாசை, நெல், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள், வாழை போன்ற பல்வேறு பயிர்களில் பயன்படுத்தலாம்.
எப்படிப் பயன்படுத்தலாம்?
விதை நேர்த்தி: விதைப்பதற்கு முன், சூடோமோனாஸ் தயாரிப்பைக் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். இது, விதை மூலம் பரவும் நோய்களைக் குறைக்கவும், ஆரம்பக்கட்ட வேர் நோய்களைக் கட்டுப்படுத்தவும், வேர்ப்பகுதியில் நன்மை தரும் நுண்ணுயிரிகளை நிலை நிறுத்தவும் உதவுகிறது.
நாற்று வேர் நேர்த்தி: நடவு செய்வதற்கு முன், நாற்றுகளின் வேர்ப்பகுதியை, சூடோமோனாஸ் நுண்ணுயிர்க் கலவையில் நேர்த்தி செய்யலாம். குறிப்பாக, காய்கறி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில், இது பயனுள்ளதாக விளங்குஇறது.
மண்வழிப் பயன்பாடு: சூடோமோனாஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளை, நன்கு மட்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து வயலில் இடலாம். இதன் மூலம், வேர் மண்டலத்தில் நன்மை தரும் நுண்ணுயிரிகள் பெருகி, நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இலைத்தெளிப்பு: சில சூடோமோனாஸ் தயாரிப்புகளை நீரில் கலந்து, இலைகளில் தெளிக்கலாம். இதனால், இலை மற்றும் தண்டின் மேற்பரப்பில், நோய்க் கிருமிகள் நிலை பெறுவது குறைகிறது.

எப்போது பயன்படுத்துவது சிறந்தது?
உயிரியல் நோய்க் கட்டுப்பாட்டில், நோய் வந்த பிறகு கட்டுப்படுத்துவது என்பதை விட, நோய் வருவதற்கு முன்பே தடுப்பை ஏற்படுத்துவது, சிறந்த அணுகுமுறை ஆகும். விதை நேர்த்தியை, விதைப்பதற்கு முன்பும், நாற்று வேர் நேர்த்தியை நடவுக்கு முன்பும், மண்வழிப் பயன்பாட்டை, விதைப்பு அல்லது நடவு நேரத்திலும் மேற்கொள்ளலாம்.
எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளின் பயன்பாட்டு அளவு, அவற்றின் இனம், தயாரிப்பு வடிவம், உயிருள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, பயிர் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
பயன்படுத்தப்படும் அளவுகள்
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம்
நாற்று வேர் நேர்த்தி: ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம்
நிலத்தில் தூவுதல்: எக்டருக்கு 2.5-5 கிலோ
இலைவழித் தெளிப்பு: ஒரு லிட்டர் நீருக்கு 2-5 கிராம் அல்லது மி.லி.
மீண்டும் தெளிப்பு: 10-15 நாட்கள் இடைவெளியில்.
கவனிக்க வேண்டியவை
உயிரியல் தயாரிப்புகளின் பயன்பாட்டு அளவு, அவற்றின் நுண்ணுயிர் இனம், தயாரிப்பு வடிவம், உயிருள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரைப் பொறுத்து மாறுபடும். எனவே, தயாரிப்புப் பொட்டலத்தில் குறிப்பிட்டுள்ள பயன்பாட்டு அளவுக்கும், பயிர் சார்ந்த வேளாண் துறைப் பரிந்துரைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும், உயிரியல் காரணிகளின் செயல் திறனை, வெப்பநிலை, ஈரப்பதம், மண் தன்மை போன்ற காரணிகள் பாதிக்கலாம். தரமற்ற தயாரிப்புகள் குறைந்த பலனைத் தரக்கூடும். ஏற்கெனவே நோய் அதிகமாகப் பரவியிருந்தால், உயிரியல் கட்டுப்பாடு மட்டும் போதியதாக இருக்காது.
சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ் என்பது, வெறும் நோய்த்தடுப்பு பாக்டீரியா மட்டுமல்ல; வேர் மண்டலத்தில் இருந்து கொண்டு, பயிருக்குத் துணையாகச் செயல்படும், நன்மைமிகு நுண்ணுயிரி ஆகும்.
நோய்க் கிருமிகளுடன் போட்டியிடுதல், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் சேர்மங்களை உருவாக்குதல் மற்றும் தாவரத்தின் இயற்கையான பாதுகாப்பைத் தூண்டுதல் போன்ற பல்வேறு வழிகளில், இது, பயிர்களின் நோய் மேலாண்மைக்கு உதவுகிறது.
உயிரியல் நோய்க் கட்டுப்பாடு என்பது, இரசாயனத்தை ஒரே நாளில் முழுமையாக மாற்றி விடும் முறையல்ல. ஆனால், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையில் சரியாகப் பயன்படுத்தும் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான விவசாயத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முக்கியமான கருவியாக அமையும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


