கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். பரந்து விரிந்த சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எல்லை பெரியது என்பதால், அலுவலகத்தில் எப்போதும் மக்கள் கூட்டமும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் தான், நண்பர் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகச் செல்வதாகவும், இயற்கை எழில் கொஞ்சும் வகையில், எவ்வளவு வெய்யில் அடித்தாலும் தெரியாத அளவில் மரங்களும், குளிர்ச்சியும் நிரம்பிய பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நமது பச்சை பூமிக்கு மிகச் சிறந்த செய்தியாக அமையும் என்று கூற, நாமும் அவருடன் சென்றோம்.
பொள்ளாச்சியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் சாலையின் வலப்புறம் அமைந்துள்ளது இந்த அலுவலகம். பெரிய விளையாட்டு மைதானத்தில் ஆங்காங்கே மரங்களாக இருக்க, மேலும் பல மரங்களையும் நட்டு அவற்றுக்கு ஆளுயர வேலியை அமைத்து வைத்திருந்தனர். அந்த மைதானத்தில் வலப்புறம் பெரியளவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் வாகனங்களை இயக்கிக் காட்ட, தனித்தனியாக சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வாகனங்களை இயக்கிப் பழகிப் பார்க்கவும் தனியாக சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த சிமெண்ட் சாலைகளின் இருபுறமும் இருக்கும் வேம்பு, புங்கை போன்ற மரங்களின் அடர்த்தியால், அந்த நண்பகல் நேரத்திலும் வெய்யில் தெரியவில்லை. சிமெண்ட் சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கைகளில் வாகன ஓட்டிகள், வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அந்தக் குளிர்ச்சியை அனுபவித்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்படியே நாம் அந்த மைதானத்தைக் கடந்து அலுவலகம் நோக்கிச் சென்றோம். புதிய வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என, மைதானத்தில் ஆங்காங்கே நிரம்பியிருக்க, அலுவலகம் பரபரப்பாக இருந்தது. நேரம் நண்பகலைக் கடந்து கொண்டிருக்க, அங்கு மட்டும் அக்கினி வெய்யிலின் உக்கிரத் தாக்கம் அவ்வளவாக இல்லை. மரங்கள் செய்யும் மந்திரத்தால் வெப்பக் காற்று குளிர்ந்த காற்றாக மாறி அங்கிருந்த அனைவரையும் வருடிச் சென்றது.
இந்நிலையில், நம்முடன் வந்திருந்த நண்பர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வேலைகளில் இறங்க, நாம் அலுவலகத்தைப் சுற்றிப் பார்வையிட்டோம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக சிமெண்ட் சாலைகளில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, மைதானத்தில் வாகனப் புதுப்பித்தலுக்கான சரிபார்ப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் புதிய வாகனங்களைப் பதிவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்க, நாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரைக் காண அலுவலகம் சென்றோம்.
அங்கு அவர் துறை சார்ந்த கூட்டத்தில் இருப்பதாகவும், சற்று நேரம் நம்மைக் காத்திருக்கும் படியும் அவரது உதவியாளர் கூற, நாம் அந்த அலுவலக அறையின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தைப் பார்வையிட்டோம். சுற்றிலும் கம்பி வேலி இருக்க, பச்சைப் பசேலெனப் படர்ந்து கிடந்த புல்வெளிக்கு மத்தியில் ஆங்காங்கே வளர்ந்திருந்த பூச்செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அத்துடன் அந்தச் செடிகளுக்குத் தேவையான நீரை, தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகள் சுற்றிச் சுற்றித் தெளித்துக் கொண்டிருந்தன.
மேலும், அழகான மரங்களும், செடிகளும், கொடிகளும் இருந்தன. சில ஆண்டுகளே ஆன சந்தன மரம் ஒன்று அழகாக நீண்டு வளர்ந்திருந்தது. பார்க்கவும், இரசிக்கவும், மயங்கவும், மகிழவும் ஏற்ற அந்த இடம், ஓர் இயற்கை ஓவியனின் கை வண்ணம், கலை வண்ணம் உயிர் பெற்றுக் காட்சியளிப்பதைப் போலிருந்தது.
சற்று நேரக் காத்திருப்புக்குப் பிறகு, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உதவியாளர் நம்மை அழைத்து, சார் அழைக்கிறார் என்று கூற உள்ளே சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் தன்னை, பொ.முருகானந்தம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நம் இதழைப் பார்த்து வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
அப்போது அவரிடம், இந்த அலுவலகத்தின் சூழலைச் செய்தியாக பதிவு செய்ய விரும்புவதாகக் கூறினோம். உடனே அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அவர், நம்மை வெளியே அழைத்து வந்து அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினார். முதலில் அவரது அலுவலகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தின் உள்ளே சென்று அதைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.
“நான் இங்கே வட்டாரப் போக்குவரத்து அலுவலராக வந்த பிறகு தான் இந்தத் தோட்டத்தை அமைத்தோம். இதை அமைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். இங்குள்ள டிராக்டர் டிரெய்லர் கம்பெனி, பி.ஏ. கல்லூரி நிர்வாகத்தினர், இந்தத் தோட்டம் ஆடு மாடுகள் தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக, தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்துக் கொடுத்தனர். அதன் பிறகு, இங்குள்ள மரம் செடி, கொடிகளின் நீருக்காக, தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகளை அமைத்தோம்.
தோட்டத்தை அமைத்து நீரை விட்டதும் களைகள் நிறைய வர ஆரம்பித்தன. அப்போது இங்கே ஆழியாரில் உள்ள அறிவுத் திருக்கோயில் நிர்வாகத்தினர், சுமார் ஆறு மாதக் காலம் இந்தத் தோட்டத்தைப் பராமரித்துக் கொடுத்தனர். மேலும், பொள்ளாச்சியில் உள்ள சுழற் சங்கம், மற்றும் அரிமா சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்த இனிய இயற்கைச் சூழலை அமைக்கத் தொடங்கிய நிலையில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
அதன் பிறகு நாங்களே பராமரிக்க ஆரம்பித்து விட்டோம்’’ என்றவர், அங்கே நீண்டு வளர்ந்திருந்த சந்தன மரத்தைக் காட்டி, “இந்த மரம் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாகன ஆய்வாளராகப் பணியாற்றிய போது வைத்தது. இதைப்போல, அப்போது நட்டு வளர்த்த மரங்கள் தான் தற்போது நிழல் தரும் மரங்களாக வளர்ந்து இருக்கின்றன’’ என்றார்.
அதைத் தொடர்ந்து விபத்துக் காரணமாக வந்திருந்த வாகனத்தைப் பார்த்து விட்டு, காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, அங்கே ஓட்டுநர் உரிமம் பெற வந்திருந்தவர்களிடம், வாகனத்தை மிதமான வேகத்தில் இயக்குதல், தலைக்கவசம் அணிதல், இருசக்கர வாகனத்தின் பின்னால் உள்ளவர்களும் தலைக்கவசம் அணிதல், தேவையில்லாமல் முந்திச் செல்வதைத் தவிர்த்தல், இரவு நேரங்களில் சாலைகளில் கவனமாகச் செல்லுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாமல் இருத்தல் ஆகியவற்றை விளக்கிச் சொல்லி, ஒரு உயிர் போனால் அந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பது வரை விளக்கினார்.
அதன் பிறகு, அங்கிருந்த சிமெண்ட் சாலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்றார். அந்தச் சாலைகளின் நடுவில் நடந்து செல்லும் போது, அடர்ந்த வனத்தில் செல்வதைப் போன்ற உணர்வு நமக்கு. அந்தளவில் சாலைகளின் இருபுறமும் மரங்கள். அப்போது தொடர்ந்த அவர், “இங்கே வேம்பு, புங்கை, சந்தன மரம் என நிழல் மரங்கள், மா, கொய்யா எனப் பழ மரங்கள், கறிவேப்பிலை, கருந்துளசி போன்ற மூலிகைச் செடிகள், பூச்செடிகள், அழகுத் தாவரங்கள் என, சுமார் 300 க்கும் மேற்பட்ட தாவரங்களை வைத்துள்ளோம்.
எங்கள் அலுவலக ஊழியர்கள் அவரவர் பிறந்தநாளின் போது மரங்களை நட்டு அவற்றை அவர்களே பராமரித்து வருகிறார்கள். மேலும், முக்கியப் பிரமுகர்களின் வருகையின் போதும், அவர்களின் வருகையின் நினைவாக மரங்களைத் தான் நட்டு வளர்க்கிறோம். பெரும்பாலும் ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும் மரங்களைத் தான் வளர்த்து வருகிறோம். அதனால் தான் எவ்வளவு வெய்யில் இருந்தாலும், அந்த வெய்யிலின் தாக்கம் இங்கே அவ்வளவாக இருப்பதில்லை. குளிர்ச்சியான சூழல் மட்டுமே இங்கே இருக்கும்.
மேலும், இது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என்பதால், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனங்களைப் புதுப்பித்தல் என, தினமும் பலநூறு வாகனங்கள் வரும். அதனால் அந்த வாகனங்கள் வெளிவிடும் புகையால் மாசு ஏற்படும். ஆனால், இங்கே இருக்கும் எண்ணற்ற மரம், செடி, கொடிகளைப் போன்ற தாவரங்கள், அந்தப் புகை மாசு தாக்காத வகையில், சுகமான சூழலை இங்கே உருவாக்கித் தருகின்றன.
தினமும் மாலை நான்கு மணி ஆனவுடன் பொது மக்கள் நடைப் பயிற்சிக்காக இங்கே வருவார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் சைக்கிளில் வருவார்கள். இங்கே நடைப்பயிற்சி, சிமெண்ட் சாலைகளில் சாலை விதிமுறைகளின்படி சைக்கிள் ஓட்டுதல், அருகிலுள்ள சிமெண்ட் சாலையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி என, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூடியிருப்பார்கள். அதற்கு இந்த அலுவலகத்தின் சுற்றுச்சூழல் தான் காரணம்’’ என்றவர்,
அங்கிருந்த மரங்களுக்கு நீர் விடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர்ப் பாசன முறையைக் காட்டி, “உலகம் முழுவதும் நீர்வளம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு துளி நீரும் மதிப்பு மிக்கது. இதை எல்லோரும் மனதில் கொண்டு நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் தான் இங்குள்ள மரங்களுக்கு வேண்டிய நீரைச் சொட்டுநீர்ப் பாசன முறையில் தருகிறோம்’’ என்றார்.
அப்போது பள்ளி வாகனங்கள் புதுப்பித்தலுக்காக அவரது உதவியாளர் அழைக்க, அங்கிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களைப் பார்வையிட்டு, உள்ளே சென்று பாதுகாப்பு நடைமுறைகளைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்களையும் ஆலோசனைகளையும் கூறினார்.
அதன் பிறகு மீண்டும் சிமெண்ட் சாலைக்கு வந்தவர், “இங்கே மரங்கள் அதிகமாக இருப்பதால், பறவைகளின் வருகையும் அதிகமாக இருக்கிறது. அதனால், அலுவலகத்தின் மேல் பகுதியில் அந்தப் பறவைகளுக்காக நீர்த் தொட்டிகளை அமைத்துள்ளோம். அந்தத் தொட்டிகளில் தினமும் நீரை நிரப்பி வைப்போம். அலுவலக ஊழியர்கள் அனைவரும் மதியம் சாப்பிடும் போது, இங்கே வரும் பறவைகளுக்கும் கொஞ்சம் உணவை வைத்து விட்டுத் தான் சாப்பிடுவார்கள். முதலில் நான் செய்வதைப் பார்த்த அலுவலக ஊழியர்கள், என்னைப் போலப் பறவைகளுக்கு உணவை இடும் பழக்கத்தைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்’’ என்றார்.
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளைச் சந்திக்க வரும் பொதுமக்கள், நிற்கக்கூட நிழல் இல்லாமல் இருக்கும் பல அலுவலகங்களுக்கு மத்தியில், இந்த அலுவலகம் இயற்கையின் இனிய சூழலில் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது. இங்கே வரும் மக்கள் அனைவரும் ஏதோ புதிய உலகத்தில் இருப்பதைப் போல உணர்கிறார்கள்.
அரசு அலுவலகங்கள் அனைத்தும் இதைப் போல இருந்தால் அங்கே வரும் மக்களுக்கும், பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அது வரமாக அமையும். வகை வகையான பறவைகளின் வாழ்விடமாக அமையும். இன்னும் எண்ணில்லா உயிர்களின் உறைவிடமாக அமையும்.
இதற்கு எடுத்துக்காட்டாக, மரங்களை வளர்த்துச் சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதோடு, அங்கே முகாமிடும் பறவைகளுக்கும் உணவும் நீரும் அளித்து, நேய உணர்வுடன் பணியாற்றி வரும் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொ.முருகானந்தம் அவர்களுக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.
-மு.உமாபதி
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.





