My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!

விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!

வேளாண்மையில் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக மகசூலை பெறுவதற்கு, மண்வள மேலாண்மை மிகவும் முக்கியமானது. ஒரு நிலத்தில் பயிரிடுவதற்கு முன், அதன் சத்து நிலை, அமிலநிலை, காரநிலை மற்றும் நுண் சத்துகளின் அளவை, அறிவியல் முறையில் அறிந்து கொள்ள உதவுவது மண் பரிசோதனை.

விதைப்புக்கு முன் மண் பரிசோதனை செய்வதன் மூலம், பயிரின் தேவைக்கேற்ற உரங்களைத் துல்லியமாக இட்டு மகசூலைக் கூட்டுவதுடன், மண்ணின் நீண்டகால வளத்தையும் பாதுகாக்கலாம்.

மண் பரிசோதனையின் அவசியம்

மண் பரிசோதனை மூலம், மண்ணிலுள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நுண் சத்துகளின் அளவை அறிய முடியும். மேலும், மண்ணின் காரநிலை, அமில நிலை, உவர்ப்புத் தன்மை மற்றும் கரிம அளவுகளையும் மதிப்பிடலாம். இதன் அடிப்படையில் உரப்பரிந்துரை வழங்கப்படுவதால், தேவையற்ற உரச்செலவு குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசும் கட்டுப்படும்.

மண் மாதிரியைச் சேகரிக்கும் நுட்பம்

ஒரே தன்மையுள்ள நிலத்தைத் தேர்வு செய்து, ஏக்கருக்கு 5-10 இடங்களில் ஜிக் ஜாக் முறையில் மாதிரிகளை எடுக்க வேண்டும். மேற்பரப்பில் உள்ள தாவரக் கழிவுகளை அகற்றி விட்டு, V வடிவில் வெட்டி, அதன் பக்கவாட்டில் உள்ள மண்ணைச் சேகரிக்க வேண்டும். பிறகு, அனைத்து மாதிரிகளையும் நன்கு கலந்து, நான்கு பாகமாகப் பிரித்தல் முறையில், சுமார் 500 கிராம் மண்ணை எடுக்க வேண்டும்.

பயிர்களுக்கு ஏற்ப மண் மாதிரி எடுத்தல்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
  • நெல், சிறுதானியங்கள், நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு, 15 செ.மீ. ஆழத்தில், மண் மாதிரியைச் சேகரிக்க வேண்டும்.
  • பருத்தி, கரும்பு, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களுக்கு, 22.5 செ.மீ. ஆழத்தில், மண் மாதிரியைச் சேகரிக்க வேண்டும்.  
  • பழத்தோட்டங்களை அமைக்க, 30, 30-60 மற்றும் 60-90 செ.மீ. ஆழத்தில், தனித்தனியாக மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும்.

மண் பரிசோதனை செய்ய ஏற்ற காலம்

அறுவடைக்குப் பிறகு, உரமிடுவதற்கு முன்பும், அடுத்த பயிரை விதைப்பதற்கு 30-45 நாட்களுக்கு முன்பும், மண் மாதிரியை எடுப்பது சிறந்தது. மண் மிகவும் ஈரமாக இருக்கும் போது, மாதிரியை எடுக்கக் கூடாது. தொடர்ந்து சாகுபடி செய்யப்படும் நிலங்களில், 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மண் பரிசோதனையைச் செய்யலாம்.

விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!

மண் பரிசோதனையின் நன்மைகள்

  • மண்ணின் உண்மையான சத்து நிலையை அறிய முடியும்.
  • தேவையான உரங்களை, தேவையான அளவில் மட்டும் இடலாம்.
  • இதனால், உற்பத்திச் செலவு குறையும்; மகசூல் கூடும்.
  • மண்ணின் நீண்டகால வளத்தைப் பாதுகாக்கலாம்.
  • சாகுபடி, நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.  

அரசு வழங்கும் வசதிகள்

தமிழ்நாடு அரசின் மண் பரிசோதனை ஆய்வகங்கள் மூலம், மண் ஆரோக்கிய அட்டைத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை வசதி வழங்கப்படுகிறது. இதில், மண்ணின் காரநிலை, அமிலநிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, கரிமச்சத்து மற்றும் நுண் சத்துகளை ஆய்வு செய்து, தகுந்த உரப் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

விதைப்புக்கு முன் மண் பரிசோதனை – வளமான மண், உயர்ந்த மகசூல் என்னும் கொள்கையை, ஒவ்வொரு விவசாயியும் செயல்படுத்த வேண்டும். மண் காப்போம்; வளம் பெறுவோம் என்னும் எண்ணத்துடன், ஒவ்வொரு விவசாயியும் காலமுறைப்படி மண்ணை ஆய்வு செய்து, அதன் பரிந்துரைகளின்படி சாகுபடியில் ஈடுபட்டால், அதிக மகசூலையும் நிலையான விவசாய வளர்ச்சியையும் அடைய முடியும்.

அறிவியல் சார்ந்த மண்வள மேலாண்மை மூலம், செலவைக் குறைத்து, கூடுதல் உற்பத்தியைப் பெறுவதுடன், இந்த மண்வளத்தை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க முடியும். மேலும் விவரங்களுக்கு, உங்கள் பகுதியில் உள்ள அரசு மண் பரிசோதனை ஆய்வகங்களை அணுகி, மண் மற்றும் பாசனநீரைச் சோதனை செய்து பயன் பெறலாம்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம், மண்ணைக் காப்போம், மனித வாழ்வைக் காப்போம்.


விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய 9 முக்கியக் கோட்பாடுகள்!

  • வேர் மண்டலத்தைப் பாதுகாக்கும் சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ்!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையக் கீரை இரகங்கள்!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையப் புடலை இரகங்கள்!

  • பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு!

  • உயர் விளைச்சலைத் தரும் வம்பன் 11 உளுந்து!

  • வெண்கொடிவேலி மூலிகையில் பூச்சி மேலாண்மை!

  • ஆடிப்பட்டத் துவரை சாகுபடி!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!