தமிழ்நாடு அரசு, மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்கி, பால் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் உயர உதவி வருகிறது. அவ்வகையில், நாமக்கல் மாவட்டப் பாலுற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் நாமக்கல் மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 17.12.2018 அன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி, மின்துறை அமைச்சர் எம்.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 17,620 பாலுற்பத்தியாளர்கள் தினமும் 1,70,000 லிட்டர் பாலை 492 பாலுற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ஆவினுக்கு வழங்கி வருகின்றனர். இந்தப் பாலில் ஒரு இலட்சம் லிட்டர் பால் நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர்ப் பகுதிகளில் உள்ள 50,000 லிட்டர் பால் குளிரூட்டும் நிலையங்களில் குளிரூட்டப்படுகிறது. மேலும், பத்துத் தொகுப்புப் பால் குளிர்விப்பான்களில் 30,000 லிட்டர் பால் குளிரூட்டப்படுகிறது. மீதமுள்ள பால் சேலம் மாவட்டப் பாலுற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 65,000 லிட்டர் பால், இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பால் பொருள்கள், 336 முகவர்கள், 66 தனியார் பாலகங்கள், 4 ஆவின் பாலகங்களில் விற்பனையாகின்றன. பாலுற்பத்தியாளர்களுக்கு, பாலின் தரத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்படுகிறது. மேலும், அவர்களின் கறவை மாடுகளுக்குத் தேவையான கால்நடை மருத்துவ வசதிகள், மானிய விலையில் தீவனம், தாதுப்புக் கலவை ஆகியன வழங்கப்படுகின்றன.
இதுவரை சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும், நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் கிடைக்கும் வகையில், நாமக்கல் சேலம் சாலையில் அதிநவீன விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாகச் சேலம், பெங்களூருக்குச் செல்லும் பயணிகள் வாகனங்களை நிறுத்தி, தேவையானவற்றை வாங்கும் வகையில் ஆவின் விற்பனை நிலையம் அனைத்து வசதிகளுடன் உள்ளது. இந்த நிலையத்தில், குழந்தைகள் முதல் முதியோர் வரையுள்ள அனைவரும், சுவையான பால் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை விரும்பிச் சுவைக்கின்றனர்.
இதுகுறித்து ஆவின் முகவர் கி.ஜெயக்குமார் கூறியதாவது: “கடந்த 20 ஆண்டுகளாக ஆவின் பால் முகவராக உள்ளேன். முதலில் தினமும் 30 லிட்டர் பாலை மட்டுமே விற்று வந்தேன். ஆனால், இப்போது பாலின் தரம் மற்றும் மக்களின் ஆதரவால் தினமும் 900 லிட்டர் பாலை விற்கிறேன். தற்போது மக்கள், பாலையும் ஆவினின் தயிர், மோர், நெய், இனிப்புகளையும் வாங்கிச் செல்கின்றனர். தற்போது நாமக்கல் மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் வந்துள்ளதால், ஆவின் பொருள்கள் கூடுதலாக விற்கும். இதற்காகத் அரசுக்கும் நமது முதலமைச்சர் அவர்களுக்கும் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்’’ என்றார்.
பாலுற்பத்தியாளர் காடச்சநல்லூர் செ.சரஸ்வதி கூறியதாவது: “எங்களிடம் 4 கறவை மாடுகள் உள்ளன. தினமும் கறக்கும் 15 லிட்டர் பாலை, காடச்சநல்லூர் பாலுற்பத்தியாளர்கள் சங்கத்தில் விற்கிறோம். இதனால், தினமும் 450 ரூபாய் கிடைக்கிறது. இந்தப் பணம் எங்கள் செலவுக்கும் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவும் உதவியது. தற்போது நாமக்கல்லுக்கு ஆவின் ஒன்றியம் வந்துள்ளதால், எங்கள் பொருளாதார நிலை இன்னும் உயரும்’’ என்றார்.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

