பருவநிலை மாற்றம், புதிய நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால், பயிர் மகசூல் குறைந்து பொருளாதாரச் சரிவு ஏற்படுகிறது. உற்பத்தியின் போது தோன்றும் நோய்க் காரணிகள், மண், விதை மற்றும் காற்று மூலம் பரவி, அந்த நிலத்திலேயே தங்கி விடும். மேலும், இதே நோய்க் காரணிகள் நிலத்திலிருந்து சேமிப்புக் கிடங்குக்கும் பரவி, விளை பொருள்களைத் தாக்கி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களைத் தாக்கும் நோய்களையும் (Banana Harvest) அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் இங்கே பார்க்கலாம்.
Banana Harvest | வாழைத்தார்களைத் தாக்கும் நோய்கள்
ஆகவே, இந்தியாவின் வேளாண் பொருள்களின் தரம் மற்றும் பொருளாதாரம் மேம்பட வேண்டுமெனில், சாகுபடியின் போதும், விளை பொருள்கள் சேமிப்பின் போதும், தகுந்த வேளாண் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வகையில், அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களைத் தாக்கும் நோய்களையும் (Banana Harvest) அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் இங்கே பார்க்கலாம்.
ஆந்தராக்னோஸ் (கொலட்டோட்ரிக்மம் அல்லது கிளோயோஸ்போரியம்)
அறிகுறிகள்: சிறிய, கருப்பு நிற வட்டப் புள்ளிகள் தோலில் தோன்றி, ஒன்று சேர்ந்து பெரிய புள்ளிகளாக மாறும். பிறகு, இந்தப் புள்ளிகளில் ஆழ்ந்த அரக்கு நிறத்தில் பூசணம் தோன்றும். இதனால், பழம் மென்மையாக மாறி விடும். காற்று மூலம் பரவும் இந்தப் பூசணம், வாழைத்தாரை அறுவடை செய்வதற்கு முன்பு அல்லது பின்பு, சிறிய புண்ணைப் போலத் தோலில் பரவும். மேலும், செயலற்ற நிலையில் தொடர்ந்து உருவாகும்.
கட்டுப்பாடு: அறுவடை செய்த வாழைத்தார்களை, 400 பிபிஎம் கார்பன்டாசிம் அல்லது 1,000 பிபிஎம் பெனோமில் கரைசலில் நேர்த்தி செய்ய வேண்டும்.
வாழைக்காம்பு அழுகல் நோய் (போட்ரியோடிப்ளாய்டியா தியோப்ரோமே)
அறிகுறிகள்: பூத்தார்த் தண்டுகள் கருப்பு நிறமாக மாறும். பழத்தைத் தாங்கும் கைப்பிடித் திறனை இழந்து விடும். இந்தப் பூசணம் காற்று வழியாகப் பரவும். பழத்தின் முனை கருப்பாகவும், பூசணம் படர்ந்தும் காணப்படும். காற்று மற்றும் மழைக்காலத்தில் குலையில் உள்ள விரல்களில் புள்ளிகள் தோன்றும்.
கட்டுப்பாடு: நிலத்தில் கிடக்கும் காய்ந்த இலைச்சருகுகளை அடிக்கடி சுத்தம் செய்தால் முடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். சேமிப்புக் கிடங்கைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், முடி அழுகல் பூசண வித்துகளைக் குறைக்கலாம். (Banana Harvest) சேமித்து வைக்கும் பழங்களின் அருகில் அழுகிய பழங்களையோ அல்லது செடியின் கழிவுப் பொருள்களையோ வைக்கக் கூடாது. தாரிலிருந்து வரும் தாவரப்பாலை, சுத்தமான நீரில் நன்கு கழுவ வேண்டும். கழுவிய பிறகு அந்த நீரை உடனே அகற்றி விட வேண்டும்,
சுருட்டு வகை முனை அழுகல் (வெர்ட்டிசீலியம் தியோப்ரோமா)
அறிகுறிகள்: இந்த நோய் முதிராத பழத்தின் நுனியில் தோன்றி, மேல்நோக்கிப் பரவும். அழுகிய பகுதியில் சாம்பல் நிறப் பூசணம் மற்றும் பூசண வித்துகள் காணப்படும். எரிந்த சாம்பல் போன்ற நுனியும், அடர் நிற விளிம்பும் காணப்படும். பழத்தின் முன் பகுதி அழுகி விடும். ஆனால், உட்புறத் திசுக்கள் உலர் அழுகல் நோயை உருவாக்கும்.
கட்டுப்பாடு: இறந்த பூவின் பகுதிகள் மற்றும் நோயுற்ற பழங்களைச் சேகரித்து எரித்து விட வேண்டும். நோயுற்ற பழங்களில் உள்ள பூசண வித்துகள், நல்ல பழங்களுக்கும் பரவுவதால், கெட்டுப் போன பழங்களை உடனடியாக அகற்றிவிட வேண்டும். காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதவீதக் கரைசலில், லிட்டருக்கு 0.5-1.0 மி.லி. வீதம் ஈரமாக்கும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். கார்பன்டாசிம் 0.1 சதம் அல்லது 0.1 சதவீத டைத்தேன் எம் 45 கரைசலை மஞ்சரிக் காம்புகளில் தெளிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வாழை சாகுபடி வழிகாட்டி

முனைவர் த.துர்காதேவி,
கு.பிராபகர், பயிர் நோயியல் துறை, வானவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம், மணக்கடவு, பொள்ளாச்சி – 642 103.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

