My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி!

சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி! Super Napier fodder grass https://pachaiboomi.net/56465-6/

கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்தால், நிகர வருமானம் அதிகமாகும். அந்த வகையில், சூப்பர் நேப்பியர் புல், குறைந்த செலவிலான சிறந்த பசுந்தீவனமாக இருக்கிறது. இது, கம்புப்பயிர் மற்றும் சாதா நேப்பியர் புல்லிலிருந்து உருவாக்கப்பட்டது.

ஒரு ஏக்கரில் கோ.4, கோ.5 நேப்பியர் புல்லை சாகுபடி செய்து, 6 மாடுகள் மற்றும் 20 ஆடுகளைப் பராமரிக்க முடியுமெனில், சூப்பர் நேப்பியர் புல்லைப் பயிரிட்டு, 15 மாடுகள் மற்றும் 40 ஆடுகளைப் பராமரிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், இது, கோ.4, கோ.5 புல் இரகங்களை விட, இருமடங்குப் புல்லைக் கூடுதலாகத் தரும்.

சூப்பர் நேப்பியர் புல்லின் சிறப்புகள்

சூப்பர் நேப்பியர் புல், ஆசியாவில் உள்ள நேப்பியர் புல் வகைகளில் அதிகமான புரதச் சத்தைக் கொண்டது. அதாவது, இதில் 16-18 சதவீதப் புரதம் உள்ளது. தண்டும் இலையும் மென்மையாக இருக்கும். 400-500 செ.மீ. உயரம் வளரும். ஒரு தூரில் 25-30 சிம்புகள் இருக்கும். சாயாமல் இருக்கும். மகசூலும் 200 டன் கிடைக்கும். அதிக மகசூலைத் தருவதால், தாய்லாந்தில் இந்தப் புல்லை, புற்களின் அரசன் என்று கூறுகிறார்கள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இதில், நீரில் கரையும் கார்போஹைட்ரேட், அதாவது, மாவுச்சத்து 18 சதவீதம் வரை இருப்பதால், இதை ஊறுகாய்புல் வடிவில் பதப்படுத்தி, வறட்சிக்காலத் தீவனமாக, கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.

சூப்பர் நேப்பியர் புல் சாகுபடிக் காலம்

சூப்பர் நேப்பியர் தீவனப் புல்லை எட்டு ஆண்டுகள் வரை, நீண்டகாலப் பயிராக சாகுபடி செய்யலாம். ஆண்டுக்கு எட்டு அறுவடை வீதம் எட்டு ஆண்டுகளில் 64 முறை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 200 டன் தீவனப்புல் கிடைக்கும்.

தாங்கு திறன்

சூப்பர் நேப்பியர் புல், பூச்சி மற்றும் நோயெதிர்ப்புத் திறன் மிக்கது. ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். அனைத்துக் காலநிலைகளில், அனைத்து மண் வகைகளில் மற்றும் நீர் வகைகளிலும் வளரும். குறிப்பாக, உவர் நீரிலும் மகசூல் குறையாத வகையில் வளரும். ஆனால், புரதச்சத்தின் அளவு குறையும்.

நிலம் தயாரித்தல்

இரும்புக் கலப்பையால் 15-30 செ.மீ. ஆழத்தில், இருமுறை உழ வேண்டும். பின்பு, ரோட்டவேட்டர் மூலம் ஒருமுறை உழ வேண்டும். அடுத்து, 90 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.

உர மேலாண்மை

ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் வீதம் எடுத்து, கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 130 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 27 கிலோ பொட்டாஷ் தேவைப்படும். இவற்றில், பாதியளவு யூரியாவையும், சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள பாதி யூரியாவை, நட்ட 30 நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும், ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், பாதியளவான 65 கிலோ யூரியாவை இட்டு வந்தால், புல் மகசூல் கூடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பயிரில்லம், 800 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 1,600 கிராம் அசோபாஸ் உயிர் உரம் வீதம் இட வேண்டும். இதனால், மகசூல் கூடுவதுடன், இரசாயன உரங்களில் 25 சதத்தைக் குறைத்து இடவும் உதவும்.

இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யும் போது தான், சூப்பர் நேப்பியர் புல் நீண்ட காலம் பலன் கொடுக்கும். மேலும், இதன் சிறப்புத் தன்மைகளான அதிக விளைச்சல், அதிகப் புரதம், இனிப்புச்சுவை ஆகியன, இயற்கை விவசாய முறையில் தான் அதிகமாகக் கிடைக்கும்.

நடவு செய்தல்

ஏக்கருக்கு 10,000 முதல் 12,000 இருபருக் கரணைகள் தேவைப்படும். நடவு நிலத்தில் நீரைப் பாய்ச்சி, வரிசைக்கு வரிசை 90 செ.மீ., பயிருக்குப் பயிர் 60 செ.மீ. இடைவெளியில், குத்துக்கு ஒரு கரணை வீதம், 40 பாகையில் சாய்வாக நட வேண்டும். கரணைகள் மண்ணில் நெருக்கமாக இருக்க வேண்டும். இதனால், கரணைகளின் முளைப்புத் திறன் கூடும். கலப்புப் பயிராக மூன்று வரிசைக்கு ஒரு வரிசையில் வேலிமசாலைப் பயிரிட்டால், பசுந்தீவனச் சத்துகள் அதிகமாகக் கிடைக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

களை மேலாண்மை

நடவு முடிந்து 30 நாள் கழித்து, ஆட்களை வைத்துக் களைகளை அகற்ற வேண்டும். தேவைப்பட்டால் 45 நாளில் இரண்டாம் களையெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, மிக வேகமாகவும் அடர்த்தியாகவும் புல் வளர்வதால், களைகள் அதிகமாக வளராது. நட்டு 80 நாட்களில் முதல் அறுவடையைச் செய்து விட்டு, தேவைப்பட்டால் ஒருமுறை களை எடுக்கலாம். அதன் பிறகு, களையெடுக்க வேண்டிய அவசியம் பெரும்பாலும் இருக்காது.

பாசன மேலாண்மை

கரணைகளை நட்ட மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். பிறகு, மண்ணின் தன்மை மற்றும் பெய்யும் மழையைப் பொறுத்து, 8-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். கழிவு நீரையும் பாசனநீராகப் பயன்படுத்தலாம். சூப்பர் நேப்பியர் புல், அனைத்து வகை நீரிலும் நன்கு வளர்கிறது. உவர் நீரிலும் கூட மகசூல் குறையாமல் விளைகிறது. நன்னீர் வசதியுள்ள நிலத்தில் புல் மகசூல் மிகச் சிறப்பாக இருக்கும்.

மண் அணைத்தல்

முப்பது நாளில் முதல் களை எடுத்த பிறகு அல்லது 45 நாளில் இரண்டாம் களை எடுத்த பிறகு, தேவையான உரங்களை இட்டு, மண் அணைக்க வேண்டும். பிறகு, மூன்று அறுவடைக்கு ஒருமுறை மண் அணைக்க வேண்டும்.

நோய் மேலாண்மை்

சூப்பர் நேப்பியர் தீவனப்புல்லை பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே, பயிர்ப் பாதுகாப்புத் தேவைப்படாது. மிக அரிதாக நோய் ஏற்படும் நிலையில், இரசாயன மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அவற்றின் நஞ்சு, தீவனப் பயிரில் கலந்து விடும். அந்தப் புல்லை உண்ணும் கால்நடைகள் இறக்க நேரிடும். எனவே, இதற்கு மாற்று, இயற்கை முறை நோய்த் தடுப்பான்கள் தான்.

இயற்கைப் பூச்சி விரட்டிகள், இயற்கை நோய்த் தடுப்பான்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கைப் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். அவற்றை, அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பே தெளித்து விட வேண்டும். இல்லையேல், அவற்றின் எச்சங்கள் தீவனப் பயிரின் மேற்பரப்பில் படிந்திருப்பதால், அந்தப் புல்லைக் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை.

அறுவடை

நடவு செய்து 75-80 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். மண் நீர் மற்றும் விவசாய முறையைப் பொறுத்து, முதல் அறுவடைக் காலம் 10 நாட்கள் கூடலாம் அல்லது குறையலாம். பிறகு, 45 நாட்களுக்கு ஒரு அறுவடை என, ஆண்டுக்கு எட்டு முறை அறுவடை செய்யலாம். முடிந்த வரை தீவனப் புல்லை அதன் அடியொட்டி அறுக்க வேண்டும். அப்போது தான் புல் மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.


சூப்பர் நேப்பியர் புல் சாகுபடி! RENGASAMY 1 https://pachaiboomi.net/56465-6/

சி.ரா.ஸ்ரீரங்கசாமி,

தீவனப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர். வே.இராஜன்பாபு, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!