பயிர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, இயந்திரம் மூலம் ஒரே தடவையில் அறுவடை செய்து விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதே அடர் நடவு பருத்தி சாகுபடியின் நோக்கமாகும்.
பயன்கள்
இம்முறையில், செடிக்குச் செடி இடைவெளியை 30 செ.மீ.லிருந்து 10 ஆகக் குறைக்கப்படும்.
வரிசைக்கு வரிசை 90/75/60 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி விடப்படும்.
இதன் மூலம், ஒரு ஏக்கரின் பயிர் எண்ணிக்கையை 44,400 முதல் 66,400 ஆகக் கூட்டலாம்.
இதனால், 20 முதல் 40 சதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.
இரகங்கள்
அஞ்சலி, சூரஜ், கோ.17, வி.பி.டி.2. ஆகிய இரகங்கள், அடர் நடவு பருத்தி சாகுபடிக்கு ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
பார் சால் முறை அல்லது உயர் படுக்கை முறையில் நிலத்தைத் தயாரிக்க வேண்டும்.
அடுத்து, வளமற்ற மற்றும் மண்ணின் ஆழம் குறைவான நிலத்தில், 60×10 செ.மீ. இடைவெளியைக் கையாள வேண்டும்.
நடுத்த வளம் மற்றும் மத்திய மண் கண்டம் உள்ள நிலத்தில், 75×10 செ.மீ. இடைவெளியைக் கையாள வேண்டும்.
அதிக வளம் மற்றும் மண் கண்டம் ஆழமாக உள்ள நிலத்தில், 90×10 செ.மீ. இடைவெளியைக் கையாள வேண்டும்.
உர நிர்வாகம்
ஏக்கருக்கு, 30:15:15 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும்.
இந்த உரங்களில், பாதியளவு தழைச்சத்தையும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும்.
மீதமுள்ள பாதியளவு மணிச்சத்தை நடவு முடிந்து 40-45 நாளில் மேலுரமாக இட வேண்டும்.
காய்கள் பருமனாக உருவாக, 2 சதவீத டி.ஏ.பி.கரைசலை, 45 மற்றும் 75 நாட்களில் பயிர்களில் தெளிக்க வேண்டும்.
2 சதவீதக் கரைசல் கரைசல் கிடைக்க, நான்கு கிலோ டி.ஏ.பி. உரத்தை 200 லிட்டர் நீரில் கலக்க வேண்டும்.
நுனிக்கிள்ளுதல்
இரகச் செடிகள் எனில், 75-80 நாளில் செடிகளின் 15-ஆம் கணுவில் தண்டின் நுனியை 10 செ.மீ. அளவில் கிள்ளி விட வேண்டும்.
ஒட்டு இரகச் செடிகள் எனில், 85-90 நாளில் 20-ஆம் கணுவில் தண்டின் நுனியை 10 செ.மீ. அளவில் கிள்ளி விட வேண்டும்.
இதனால் பக்கக் கிளைகளும், அவற்றில் பூக்களும் காய்களும் அதிகமாக உருவாகி, ஒரே தடவையில் அறுவடை ஏதுவாகும்.
அரசின் உதவிகள்
பலன் தரும் பருத்தி சாகுபடி: இந்தத் திட்டத்தின் கீழ், அடர் நடவு பருத்தி சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1,960 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
வேளாண் சுற்றுச்சூழல் சார்ந்த பூச்சி, நோய் மேலாண்மைக்கு, ஏக்கருக்கு 1,680 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த சத்துத் தொகுப்புகள் 50 சதவீத மானியமாக, ஏக்கருக்கு 560 ரூபாய் வழங்கப்படும்.
டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு 50 சதவீத வாடகைக் கட்டணமாக 500 ரூபாய் வழங்கப்படும்.
உணவு மற்றும் சத்துப் பாதுகாப்பு இயக்கம்- பருத்தி: இந்தத் திட்டத்தின் கீழ், பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த முன்னோடி செயல் விளக்கங்களை அமைக்க, ஏக்கருக்கு 3,200 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
பருத்தியில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும் வகையில், முன்னோடி செயல் விளக்கங்களை அமைக்க, ஏக்கருக்கு 3,200 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
அடர் நடவு சாகுபடி குறித்த முன்னோடி செயல் விளக்கங்களை அமைக்க, ஏக்கருக்கு 4,000 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அல்லது ஏக்கருக்கு 200 ரூபாய் வழங்கப்படும்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்- பருத்தி: இந்தத் திட்டத்தின் கீழ், மிக நீண்ட இழைப் பருத்தி மற்றும் இதர பருத்தி இரகங்களில் விதை உற்பத்தியை ஊக்கப்படுத்த, 25 சதவீத மானியம் அல்லது கிலோவுக்கு 70 ரூபாய் வழங்கப்படும்.
மிக நீண்ட இழைப் பருத்தி மற்றும் இதர பருத்தி இரக விதைகள் 50 சதவீத மானியத்தில், அதாவது, அதிகபட்சமாக, கிலோவுக்கு 140 ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
ஏக்கருக்கு 4 கிலோ வீதம் ஊடுபயிருக்கான சான்றளிக்கப்பட்ட பயறு வகைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அல்லது ஏக்கருக்கு 200 ரூபாய் வழங்கப்படும்.
நுனிக்கிள்ளும் ஆள் கூலியாக ஏக்கருக்கு 400 ரூபாய் வழங்கப்படும்.
மேலும் விவரங்களை அறிய, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிப் பயன் பெறலாம்.
வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



