உடல் நலம் தரும் நுண்கீரை (Microgreens) வகைகளை, பொருள் வளம் தரும் வகையில் வணிக நோக்கில் உற்பத்தி செய்து, அதில் சாதித்தும் வருகிறார், எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., படித்த, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவதிகையைச் சேர்ந்த அ.சாமுண்டீஸ்வரி. இவர், தனது அனுபவம் குறித்து நம்மிடம் கூறியதாவது:
நுண்கீரை உற்பத்தி (Microgreens)
விதைத்து 5 முதல் 7 நாட்களுக்குள் அறுவடை செய்து விடுவதால், இதை நுண்கீரை என்கிறோம். ஓமம், கருஞ்சீரக நுண்கீரை உற்பத்திக்கு 21 நாட்களாகும். நுண்கீரை உற்பத்திக்கு மண் தேவையில்லை, அதிகளவில் நீர்த் தேவையில்லை. மட்கிய தென்னைநார்க் கழிவு அல்லது மண்புழு உரம் இருந்தால் போதும். ஒரு வீட்டுக்குத் தேவையான நுண்கீரையை, 1×2 அடி பிளாஸ்டிக் தட்டில் விதைகளை இட்டு, சன்னல் வெளிச்சத்திலேயே வளர்த்து விடலாம்.
வணிக நோக்கிலான உற்பத்திக்கு வெளிச்சமான அறை தேவைப்படும். ஒரு தட்டு நுண் கீரையை உற்பத்தி செய்ய மூன்று தட்டுகள் தேவைப்படும். அதாவது, அடித்தட்டில் நுண்கீரை வளர்ச்சிக்குத் தேவையான நீர் இருக்கும். அதற்கு மேல் 160 துளைகளுடன் கூடிய தட்டில் கீரை விதைகள் இடப்பட்டிருக்கும். இதை மூடுவதற்கு மூன்றாவது தட்டுத் தேவைப்படும்.
தவிர்க்க வேண்டிய விதைகள்
எல்லாப் பயிர் விதைகளையும் நுண்கீரை உற்பத்திக்குப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, இளம் சோளப்பயிரில் விஷத்தன்மை இருக்கும். இதைப்போல, தக்காளி, கத்தரி, மிளகாய், மிளகு, ஆமணக்கு போன்ற விதைகளையும் நுண்கீரை உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடாது. இவற்றிலும் நச்சுத்தன்மை இருக்கும். இதைப்போல, கேழ்வரகு, கம்பு தவிர மற்ற சிறுதானியங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், மற்ற தானியங்களில் விஷத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஏற்ற விதைகள்
முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பிராக்கோலி ஆகிய காய்கறி விதைகள், சிவப்புத் தண்டுக்கீரை, பாலாக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை போன்ற கீரை (Microgreens) விதைகள், கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து ஆகிய பருப்பு விதைகள், கருஞ்சீரகம், ஓமம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகை விதைகள், கடுகு, சூரியகாந்தி, எள்ளு, நிலக்கடலை ஆகிய எண்ணெய்ப் பயிர் விதைகள், நுண்கீரை சாகுபடிக்கு ஏற்றவை. விதைகளை மருந்தில் நேர்த்தி செய்து விதைக்கக் கூடாது. நேர்த்தி செய்யாத விதைகளை மட்டுமே விதைக்க வேண்டும். நுண்கீரை உற்பத்திக்கு மருந்தோ உரமோ, எதுவும் தேவையில்லை.
விதைப்பு முறை
இந்த நுண்கீரை (Microgreens) உற்பத்தியில் சில வகை விதைகளை ஊற வைத்து விதைக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, கடுகு, முள்ளங்கி விதைகளைச் சொல்லலாம். சில வகை விதைகளை முளைக்கட்டி விதைக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, கருஞ்சீரகம், ஓமம் விதைகளைக் கூறலாம். சில வகை விதைகளை அப்படியே விதைக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, சிவப்புத் தண்டுக்கீரை, திருநீற்றுப் பச்சிலை விதைகளைச் சொல்லலாம். இந்த விதைகளை ஊற வைக்கும் நேரமும் விதைக்கு விதை மாறுபடும். சரி. இத்தகைய நுண்கீரை உற்பத்திக்கு நான் எப்படி வந்தேன்?
அப்பாவின் ஆசை
நாம் படும் கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்று தான் எல்லா அப்பா அம்மாவும் நினைப்பார்கள். நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், என் அப்பாவும் அப்படித் தான் நினைத்தார். ஏனென்றால், உழைப்பு, அந்த உழைப்புக்கு ஏற்ற பலனுக்கு உத்தரவாதம் இல்லாத ஒரே தொழில் விவசாயம் தான். அதனால், தன் பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்த என் அப்பா, என்னை டீச்சர் டிரெய்னிங் படிக்க வைத்தார்.

திருமணம்
ஆனால், வேலைக்குப் போவதற்குள் 19 வயதிலேயே எனக்குத் திருமணம் நடந்து விட்டது. புகுந்த வீடு என்னை அரவணைத்துச் செல்லும் அன்பில்லமாக அமைந்திருந்தது. அதனால் தான், சாதாரண டீச்சர் டிரெய்னிங் மட்டுமே படித்திருந்த நான், எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., வரை படிக்க முடிந்தது.
குழந்தைப்பேறு
இந்நிலையில், குழந்தைப் பேற்றை அடைந்த எனக்குப் பெண் குழந்தை பிறந்தது. அப்போது அந்தக் குழந்தையின் எடை வெறும் ஒன்றே கால் கிலோ தான். அதனால், ஆறு மாதங்கள் கழித்து, குழந்தைக்குப் பாலோடு இணை உணவும் தரலாம் என்னும் நிலையில், கீரையை வேக வைத்த நீரைக் குழந்தைக்குத் தரும்படி மருத்துவர்கள் கூறினார்கள்.
கீரை உற்பத்தியின் தொடக்கம்
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடம்புக்கு நல்லது என்று சொல்கிறோம். ஆனால், இன்றைய விவசாயத்தில் இரசாயனப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், இரசாயனக் கலப்பில்லா உணவுப் பொருளே இல்லை என்னுமளவில் சூழல் மாறி விட்டது. எனவே, என் குழந்தையின் நலனை மனதில் கொண்டு, இரசாயனப் பொருள் கலப்பில்லாத, இயற்கை முறை நுண்கீரை உற்பத்தியை, 2011-ஆம் ஆண்டில் தொடங்கி, வீட்டுத் தேவைக்காகச் செய்து வந்தேன்.
வணிக நோக்கிலான உற்பத்தி
இதையடுத்து, நுண்கீரையின் பயன்களை மற்றவர்களும் அடையும் வகையில், 2022-ஆம் ஆண்டில், என் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆதரவுடன் நூறு ரூபாய் முதலீட்டில் தான் உற்பத்தியைத் தொடங்கினேன். நான் பிறந்ததும் விவசாயக் குடும்பம், புகுந்த வீடும் விவசாயக் குடும்பம் என்பதாலும், எனக்குச் சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததாலும், இந்தக் கீரை உற்பத்தியில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், இதை முறையாகக் கற்றுக் கொள்ள, எனக்கு ஒன்றரை ஆண்டு தேவைப்பட்டது.
முதல் விற்பனை
பண்ருட்டியை மையமாக வைத்து நுண்கீரை விற்பனையை நாங்கள் ஆரம்பித்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த விற்பனையை அடைய முடியவில்லை. இதனால் எங்களுக்குக் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டாலும், நாங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. நானும் என் தம்பி புஷ்பராஜும் கீரைகளை எடுத்துக் கொண்டு, புதுச்சேரி ஆரோவில்லுக்குச் சென்றோம். அங்கே ஐந்து கிலோ நுண்கீரை விற்பனை ஆனது.
இது, எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. தொடர்ந்து உழைத்தோம். அதில் எங்கள் வளர்ச்சியைக் கண்டோம். இப்போது நான், என் கணவர், என் தம்பி, என் அப்பா, அம்மா, என் குழந்தை உட்பட, பத்துப் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பயிற்சி
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல, நாம் கண்ட வளர்ச்சியை இந்தச் சமூகமும் அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில், நுண்கீரை வளர்ப்புப் பயிற்சியை, மகளிர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, சுமார் பத்தாயிரம் பேர்களுக்கு அளித்திருப்பேன். அவர்களில் சுமார் நூறு பேர்கள் இந்த நுண்கீரை உற்பத்தியை முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
எனது மேற்பார்வையில், சென்னை, சேலம், கோவை, மதுரை, நாமக்கல், புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மேச்சேரி, தென்காசி, பெங்களூரு ஆகிய இடங்களில், சுமார் எண்பது பேர்கள், நுண் கீரைகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநில, வெளிநாட்டு மக்களுக்குப் பயிற்சி
தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், அரியானா, இராஜஸ்தான், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், நேரடிப் பயிற்சியை வழங்கி இருக்கிறேன். இணைய வழியாகவும் பயிற்சியளித்து வருகிறேன்.
கட்டமைப்பை உருவாக்கித் தருதல்
இதைத் தொழிலாகச் செய்ய நினைப்பவர்களுக்கு, பயிற்சி மட்டுமின்றி, தட்டுகள், ரேக்குகள், மட்கிய தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், விதைகள் போன்ற, நுண்கீரை வளர்ப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறோம். மேலும், கட்டணம் செலுத்துவோருக்கு பிரான்சீஸ் எனப்படும் வணிக உரிமத்தைக் கொடுத்து, ஓராண்டு வரை அவர்களுக்குத் தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளைச் செய்து தருகிறோம். அதற்குப் பிறகு அவர்களே அவர்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மதிப்புக்கூட்டல் மையம்
கீரை உற்பத்திப் பயிற்சி மற்றும் வணிக ஆலோசனையோடு, மதிப்புக்கூட்டுப் பொருள்கள் பயிற்சியையும் கொடுத்து வருகிறோம். இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஜய மங்கலத்தில் நுண்கீரை மதிப்புக்கூட்டல் மையத்தையும் அமைத்துள்ளோம். இங்கே, நுண்கீரைப் பொடி, நுண்கீரை சூப் பொடி, நுண்கீரை அடை மிக்ஸ், தோசை மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ் போன்ற சத்துமிகு உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்கிறோம்.
புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில், சாக்லேட், குக்கீஸ் போன்ற குழந்தைகளுக்கான தின்பண்டங்கள்; குளியல் சோப், ஷாம்பூ போன்ற அழகு சாதனங்களைத் தயாரித்து வருகிறார்கள். உடல் நலனைக் கருத்தில் கொண்டு, எந்த உணவுப் பொருளிலும், வெண் சர்க்கரை, மைதா, பாமாயில், இரசாயன நிறமிகள், சேமிப்புக்கான இரசாயனம் சேர்க்கப்படுவதில்லை.
விற்பனை வாய்ப்பு
இயற்கை மருத்துவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள், நுண்கீரைப் பொடியை வாங்கி மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தொழில் ஆர்வமுள்ள மகளிர், நுண்கீரைப் பொடியை வாங்கி, அதைப் பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி வணிகம் செய்கிறார்கள்.
மகளிர்க்கு ஏற்ற தொழில்
நுண்கீரை உற்பத்தி, மகளிர்க்கு ஏற்ற தொழில். குறிப்பாக, படித்த மகளிர், ஆதரவற்ற மகளிர்க்கு ஏற்றது. நல்ல உணவு உற்பத்தி சார்ந்த தொழில். இதில், குழந்தைகளும் பெரியவர்களும் கூட ஈடுபடலாம். வீட்டில் அமைதியான சூழல் உருவாகும். ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும். முதலீடு தடையாக இருக்க முடியாது. ஏனெனில், வங்கிக் கடன் வசதி கிடைக்கும் வாய்ப்புண்டு.
கீரை விற்பனை வாய்ப்பை எளிதாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். நாம் நினைத்தால், நடைப்பயிற்சிக்குச் செல்லும் இடம், கோயில், யோகா மையம் மற்றும் இயற்கை அங்காடிகளை, சந்தைக் களமாக மாற்றி விடலாம்.
முன்மாதிரி
இந்தத் தொழிலில் வெற்றியடைய முடியும் என்பதற்கு நான் தான் உங்களுக்கு முன்மாதிரி. இந்தத் தொழிலில் எனக்குக் கிடைத்த நான்காண்டு அனுபவம் மற்றும் உழைப்பின் மூலம், இப்போது மாதம் இருபது இலட்சம் ரூபாய்க்கு மேல் நுண் கீரை வணிகம் செய்கிறோம். ஏழு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

நுண்கீரையின் பயன்கள்
நுண்கீரையில் நோயெதிர்ப்பு சக்தி உள்ளது. வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று நோய் உள்ளவர்கள் நுண்கீரையைச் சாப்பிடலாம். ஐந்தாம் வகை நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை நுண்கீரைக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் தான் உண்ண வேண்டும் என்பதில்லை. நல்ல நிலையில் உள்ள எல்லோருமே இதை உண்ணலாம்.
பயன்படுத்தும் முறை
இந்தக் கீரை வகைகளைப் பச்சையாக உண்பதே நல்லது. அல்லது சூப், சாலட், சட்னி போன்று தயாரித்து உண்ணலாம். 15-45 வயதுள்ளோர் தினமும் 30 கிராம் அளவிலும், 45 வயதுக்கு மேலுள்ளோர் தினமும் 15 கிராம் அளவிலும் எடுத்துக் கொள்ளலாம். 5-15 வயதுள்ளோர் வயதுக்கு ஏற்ப உண்ணலாம்.
விழிப்புணர்வு
மிக எளிய முறையில் கிடைக்கும் சத்துமிக்க நுண்கீரை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும். இதில் அரசாங்கத்தின் ஆதரவு முக்கியமானது. முதற்கட்டமாக, அங்கன்வாடி மையங்கள், காலை உணவு மையங்கள், சத்துணவு மையங்கள் போன்றவற்றின் உணவுத் திட்டத்தில் இந்த நுண் கீரையைச் சேர்த்தால், வருங்காலத் தலைமுறையினர் உடல் நலம் மிக்கவர்களாக உருவாவார்கள்.
நன்றியுரைத்தல்
பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, எங்கள் வளர்ச்சிக்கும், இந்த சமூக வளர்ச்சிக்கும் காரணமாக விளங்கும், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் காயத்ரி, விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் வசந்தன் செல்வம் ஆகியோர்க்கு, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன், என் பணியைப் பாராட்டி, விருதுகளை வழங்கி, என்னை ஊக்கப்படுத்திய சமூகப் பொறுப்புள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
மேலும், எங்களிடம் பெற்ற பயிற்சியைப் பயனுள்ள வகையில் செயல்படுத்தி வருவோர்க்கும், எங்களின் அன்பான வாடிக்கையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அலுவலகம்
எங்கள் அலுவலகம், 188 A, அசோக் நகர், (ஆயில் மில் அருகில்) திருவதிகை, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் என்னும் முகவரியில் அமைந்துள்ளது. தொடர்பு எண்கள்: 6374619870, 80563 55857. எங்களைத் தொடர்பு கொள்ள நேரிலும் வரலாம் அல்லது இந்த எண்களிலும் அழைக்கலாம்’’ என்றார்.

முனைவர் கு.காயத்ரி,
உதவிப் பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை, காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் – 607 102. முனைவர் ர.உமாராணி, இயக்குநர், விதை மையம். முனைவர் சி.வனிதா, இணைப் பேராசிரியர், விதை நுட்பம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003. முனைவர் க.நடராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், விருத்தாசலம் – 606 001.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

