2026-இல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை சுசகமாகக் கூறியுள்ளார்.
தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அவர் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில், மாநிலம் முழுவதும் ஊர்ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திறந்தவெளி வேனில் பயணித்தபடி பரப்புரை செய்தார். அப்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தார்.
பல்லாயிரக் கணக்கானோர் திரண்டிருந்தக் கூட்டத்தின் நடுவே பேசிய எடப்பாடி பழனிசாமி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குத் தமது ஆட்சியில் செய்யப்பட்ட நன்மைகளைப் பட்டியலிட்டார்.
தமது ஆட்சிக் காலத்தில் குளம், குட்டை, ஏரிகளைத் தூர்வாரி, நீர்நிலைகள் ஆழப்படுத்தப் பட்டதாகவும், இதனால் மழைக் காலங்களில் அதிக நீர் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததாகவும் அவர் பேசினார். தூர்வாரியதில் கிடைத்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்குத் தமது அரசு இலவசமாகக் கொடுத்தது; அதனால் விளைச்சலும் அதிகரித்தது என்றும் கூறினார்.
விவசாயிகளுக்கு, 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியதும், தமது அரசே என்று எடப்பாடி பழனிசாமி பெருமை அடைந்தார். வறட்சி ஏற்பட்டபோதெல்லாம் சேதமடைந்தப் பயிர்களைக் கணக்கிட்டு நிவராணம் கொடுத்த ஒரே அரசாங்கம்; தமது அரசங்காம் மட்டும்தான் என்றார்.
பயிர்க்கடன் தள்ளுபடி
இந்தியாவிலேயே முதன்முறையாக, ஏன்; தமிழ்நாட்டிலும் முதன்முறையாக, கடந்த ஆட்சியில்; தமது ஆட்சியில் மட்டும்தான், இரண்டுமுறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகப் பேசினார். இதை எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாகக் கூறியதைப் பார்க்கும்போதும், செல்லும் இடங்களிலெல்லாம், இதையே அவர் பேசி வருவதையும் பார்க்கும்போதும், வரும் தேர்தலிலும் அ.தி.மு.க., பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
LIVE